
ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் இந்தியா ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. அந்த இரண்டு தொடரில் விளையாடுவதற்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள அந்த அணியில் ஜஸ்ப்ரித் பும்ரா தேர்வாகியுள்ளது ரசிகர்களை நிம்மதியடைய வைத்துள்ளது.
ஏனெனில் பவுலிங் துறையின் முதுகெலுமான அவர் சமீபத்திய ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் காயத்தை சந்தித்தார். அதனால் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட மாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இருப்பினும் காயத்தை பொறுத்தே அவர் விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனால் சாம்பியன்ஸ் டிராபியில் அவர் பவுலிங் செய்வாரா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. இந்நிலையில் ஜஸ்ப்ரித் பும்ரா பவுலிங் செய்வாரா என்பது பற்றி அஜித் அகர்கர் கூறியது பின்வருமாறு. “ஜஸ்ப்ரித் பும்ரா பிட்னஸ் பற்றி பிசிசிஐ மருத்துவ குழுவிடமிருந்து நாங்கள் அறிக்கைக்காக காத்திருக்கிறோம். அதை பிப்ரவரி மாத துவக்கத்தில் வந்து விடும்” என்று கூறினார்.
அதே போல முதன்மை பவுலரான முஹம்மது சிராஜ் இந்த அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். சமீபத்திய போட்டிகளில் தாக்கத்தை ஏற்படுத்த தவறியதால் அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார். அவருக்கு பதிலாக 2024 டி20 உலகக் கோப்பையில் அசத்திய அர்ஷ்தீப் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் ரோகித் கூறியுள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “பும்ராவின் நிலைமை தெளிவாகத் தெரியவில்லை. எங்களுக்கு அனைத்து வகையான சூழ்நிலைகளிலும் அசத்தக்கூடிய பவுலர்கள் தேவை. துரதிஷ்டவசமாக சிராஜ் அதிகமாக புதிய பந்தை சார்ந்து இருக்கிறார். நாங்கள் 3 வேகப்பந்து வீச்சாளர்கள் விளையாடுவதை விரும்புகிறோம்”
இதையும் படிங்க: சாம்சனுக்கு டாட்டா.. பும்ரா, ஷமி பேக்.. ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு
“புதிய பந்திலும் பவுலிங் செய்யும் போது அவருடைய தாக்கம் குறைந்து விட்டது. ஆனால் புதிய பந்தில் ஏற்படுத்தும் தாக்கம் போலவே மிடில் மற்றும் கடைசி கட்ட நேரங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் பவுலர்களுக்கு நாங்கள் முன்னுரிமை கொடுக்கிறோம். அந்த வகையில் ஜஸ்ப்ரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், ஷமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். அவர்கள் தேர்வால் நாங்கள் சரியான சமநிலையை கண்டறிந்துள்ளோம் என்று நம்புகிறோம்” எனக் கூறினார்.