
வங்கதேசத்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் விளையாடி வரும் இந்தியா முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 2 – 1 (3) என்ற கணக்கில் இழந்தாலும் அடுத்ததாக நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் 188 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஒருநாள் தொடரில் அடுத்தடுத்த அதிர்ச்சி தோல்விகளை சந்தித்தாலும் டெஸ்ட் தொடர் இந்தியாவுக்கு மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் வரும் 2023 ஜூன் மாதம் லண்டன் ஓவலில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் விளையாடுவதற்கு 2 – 0 (2) என்ற கணக்கில் இத்தொடரை கைப்பற்ற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியுள்ள இந்தியா முதல் போட்டியில் வென்று அசத்தியுள்ளது.
அதனால் முதல் போட்டிக்கு முன்பாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 4வது இடத்திலிருந்த இந்தியா தென்னாப்பிரிக்காவை முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா வீழ்த்திய உதவியுடன் நேரடியாக 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதன் காரணமாக இந்தியா ஃபைனலுக்கு தகுதி பெறுவது உறுதியாகியுள்ள நிலையில் முதல் போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா காயத்தால் களமிறங்கவில்லை. ஆனால் அவர் இல்லாமலேயே 5 நாட்களிலும் கடுமையான சவாலை கொடுத்த வங்கதேசத்தை முக்கிய நேரங்களில் சிறப்பாக செயல்பட்டு வீழ்த்திய இந்திய அணியினர் பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தனர்.
மீண்டும் விலகல்:
குறிப்பாக காயமடைந்த கேப்டன் ரோகித் சர்மாவுக்கு பதில் வாய்ப்பு பெற்ற இளம் வீரர் சுப்மன் கில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய முதல் சதமடித்து இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார். அந்த நிலையில் வங்கதேசத்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் கையில் சந்தித்த காயத்துடன் வெற்றிக்கு போராடிய ரோகித் சர்மா முதல் டெஸ்டில் விலகினார். இருப்பினும் அவரது காயம் லேசாக இருந்த காரணத்தால் 2வது போட்டிக்கு முன்பாக குணமடைந்து வந்து விடுவார் என்ற செய்திகள் கடந்த சில நாட்களாகவே வெளிவந்தன.
இந்நிலையில் காயம் முழுமையாக குணமடையாத காரணத்தால் 2வது போட்டியிலிருந்தும் ரோகித் சர்மா விலகுவதாக பிரபல க்ரிக்பஸ் இணையத்தில் அதிகாரப்பூர்வ செய்தி வெளியாகியுள்ளது. பொதுவாகவே பேட்ஸ்மேன்கள் கையில் காயத்தை சந்தித்தால் அடுத்த 10 நாட்களுக்கு பேட்டை முழுமையாக பிடிப்பதில் சிக்கல் ஏற்படும். அதனால் முழுமையாக குணமடையாமல் பும்ரா, தீபக் சஹர் போன்ற வீரர்களை போல அவசரமாக களமிறங்கி மீண்டும் காயத்தை சந்திப்பதற்கு பதிலாக பேசாமல் வீட்டிலேயே அமர்ந்து ஓய்வெடுக்குமாறு ரோகித் சர்மாவுக்கு முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா ஆலோசனை வழங்கியிருந்தார்.
அந்த வகையில் 2வது போட்டியில் பேட்டிங் செய்ய முடியும் என்றாலும் 5 நாட்களும் ஃபீல்டிங் செய்வது ரோகித் சர்மாவுக்கு மிகப்பெரிய சவாலாக அமையும். அதனால் மீண்டும் காயமடைவதற்கு அதிக வாய்ப்புகள் ஏற்படும் என்ற மருத்துவ குழுவின் ஆலோசனையை ஏற்ற பிசிசிஐ மற்றும் அணி நிர்வாகம் அவருக்கு 2வது போட்டியில் ஓய்வு கொடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஏனெனில் ஏற்கனவே இந்தியா முதல் போட்டியில் வென்று முன்னிலை வகிக்கும் இத்தொடரில் ரிஸ்க் எடுத்து 2வது போட்டியில் விளையாடி மீண்டும் பெரிய காயத்தை சந்தித்தால் அடுத்ததாக சொந்த மண்ணில் நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் – கவாஸ்கர் கோப்பை போன்ற முக்கிய தொடரில் களமிறங்க முடியாத நிலைமை ரோகித் சர்மாவுக்கு ஏற்படும்.
எனவே அந்த ரிஸ்க் எடுக்க விரும்பாத பிசிசிஐ அடுத்ததாக வரும் ஜனவரியில் இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் துவங்கும் வெள்ளைப் பந்து கிரிக்கெட் தொடரிலிருந்து ரோகித் சர்மா விளையாடுவதற்கு அனுமதி கொடுத்துள்ளது. அதன் காரணமாக 2வது போட்டியில் மீண்டும் கேஎல் ராகுல் இந்தியாவை வழி நடத்துவார் என்றும் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிய வருகிறது.
இதையும் படிங்க: இப்படி ஒரு மோசமான பிட்சை நான் பார்த்ததே இல்ல. ஆஸ்திரேலிய ஆடுகளைத்த விமர்சித்த – தெ.ஆ கேப்டன்
சொல்லப்போனால் சமீப காலங்களில் சுமாராக செயல்பட்டு வரும் ரோகித் சர்மா 2வது போட்டியில் விளையாடவே வேண்டாம் என்று நிறைய இந்திய ரசிகர்கள் சமூகவலைதளங்களில் பேசி வருகிறார்கள். தற்போது அவர்களது விருப்பப்படி சுப்மன் கில் மீண்டும் 2வது போட்டியில் விளையாடுவார் என்று உறுதியாக நம்பலாம்.