ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் இந்தியா 17 வருடங்கள் கழித்து சாம்பியன் பட்டம் வென்றது. குறிப்பாக மாபெரும் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா வரலாறு படைத்தது. முன்னதாக பார்படாஸ் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் சேசிங் செய்த தென்னாப்பிரிக்காவுக்கு ஸ்டப்ஸ், ஹென்றிச் க்ளாஸின் ஆகியோர் அதிரடியாக விளையாடி வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்தனர்.
அதனால் கடைசி 30 பந்துகளில் 30 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டதால் இந்தியா தோற்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் தன்னுடைய முழங்காலில் காயமடைந்ததாக சொல்லி முதலுதவி எடுத்தார். அதன் காரணமாக சில நிமிடங்கள் போட்டி தாமதமாகி மீண்டும் நடைபெற்றது. பாண்டியா வீசிய அடுத்த ஓவரிலேயே க்ளாஸின் அவுட்டானார்.
ரிஷப் பண்ட் செயல்:
அதற்கடுத்த ஓவர்களில் ஜஸ்ப்ரித் பும்ரா, அர்ஷ்தீப் ஆகியோர் துல்லியமாக பந்து வீசி அசத்தினர். இறுதியில் எதிர்ப்புறம் போராடிய டேவிட் மில்லர் கடைசி ஓவரில் பாண்டியா வேகத்தில் சூரியகுமாரின் அபார கேட்ச்சால் அவுட்டானது இந்தியாவுக்கு வெற்றியை கொடுத்தது. இந்நிலையில் அப்போட்டியில் முக்கிய நேரத்தில் ரிஷப் பண்ட் தம்முடைய அறிவை பயன்படுத்தியது இந்தியாவின் வெற்றிக்கு உதவியதாக கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார்.
இது பற்றி கிரேட் இந்தியன் கபில் நிகழ்ச்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “தென்னாப்பிரிக்காவுக்கு 30 பந்துகளில் 30 ரன்கள் தேவைப்பட்ட போது சிறிய இடைவேளை இருந்தது. ரிஷப் பண்ட் தனது அறிவைப் பயன்படுத்தி போட்டியை தற்காலிகமாக நிறுத்தினார். தனது முழங்காலில் காயத்தை சந்தித்த அவர் அதற்காக முதலுதவி எடுத்தது போட்டியை மெதுவாக்க உதவியது”
இந்தியாவின் வெற்றிக் கதை:
“ஏனெனில் அப்போட்டி மிகவும் வேகமாக தென்னாபிரிக்காவின் பக்கம் சென்றது. தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் வேகமாக பந்தை எதிர்கொள்ள விரும்பினர். அப்போது திடீரென ரிஷப் பண்ட் முதலுதவி எடுத்ததால் க்ளாஸின் போட்டி துவங்குவதற்காக காத்திருந்தார். வெற்றிக்கு அது மட்டுமே காரணம் என்று சொல்ல மாட்டேன். ஆனால் ரிஷப் பண்ட் சார் தன்னுடைய சாதூரியத்தை பயன்படுத்தியதால் விஷயங்கள் எங்களுக்கு சாதகமாக மாறியது வெற்றிக்கு ஒரு காரணமாகும்”
இதையும் படிங்க: இந்தியா – வங்கதேசம் முதல் டி20 நடைபெறும் குவாலியர் மைதானம் எப்படி? புள்ளிவிவரம், பிட்ச் – வெதர் ரிப்போர்ட்
“பாண்டியா அடுத்த ஓவரிலேயே க்ளாஸினை அவுட்டாக்கினார். அதிலிருந்து அழுத்தம் தென்னாப்பிரிக்காவின் பக்கம் உருவானது. எங்களுடைய வீரர்கள் ஒன்றாக சேர்ந்து தென்னாப்பிரிக்காவின் பேட்ஸ்மேன்களை ஸ்லெட்ஜிங் செய்யத் துவங்கினர். அந்த விவரங்களை இங்கே சொல்ல முடியாது. ஆனால் நாங்கள் எப்படியாவது வெற்றி பெற வேண்டிய நிலையில் இருந்தோம். அதற்காக சில அபராதங்களையும் ஏற்றுக்கொள்ள தயாராக இருந்தும். அதனால் தான் நீங்கள் நினைத்ததை செய்யுங்கள், நடுவர்களை நாம் பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்று எங்கள் வீரர்களிடம் ஆரம்பத்திலேயே சொல்லியிருந்தேன்” எனக் கூறினார்.