ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா வென்றது. துபாயில் மார்ச் ஒன்பதாம் தேதி நடைபெற்ற மாபெரும் இறுதிப்போட்டியில் வலுவான நியூசிலாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து இந்தியா வென்றது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 252 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது.
அதைத் துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் சர்மா மீண்டும் தனது சொந்த சாதனையை பற்றி கவலைப்படாமல் அதிரடியாக விளையாடி 76 ரன்கள் குவித்து அடித்தளத்தை அமைத்தார். அதைப் பயன்படுத்தி ஸ்ரேயாஸ் ஐயர் 48, அக்சர் 29, ராகுல் 34* ரன்கள் எடுத்து 49வது ஓவரில் இந்தியாவை வெற்றி பெற வைத்தனர். இதனால் 3வது முறையாக சாம்பியன்ஸ் ட்ராபியை வென்று இந்தியா சாதனை படைத்தது.
சாம்பியன்ஸ் ட்ராபி நாயகன்:
சொல்லப்போனால் ஆஸ்திரேலியாவை (2) முந்தி 3 சாம்பியன்ஸ் டிராபியை வென்ற முதல் அணியாகவும் இந்தியா உலக சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றிக்கு பவர் பிளே ஓவர்களில் அதிரடியாக விளையாடி முக்கிய பங்காற்றிய ரோகித் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் அதிரடியாக விளையாடுவது தமக்கும் இயற்கையாக வராது என்று ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்தியாவுக்காக சொந்த சாதனைகளைப் பற்றி கவலைப்படாமல் அப்படி விளையாடுவதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “இது மிகவும் நன்றாக இருக்கிறது. நாங்கள் தொடர் முழுவதும் நல்ல கிரிக்கெட்டை விளையாடினோம். அதன் பலனாக வெற்றி முடிவு எங்கள் பக்கம் வந்தது சிறந்த உணர்வைக் கொடுக்கிறது”
இந்தியாவுக்காக அதிரடி:
“அதிரடியாக விளையாடும் ஸ்டைல் எனக்கு இயற்கையானது கிடையாது. ஆனால் அதை நான் செய்ய விரும்பினேன். நீங்கள் எதையாவது புதிதாக முயற்சிக்கும் போது அணி நிர்வாகத்தின் ஆதரவு உங்களுக்கு வேண்டும். அதை 2023 உலகக் கோப்பையில் ராகுல் டிராவிட் பாய், தற்போது கௌதம் பாய் எனக்குக் கொடுத்தார்கள். அவர்களுடைய ஆதரவால் சமீப வருடங்களில் நான் வித்தியாசமாக விளையாடினேன்”
இதையும் படிங்க: நியூஸிலாந்தை சாய்த்து ஆஸியை முந்திய இந்தியா சரித்திரம் காணாத உலக சாதனை.. 25 வருட வரலாற்றை மாற்றி அபாரம்
“வித்தியாசமாக விளையாடி வெற்றியைப் பெற முடியுமா என்று பார்த்தேன். துபாயில் சில போட்டிகளில் விளையாடியது பிட்ச்சின் இயற்கைத் தன்மையை புரிந்துகொள்ள உதவியது. கால்களைப் பயன்படுத்தி இறங்கி சென்று அடிப்பதை நீண்ட காலமாக செய்து வருகிறேன். அந்த வகையில் விக்கெட்டையும் இழந்துள்ளேன். ஆனால் அதற்காக பின்வாங்கியதில்லை. அது ஆட்டத்தை எளிதாகவும் சுதந்திரமாகவும் மாற்றுகிறது. ஜடேஜா 8வது இடத்தில் பேட்டிங் செய்ய வருவார் என்பது டாப்பில் நீங்கள் அதிரடியாக விளையாடுவதற்கான தன்னம்பிக்கையைக் கொடுக்கிறது. அனைத்தையும் விட எனது மனதில் தெளிவாக இருக்கிறேன் என்பது முக்கியமான விஷயம்” என்று கூறினார்.



