
இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடி வந்த தமிழக நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு பெற்றார். இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் 2வது அதிக விக்கெட்டுகளை எடுத்துள்ள அவர் முத்தையா முரளிதரனுக்கு நிகராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக தொடர்நாயகன் விருதுகளையும் வென்றுள்ளார். அப்படியிருந்தும் அவருக்கு வெளிநாடுகளில் இந்திய அணி தொடர்ந்து வாய்ப்பளிக்காமல் இருந்தது.
அதனால் நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் 3வது போட்டியுடன் வருங்கால வீரர்களுக்கு வழிவிட்டு அஸ்வின் 38 வயதில் ஓய்வு பெறுவதாக அறிவித்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. அவருக்கு பதிலாக மும்பையைச் சேர்ந்த 26 வயதாகும் இளம் வீரர் டானுஷ் கோட்டியான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அஸ்வின் போலவே ஆஃப் ஸ்பின்னரான அவர் இடது கை பேட்ஸ்மேனாக உள்ளூரில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளார்.
அதன் காரணமாக அஸ்வினுக்கு பதிலாக அவர் இந்திய அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்றே சொல்லலாம். ஆனால் ஏற்கனவே அக்சர் படேல், குல்தீப் யாதவ் ஆகிய 2 அனுபவமிக்க ஸ்பின்னர்கள் வாய்ப்புக்காக காத்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட நிலையில் அஸ்வினுக்கு பதிலாக டானுஷ் கோட்டியான் தேர்வு செய்யப்பட்டது ரசிகர்கள் புரிந்து கொள்ள முடியாததாக அமைந்தது.
இந்நிலையில் இது பற்றி இந்திய கேப்டன் ரோஹித் சர்மா விளக்கம் கொடுத்துள்ளார். அவர் பேசியது பின்வருமாறு. “டானுஷ் ஒரு மாதத்திற்கு முன்பாக இங்கே ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் இந்தியா ஏ அணிக்காக விளையாடினார். குல்தீப் யாதவிடம் விசா இல்லை. அதனால் முடிந்தளவுக்கு வேகமாக வந்து இந்திய அணியுடன் இணையும் ஒருவர் எங்களுக்கு தேவைப்படுகிறார்”
“டானுஷ் பயிற்சி போட்டியில் இங்கே நன்றாக விளையாடினார். நகைச்சுவைகளை தாண்டி அவர் கடந்த சில வருடங்களாக உள்ளூர் கிரிக்கெட்டிலும் அசத்தி வருகிறார். மேலும் சிட்னி அல்லது மெல்போர்னில் 2 ஸ்பின்னர்கள் விளையாட வேண்டிய சூழ்நிலை வந்தால் அதற்கு நாங்கள் தயாராக இருக்க விரும்புகிறோம். குல்தீப் யாதவ் அறுவை சிகிச்சை செய்து கொண்டதால் 100% தயாராக இல்லை”
இதையும் படிங்க: வலைப்பயிற்சியின் போது காயத்தை சந்தித்த இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா – என்ன நடந்தது?
“அக்சர் படேலுக்கு சமீபத்தில் குழந்தை பிறந்துள்ளது. எனவே அவரால் வெளியே பயணிக்க முடியாது. அதனால் டானுஷை நாங்கள் தேர்ந்தெடுத்தோம். சொல்லப்போனால் கடந்த ரஞ்சிக் கோப்பையை மும்பை வெல்வதற்கு அவர் ஒரு முக்கிய காரணமாக இருந்தார்” எனக் கூறினார். இதை அடுத்து 1 – 1* (5) என்ற கணக்கில் சமனில் இருக்கும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரின் நான்காவது போட்டி டிசம்பர் 26ஆம் தேதி மெல்போர்ன் நகரில் துவங்க உள்ளது.