நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்தியா ஒயிட் வாஸ் தோல்வியை சந்தித்தது. அதனால் நியூஸிலாந்துக்கு எதிராக முதல் முறையாக சொந்த மண்ணில் இந்தியா ஒரு டெஸ்ட் தொடரில் தோல்வியை பதிவு செய்தது. இந்த தோல்விக்கு நியூசிலாந்து ஸ்பின்னர்களை இந்திய பேட்ஸ்மேன்கள் நன்றாக எதிர்கொள்ளாதது முக்கிய காரணமானது.
முன்னதாக மும்பையில் நடைபெற்ற கடைசி போட்டியில் வெறும் 147 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு விராட் கோலி ரோஹித் சர்மா போன்ற அனைத்து பேட்ஸ்மேன்களும் தடுமாறினார்கள். ஆனால் அவர்களுக்கு மத்தியில் அதிரடியாக விளையாடிய 64 (57) ரன்கள் அடித்து வெற்றிக்கு போராடினார். அப்போது அஜாஸ் பட்டேல் வீசிய ஒரு பந்து அவருடைய பேட்டில் பட்டு விக்கெட் கீப்பர் கையில் தஞ்சமடைந்தது.
சுமாரான தீர்ப்பு:
அதை நியூசிலாந்து அணியினர் அவுட் கேட்ட போது களத்தில் இருந்த நடுவர் கொடுக்க மறுத்து விட்டார். பின்னர் ரிவ்யூ எடுத்த போது பந்து அவருடைய பேட்டில் உரசுவது போல் அல்ட்ரா எடுத்து தொழில்நுட்பத்தில் காண்பித்ததால் 3வது நடுவர் அவுட் வழங்கினார். அந்த முடிவு ரிஷப் பண்ட் மேற்கொண்டு போராடியிருந்தால் கிடைத்திருக்க வேண்டிய இந்தியாவின் வெற்றியை பறித்தது.
இருப்பினும் அந்த தருணத்தில் பந்தின் மீது பேட் உரசும் அதே சமயத்தில் ரிஷப் பண்ட் காலிலும் உரசியது. அதனால் அது அவுட்டாக இருக்க வாய்ப்பில்லை என்று முன்னாள் தென்னாபிரிக்க வீரர் ஏபி டீ வில்லியர்ஸ் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தெளிவான ஆதாரம் இல்லாத போது களத்தில் இருந்த நடுவர் கொடுக்கும் தீர்ப்பையே 3வது நடுவர் கொடுப்பார் என்று இந்திய அணியிடம் கூறப்பட்டிருந்ததாக கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார்.
ரோஹித் அதிருப்தி:
ஆனால் அதை 3வது நடுவர் பின்பற்றவில்லை என்று அதிருப்தியை வெளிப்படுத்தும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “உண்மையில் எனக்கு தெரியவில்லை. நாங்கள் ஏதாவது சொன்னால் அது ஏற்றுக்கொள்ளப்படாது. தெளிவான ஆதாரம் இல்லாத போது களத்தில் இருந்த நடுவர் கொடுத்த தீர்ப்பே எடுத்துக் கொள்ளப்படும் என்று தான் எங்களிடம் சொல்லப்பட்டது. அப்படியிருந்தும் அந்த முடிவு எவ்வாறு மாற்றப்பட்டது என்பது எனக்குத் தெரியவில்லை”
இதையும் படிங்க: வெறும் 204 ரன்ஸ்.. பிரட் லீயை மிஞ்சி ஸ்டார்க் அதிரடி சாதனை.. பாகிஸ்தானிடம் திரில் வெற்றியை பறித்த ஆஸி
“ஏனெனில் பேட் ரிஷப் பண்ட் காலில் பட்டது தெளிவாக தெரிந்தது. இதைப் பற்றி நான் பேச வேண்டுமா என்பது கூட தெரியவில்லை. அதை நடுவர்கள் சிந்திக்க வேண்டும். அனைத்து அணிகளுக்கும் ஒரே மாதிரியான விதிமுறைகள் இருக்கப்பட வேண்டும் உங்களுடைய மனதை மாற்றிக் கொள்ளாதீர்கள். ரிஷப் பண்ட் நன்றாக விளையாடியதால் அவரின் விக்கெட் எங்களுடைய வெற்றிக்கு முக்கியமானதாக இருந்தது. அதே சமயம் அந்த தருணத்திற்குப் பின் நாங்கள் ஆல் அவுட்டானோம்” என்று கூறினார்.