வரலாற்றில் 8வது முறையாக ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் நவம்பர் 10ஆம் தேதியன்று நடைபெறும் 2வது அரையிறுதி போட்டியில் வலுவான இங்கிலாந்தை ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா எதிர்கொள்கிறது. அதில் வெற்றி பெற்று ஃபைனலுக்கு தகுதி பெறுவதற்காக போட்டி நடைபெறும் அடிலெய்ட் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய வீரர்கள் தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதைவிட அந்த போட்டியில் எந்த இடத்திலும் சொதப்பாமல் 100% சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே வெற்றியை சுவைக்க முடியும் என்ற நிலைமையில் மாறிமாறி சொதப்பும் தினேஷ் கார்த்திக் – ரிஷப் பண்ட் ஆகியோரில் விளையாடப் போவது யார் என்ற கேள்வி நிலவுகிறது.
அதில் ஏற்கனவே அறிமுகமானது முதல் 59 போட்டிகள் என்ற அதிகப்படியான வாய்ப்புகளை பெற்றாலும் எப்போதுமே டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்படாத ரிஷப் பண்ட்டுக்கு பதிலாக 2022 ஐபிஎல் தொடரில் கடினமாக உழைத்து 3 வருடங்கள் கழித்து 37 வயதில் கம்பேக் கொடுத்து அசத்திய தினேஷ் கார்த்திக்க்கு வாய்ப்பளிக்கப்பட்டது. ஆனால் பொதுவாகவே அழுத்தமான போட்டிகளில் சொதப்புவதை வழக்கமாக வைத்திருப்பதால் தோனியை மிஞ்ச முடியாமல் கேரியரை தொலைத்த அவர் இந்த உலகக் கோப்பையிலும் முதல் 4 போட்டிகளில் கிடைத்த வாய்ப்புகளில் பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங்கில் செய்ய வேண்டிய சிறிய வேலைகளில் கூட சொதப்பி விமர்சனங்களை சந்தித்தார்.
சான்ஸ் யாருக்கு:
அதனால் டி20 கிரிக்கெட்டில் தடுமாறினாலும் ஆஸ்திரேலிய மண்ணில் ஏற்கனவே சிறப்பாக செயல்பட்டு காபா போன்ற வரலாற்று வெற்றிகளை பெற்றுக் கொடுத்த ரிசப் பண்ட்டுக்கு வாய்ப்பளிக்குமாறு கோரிக்கைகள் எழுந்தன. அந்த வகையில் ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் வாய்ப்பு பெற்ற அவர் வெறும் 3 ரன்களில் சொதப்பி இன்னும் நான் முன்னேறவில்லை என்று நிரூபித்தார். இப்படி இருவருமே சொதப்புவதால் இந்த முக்கியமான செமி பைனலில் விளையாடப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில் அரையிறுதியில் அந்த இருவருமே தேர்வுக்கு தயாராக இருப்பதாக தெரிவிக்கும் ரோகித் சர்மா அதைப் பற்றி இப்போது சொல்ல முடியாது என்று கூறியுள்ளார். இது பற்றி இன்று நிகழ்ந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியது பின்வருமாறு. “டிகே – பண்ட் விஷயத்தில் கடந்த போட்டியிலே நான் சொல்லி விட்டேன். அதாவது இந்த தொடரில் பண்ட் மட்டுமே பெர்த் நகரில் நடைபெற்ற பயிற்சி போட்டிகளை தவிர்த்து எந்த போட்டிகளிலும் விளையாடாமல் இருந்தார்”
“அந்த பயிற்சி போட்டிகளுக்கு பின் அவர் வாய்ப்பு நீண்ட வாய்ப்பு பெறாமல் இருந்ததால் செமி பைனல் அல்லது பைனலுக்கு முன்பாக தயாராக இருக்க வேண்டும் என்பதற்காக ஜிம்பாப்வே போட்டியில் வாய்ப்பளித்தேன். ஏனெனில் இந்த தொடரில் ஒரு போட்டியில் கூட விளையாடாமல் திடீரென்று செமி பைனல் போன்ற முக்கிய போட்டியில் ஒருவரை விளையாட வைப்பது நியாயமற்றது. ஆனால் செமி பைனல் அல்லது லீக் என எந்த போட்டியாக இருந்தாலும் அதில் விளையாடுவதற்கு தயாராக இருக்குமாறு ஏற்கனவே எங்களது வீரர்களிடமும் கூறியுள்ளேன்”
“இருப்பினும் மிடில் ஓவர்களில் சுழல் பந்து வீச்சாளர்களை அதிரடியாக எதிர்கொள்வதற்காக ஒரு இடது கை பேட்ஸ்மேன் தேவை என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். ஆனால் நாளை என்ன நடைபெறும் என்பதை நான் இப்போதே சொல்ல மாட்டேன். இருப்பினும் அந்த 2 விக்கெட் கீப்பர்களும் தேர்வுக்கு தயாராக உள்ளனர்” என்று கூறினார். அதாவது இந்த தொடரில் இதுவரை ஒரு போட்டியில் கூட வாய்ப்பு பெறவில்லை என்பதாலேயே ஜிம்பாப்வே போட்டியில் பண்ட் வாய்ப்பு பெற்றாதாக ரோகித் கூறியுள்ளார்.
அதை விட முக்கியமான அரையிறுதியில் இடது கை பேட்ஸ்மேன் இருப்பதை விரும்புவதாக கூறும் அவர் அதைப் பற்றி இப்போது செல்ல முடியாது என்று கூறியுள்ளார். அந்த வகையில் இதுவரை வாய்ப்பு பெற்ற அக்சர் பட்டேல் பேட்டிங்கிலும் பந்து வீச்சிலும் தாக்கத்தை ஏற்படுத்தாத காரணத்தால் இங்கிலாந்துக்கு எதிரான அரை இறுதியில் தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய இருவருமே விளையாடுவார்கள் என்பது ரோகித் சர்மாவின் கருத்தால் தெளிவாக தெரிய வருகிறது குறிப்பிடத்தக்கது.