
கட்டாக் நகரில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதிய இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 9ஆம் தேதி நடைபெற்றது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து 305 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 69 ரன்கள் எடுத்த நிலையில் ரவீந்திர ஜடேஜா இந்தியாவுக்கு அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
அடுத்ததாக விளையாடிய இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா அபாரமாக பேட்டிங் செய்து சதத்தை அடித்து 119 ரன்கள் குவித்தார். அதனால் தன்னுடைய விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த அவர் ஃபார்முக்கு திரும்பி தன்னை தரமான வீரர் என்பதை நிரூபித்தார். அவருடன் துணைக் கேப்டன் சுப்மன் கில் 60, ஸ்ரேயாஸ் ஐயர் 44, அக்சர் படேல் 41 ரன்கள் எடுத்தார்கள்.
அதனால் 44.3 ஓவரில் 308-6 ரன்கள் எடுத்த இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 2 – 0* (3) என்ற கணக்கில் இந்தத் தொடரை ஆரம்பத்திலேயே வென்றுள்ளது. இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ரோகித் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டை பயன்படுத்தி ஃபார்முக்கு வந்துள்ளதாக தெரிவிக்கும் அவர் அதில் வெற்றி பெறுவதற்கு மிடில் ஓவர்களில் அசத்துவது அவசியம் என்று கூறியுள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “களத்திற்கு சென்று மகிழ்ச்சியுடன் அணிக்காக கொஞ்சம் ரன்கள் அடித்தது நன்றாக இருந்தது. நான் எப்படி பேட்டிங் செய்ய விரும்பினேனோ அப்படி செய்து உடைத்தேன். ஒருநாள் போட்டிகள் என்பது டி20யை விட நீளமானது டெஸ்ட் போட்டிகளை விட நீளம் குறைந்தது. எனவே அதில் உடைக்க விரும்பினேன். அதில் கவனம் செலுத்தி முடிந்தளவுக்கு ஆழமாக பேட்டிங் செய்ய விரும்பினேன்”
“கருமண்ணால் உருவாக்கப்பட்ட ஆடுகளங்களில் பந்து வழுக்கிக்கொண்டு வரும். எனவே ஆரம்பத்தில் நீங்கள் உங்களுடைய பேட்டின் முழு வேகத்தை காண்பிக்க வேண்டும். இங்கிலாந்து அணியினர் என்னுடைய உடல் மற்றும் ஸ்டம்ப் லைனில் வீசினார்கள். எனவே இடைவெளியை கண்டு அடிப்பதே என்னுடைய திட்டமாக இருந்தது. கில், ஸ்ரேயாஸ் ஆகியோரிடம் எனக்கு நல்ல ஆதரவு கிடைத்தது”
இதையும் படிங்க: 7 சிக்ஸ் 119 ரன்ஸ்.. ஃபார்முக்கு திரும்பி இங்கிலாந்தை வெளுத்த ஹிட்மேன்.. கெயிலை முந்தி 2வது உலக சாதனை
“நல்ல வீரரான கில் அவசரப்படாமல் சூழ்நிலைக்குத் தகுந்தார் போல் விளையாடினார். மிடில் ஓவர்கள் முக்கியம். அங்கே தான் போட்டி யார் பக்கம் வேண்டுமானாலும் திரும்பலாம். அதை நீங்கள் பிடித்து விட்டால் டெத் ஓவர்கள் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. கடந்த போட்டியில் அதையே செய்த நாங்கள் விக்கெட்டுகள் எடுத்தால் எதிரணியால் அடிப்பது கடினம். மொத்தமாக ஒரு அணியாகவும் வீரர்களாகவும் நாங்கள் முன்னேறவே விரும்புகிறோம்” எனக் கூறினார்.