IND vs ENG 5வது டெஸ்ட் : விலகிய ரோஹித் சர்மா – பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு, 35 வருடத்துக்கு பின் கேப்டனாகும் நட்சத்திர வீரர்

- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா பங்கேற்கும் 5-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காம் நகரில் இருக்கும் எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் ஜூலை 1ஆம் தேதி இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கு துவங்க உள்ளது. கடந்த வருடம் உலகின் நம்பர்-1 டெஸ்ட் அணியாக இங்கிலாந்துக்குச் சென்ற விராட் கோலி தலைமையிலான இந்தியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்ற முதல் 4 போட்டிகளின் முடிவில் ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்தை மண்ணை கவ்வ வைத்து 2 – 1* என்ற கணக்கில் முன்னிலை பெற்று அசத்தியது.

ஆனால் மான்செஸ்டரில் துவங்குவதாக இருந்த கடைசி போட்டிக்கு முன்பாக ஏற்பட்ட கரோனா பரவல் காரணமாக திடீரென்று ரத்து செய்யப்பட்ட 5-வது போட்டி தற்போது நடைபெற உள்ளது. இருப்பினும் கடந்த முறை ஜோ ரூட் தலைமையில் தடுமாறிய இங்கிலாந்து இம்முறை புதிய கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் முரட்டுத்தனமான வெற்றிகளை குவித்து துவங்கி வலுவாக மாறியுள்ளது. எனவே கடந்த முறை போலல்லாமல் 2 – 2 என தொடரை சமன் செய்வதற்காக இப்போட்டியில் வெல்ல தங்களது அணி போராடும் என்று ஏற்கனவே பென் ஸ்டோக்ஸ் எச்சரித்துள்ளார்.

- Advertisement -

தனிமையில் ரோஹித்:
மறுபுறம் இந்திய தரப்பில் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற ரோகித் சர்மா இதுநாள் வரை இலங்கை போன்ற கத்துக்குட்டிகளுக்கு எதிராக சொந்த மண்ணில் மட்டுமே வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்து வந்த நிலையில் இப்போட்டியின் வாயிலாக முதல் முறையாக இந்தியாவை வெளிநாட்டு மண்ணில் வழிநடத்த காத்திருந்தார். அதனால் ஏற்கனவே விராட் கோலி முன்னின்று பெற்றுக் கொடுத்த வெற்றியை இப்போட்டியில் பினிஷிங் செய்து 2007க்கு பின் 15 வருடங்கள் கழித்து இங்கிலாந்து மண்ணில் கோப்பையை வென்று இந்தியாவுக்கு சரித்திர வெற்றியைப் பெற்றுக் கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

அதற்காக ஒரு வாரம் முன்பே அவரது தலைமையில் இங்கிலாந்து பறந்த இந்திய அணியினர் ஜூன் 23இல் துவங்கிய லீசெஸ்டர்ஷைர் கவுண்டி அணிக்கு எதிரான 4 நாட்கள் பயிற்சி போட்டியில் பங்கேற்றது. டிராவில் முடிந்த அப்போட்டியில் களமிறங்கிய ரோஹித் சர்மா முதல் இன்னிங்சில் 25 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 2-வது இன்னிங்சில் களமிறங்கவில்லை. அப்போட்டியின் போது ஏற்பட்ட காயம்தான் அதற்கான காரணம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கரோனாவால் பாதிக்கப்பட்ட அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்று பிசிசிஐ அறிவித்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

- Advertisement -

பும்ரா கேப்டன்:
அதனால் ஆரம்பமே இந்தியாவுக்கு பின்னடைவாக அமைந்த நிலையில் கடந்த 2 – 3 நாட்களாக தனிமைப் படுத்திக் கொண்டிருந்த அவருக்கு இடையிடையே சோதனைகள் நடத்தப்பட்டது. ஒருவேளை அவர் கேப்டனாக செயல்படாமல் போனால் ரிஷப் பண்ட் அல்லது ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் கேப்டனாக செயல்படுவார்கள் என்றும் செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன. இருப்பினும் அதை நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் மறுத்த பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ரோகித் சர்மாவுக்கு இறுதி பரிசோதனை செய்தபின் அதிகாரப்பூர்வமான செய்திகள் வெளிவரும் என்று தெரிவித்தார்.

அந்த நிலைமையில் இன்று மாலை நிகழ்த்தப்பட்ட இறுதிக்கட்ட சோதனையில் ரோகித் சர்மா குணமடையாத காரணத்தால் இப்போட்டியில் இருந்து விலகுவதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் ஏற்கனவே வந்து கொண்டிருந்த செய்திகள் உண்மையாக்கும் வகையில் இப்போட்டிக்கு நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கேப்டனாக செயல்படுவார் என்றும் பிசிசிஐ அறிவித்துள்ளது. அவருக்கு உறுதுணையாக விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் துணை கேப்டனாக செயல்படுவார் என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கபில் தேவுக்கு பின்:
கடந்த 2018இல் அறிமுகமாகி தனது அபார திறமையால் இன்று 3 வகையான இந்திய அணியிலும் நம்பர் ஒன் வேகப்பந்து வீச்சாளராக உருவெடுத்துள்ள ஜஸ்பிரித் பும்ராவின் திறமை மீது நம்பிக்கை வைத்து இந்த மிகப்பெரிய பொறுப்பை இந்திய அணி நிர்வாகம் அவரிடம் ஒப்படைத்துள்ளது. இதன் வாயிலாக கௌரவமிக்க டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவை வழிநடத்தும் 36-ஆவது கேப்டன் என்ற பெருமையை ஜஸ்பிரித் பும்ரா பெற்றுள்ளார். அதைவிட 1987இல் கேப்டனாக இருந்த ஜாம்பவான் கபில் தேவுக்கு பின் 35 வருடங்கள் கழித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவை வழிநடத்தும் வேகப்பந்து வீச்சாளர் என்ற மகத்தான பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

ரோஹித் சர்மா போன்ற நல்ல திறமையான கேப்டன் மற்றும் தரமான ஓபனிங் பேட்ஸ்மேன் விலகியது இப்போட்டியில் இந்தியாவுக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் கேப்டன்ஷிப் அனுபவமில்லாத நிலைமையில் முதல் முறையாக கேப்டனாக செயல்பட்ட போகும் ஜஸ்பிரித் பும்ரா தலைமையில் முன்னாள் கேப்டன் விராட் கோலி உட்பட எஞ்சிய இந்திய வீரர்கள் வெற்றிக்காக முழுமூச்சுடன் போராட உள்ளனர்.

Advertisement