
ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் இந்தியா தங்களுடைய செமி ஃபைனல் போட்டியில் நடப்புச் சாம்பியன் இங்கிலாந்தை சந்திக்கிறது. அப்போட்டி ஜூன் 27ஆம் தேதி கயானா நகரில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் வென்று ஃபைனலில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ளப் போவது யார் என்று எதிர்பார்ப்பு அனைவரிடமும் ஏற்பட்டுள்ளது.
முன்னதாக சர்வதேச கிரிக்கெட்டில் முதன்மை அணியாக திகழும் இந்தியா 2013க்குப்பின் ஐசிசி தொடரில் தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வருகிறது. இத்தனைக்கும் லீக் சுற்றில் அட்டகாசமாக விளையாடும் இந்தியா முக்கியமான நாக் அவுட் போட்டியில் சொதப்பி வெறுங்கையுடன் வெளியேறுவதை வாடிக்கையாக வைத்துள்ளது. அந்த வகையில் கடந்த 2022 டி20 உலக கோப்பையில் இதே இங்கிலாந்திடம் செமி ஃபைனலில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வியை சந்தித்தது.
இந்தியாவின் அணுகுமுறை:
அதற்கு நாக் அவுட் சுற்றில் தோற்று விடுவோமோ என்ற பயமும் அதிர்ஷ்டமின்மையுமே காரணம் என்று சமீப காலங்களில் சில முன்னாள் வீரர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் அது பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடரில் இந்தியா தோற்க அதிர்ஷ்டமின்மை மற்றும் தோல்வி பயம் ஆகிய இரண்டும் முக்கிய காரணமாக இருப்பதை கேப்டன் ரோஹித் சர்மா ஒப்புக்கொண்டுள்ளார்.
எனவே இம்முறை இது நாக் அவுட் போட்டி என்று பேசி தங்களுக்கு தங்களை அழுத்தத்தை உருவாக்கிக் கொள்ளும் தவறை செய்ய மாட்டோம் என்று ரோகித் தெரிவித்துள்ளார். இது பற்றி போட்டிக்கு முந்தைய செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியது பின்வருமாறு. “ஆம் அது இரண்டுமே காரணம் (தோல்வி பயம் – அதிர்ஷ்டம்). எனவே இப்போட்டியை நாங்கள் ஒரு சாதாரண போட்டியாகவே கருத விரும்புகிறோம். இது செமி ஃபைனல் என்று நாங்கள் அதிகமாக பேச விரும்பவில்லை”
“இதுவரை ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியுடன் விளையாடும் நாங்கள் அதைத் தொடர விரும்புகிறோம். ஆனால் இது நாக் அவுட் போட்டி என்று நினைத்தால் அது வெற்றிக்கு உதவாது. உண்மையில் 2022க்குப்பின் எங்களிடம் பெரிய மாற்றங்கள் ஏற்படவில்லை. டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் நாங்கள் சுதந்திரமான மனதுடன் விளையாட முயற்சிக்கிறோம். நாங்கள் புத்திசாலி அணியாக இருக்க விரும்புகிறோம்”
இதையும் படிங்க: இவ்ளோ தூரம் வந்தது மகிழ்ச்சி.. இது முடிவல்ல இதுதான் துவக்கம்.. அரையிறுதி தோல்விக்கு பிறகு – ரஷீத் கான் ஓபன்டாக்
“எங்களில் அனைவருக்கும் என்ன செய்ய வேண்டும் என்பது தெரியும். களத்தில் கூலாக இருப்பது கடந்த பல வருடங்கள் எனக்கு வேலை செய்துள்ளது. சில நேரங்களில் நீங்கள் பொறுமையை இழப்பீர்கள். இந்திய கிரிக்கெட் அணி என்றாலே அழுத்தம் இருக்கும். அதை எங்களின் பல வீரர்கள் சந்தித்துள்ளனர். இப்போட்டிக்கான சூழ்நிலையை பார்த்து 4 ஸ்பின்னர்கள் தேவையா என்பதை முடிவெடுப்போம்” என்று கூறினார்.