நியூசிலாந்துக்கு எதிராக முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் 36 வருடங்கள் கழித்து இந்தியா சொந்த மண்ணில் தோல்வியை சந்தித்தது. அந்த தோல்விக்கு பெங்களூருவில் முதல் இன்னிங்ஸில் 46க்கு ஆல் அவுட்டானதே முக்கிய காரணமாக அமைந்தது. இருப்பினும் புனேவில் நடைபெற்ற இரண்டாவது போட்டியிலாவது இந்தியா வென்று பதிலடி கொடுக்கும் என்று ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருந்தனர்.
ஆனால் இரண்டாவது போட்டியிலும் அதை விட மோசமாக விளையாடிய இந்தியா 113 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. அதனால் 2 – 0* (2) என்ற கணக்கில் இத்தொடரை ஆரம்பத்திலேயே வென்ற நியூஸிலாந்து அணி இந்தியாவில் முதல் முறையாக ஒரு டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைத்துள்ளது. மறுபுறம் 12 வருடங்கள் கழித்து சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் இந்தியா அவமானத் தோல்வியை சந்தித்துள்ளது.
12 வருட சாதனை:
அத்துடன் நியூசிலாந்துக்கு எதிராக முதல் முறையாக சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் இந்தியா தோல்வியை பதிவு செய்துள்ளது. இந்த தோல்விக்கு நியூசிலாந்தின் தரமான சுழல் பந்துகளை இந்திய பேட்ஸ்மேன்கள் நன்றாக எதிர்கொள்ளாததே முக்கிய காரணமாக அமைந்தது. குறிப்பாக 2 இன்னிங்ஸிலும் இந்திய பவுலர்கள் நியூசிலாந்து அணியை 259, 255 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கி போராடினார்கள்.
ஆனால் பேட்டிங்கில் 156, 245 ரன்கள் மட்டுமே எடுத்த பேட்ஸ்மேன்கள் இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமானார்கள். இந்நிலையில் இந்த தோல்விக்காக எந்த வீரர்களையும் குறை சொல்லவில்லை என்று தெரிவிக்கும் ரோகித் சர்மா அணியாக தோல்வியை சந்தித்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். தோல்விக்கான காரணம் பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
தோல்விக்கான காரணம்:
“இது ஏமாற்றம். நாங்கள் இதை எதிர்பார்க்கவில்லை. எங்களை விட சிறப்பாக விளையாடிய நியூசிலாந்துக்கு பாராட்டுக்கள். அவர்களுடைய சவால்களுக்கு நாங்கள் பதிலளிக்க தவறியதாலேயே தோல்வியின் பக்கம் உட்கார்ந்து உள்ளோம். நாங்கள் போதுமான ரன்கள் எடுத்ததாக நினைக்கவில்லை. வெற்றிக்கு 20 விக்கெட்டுகள் எடுப்பது அவசியம். ஆனால் அதற்கு பேட்ஸ்மேன்கள் ரன்கள் கொடுப்பது முக்கியம்.அவர்கள் 200-3 என்ற நிலையில் இருந்த போது மீண்டும் வந்த நாங்கள் 259க்கு சுருட்டியது நல்ல செயல்பாடு”
இதையும் படிங்க: 113 ரன்ஸ்.. 4331 நாட்கள்.. காற்றில் பறந்த இந்தியாவின் 12 வருட கெளரவம்.. நியூஸியிடம் 69 வருட வரலாறு காணாத தோல்வி
“பிட்ச்சில் பெரிதாக எதுவும் நடக்கவில்லை. நாங்கள் நன்றாக பேட்டிங் செய்யவில்லை அவ்வளவு தான். முதல் இன்னிங்க்ஸில் இன்னும் கொஞ்சம் ரன்கள் எடுத்திருந்தால் வெற்றி விஷயங்கள் வேறு மாதிரி இருந்திருக்கும். தற்போதைய நிலையில் நாங்கள் மும்பையில் நடைபெறும் அடுத்த போட்டியை வெல்ல விரும்புகிறோம். இங்கே அணியாக தோல்வியை சந்தித்தோம். அதற்காக பேட்ஸ்மேன்கள் அல்லது பவுலர்களை நான் குறை சொல்ல விரும்பவில்லை. மும்பையில் இன்னும் சிறந்த திட்டம் மற்றும் ஐடியாவுடன் வருவோம்” என்று கூறினார்.



