ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா தங்களுடைய முதல் போட்டியில் வங்கதேசத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. பிப்ரவரி 20ஆம் தேதி துபாயில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய வங்கதேசம் 229 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக தௌஹீத் ஹ்ரிடாய் 100 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஷமி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அடுத்ததாக விளையாடிய இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் சர்மா 41, சுப்மன் கில் சதத்தை அடித்து 101*, ராகுல் 41* ரன்கள் எடுத்து 46.3 ஓவரில் வெற்றி பெற வைத்தார்கள். அதனால் இந்தத் தொடரை இந்தியா வெற்றியுடன் துவக்கிய நிலையில் வங்கதேசத்துக்கு அதிகபட்சமாக ரிஷத் ஹொசைன் 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.
இந்தியா வெற்றி:
இந்நிலையில் இப்போட்டியில் அக்சர் படேல் ஹாட்ரிக் விக்கெட்டின் கேட்ச்சை தவற விட்டதற்காக மன்னிப்பு கேட்ட கேப்டன் ரோஹித் அணியாக சூழ்நிலைக்கு தகுந்தார் போல் விளையாடி வென்றது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நீங்கள் வருவதற்கு முன் விளையாடுவதற்கான தன்னம்பிக்கை வேண்டும். போட்டி நடைபெற நடைபெற வெவ்வேறு உணர்வுகள் வரும். இருப்பினும் எங்களுடைய அணியில் நிறைய அனுபவம் இருக்கிறது. கில், ராகுல் நன்றாக விளையாடினார்கள். துபாய் பிட்ச் பற்றி வெறும் ஒரு போட்டிக்கும் பின் சொல்ல முடியாது”
“சூழ்நிலைக்கு தகுந்தார் போல் நீங்கள் விளையாடி என்ன செய்ய முடியும் என்பதை பார்க்க வேண்டும். அந்த வகையில் அணியாக நாங்கள் சூழ்நிலைகளை படித்தோம். சாம்பியன்ஸ் டிராபி போன்ற தொடரில் நீங்கள் அழுத்தத்திற்குள் தள்ளப்படுவீர்கள். நீண்ட நாட்கள் கழித்து ஷமி இப்படி விளையாடுவதற்காக நாங்கள் காத்திருந்தோம். எங்களுக்காக அவரால் என்ன கொண்டு வர முடியும் என்பது தெரியும்”
ரோஹித் மன்னிப்பு:
“தேவைப்படும் நேரத்தில் உயர்ந்து நிற்கக்கூடிய அவரைப் போன்ற வீரர் எங்களுக்கு தேவை. கில் எப்படிப்பட்டவர் என்பது தெரியும் என்பதால் அவருடைய ஆட்டத்தை பார்த்து யாரும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. கடைசி வரை அவர் பேட்டிங் செய்ததை பார்த்தது நன்றாக இருந்தது. அக்சர் படேலை நாளை டின்னருக்கு நான் அழைத்துச் செல்லலாம்”
இதையும் படிங்க: 229 இலக்கை தொட ரோஹித், கோலியிடம் இதை பேசினேன்.. வங்கதேசத்தை சாய்த்த திட்டம் பற்றி ஆட்டநாயகன் கில் பேட்டி
“ஏனெனில் அது போன்ற கேட்ச்கள் எளிதானது என்பதால் என்னுடைய தரத்திற்கு நான் அதைப் பிடித்திருக்க வேண்டும். ஆனால் விளையாட்டில் இது போன்றது நடக்கும். ஜாகிர் – தௌஹீத் அமைத்த பார்ட்னர்ஷிப்புக்கு பாராட்டுக்களை கொடுக்க வேண்டும். பிட்ச் அடுத்த போட்டிகளில் எப்படி இருக்கும் என்று சொல்வதற்கு நான் மைதான பராமரிப்பாளர் கிடையாது. ஆனால் இங்கு விளையாடப்பட்ட போட்டிகளில் பிட்ச் இதே போல இருக்கலாம் என்று தெரிகிறது” எனக் கூறினார்.



