இந்திய நாட்டின் தொழில்துறையின் ஜாம்பவானாக கருதப்படும் ரத்தன் டாடா அவர்கள் நேற்றிரவு உடல் நலக்குறைவால் இயற்கை எய்தினார். டாடா குழுமத்தில் 21 வருடங்களாக பணியாற்றிய அவர் பல நிறுவனங்களை உருவாக்கி இந்தியா தொழில்துறையில் புதிய உச்சம் தொடுவதற்கு முக்கிய பங்காற்றினார். 2021ஆம் ஆண்டு வயது காரணமாக ஓய்வு பெற்ற அவர் தற்போது உடல்நல குறைவால் 86 வயதில் காலமாகியுள்ளார்.
அவருடைய மறைவு கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு சோகத்தை கொடுத்துள்ளது என்றே சொல்லலாம். ஏனெனில் தொழில்துறையில் இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றிய அவர் தம்முடைய வருமானத்தின் பெருமளவு பகுதியை அறக்கட்டளை வாயிலாக ஏழைகளுக்கு தானமாக உதவி வந்தார். குறிப்பாக ஏழை மக்களுக்கு மருத்துவம், கல்வி போன்றவற்றில் அவர் தனது அறக்கட்டளை வாயிலாக சத்தமின்றி உதவி செய்து வந்தார்.
கிரிக்கெட்டர்களுக்கும் உதவி:
அதனாலயே அம்பானி, அதானி போன்ற இந்திய பணக்காரர்களின் பட்டியலில் இடம் பெறாத அவர் எப்போதும் எளிமை விரும்பியாக சாதாரண மனிதராக வாழ்ந்து மக்களின் இதயங்களில் நீங்காத இடத்தை பிடித்து விடை பெற்றுள்ளார். முன்னதாக ஏழைகளுக்கு உதவிய ரத்தன் டாடா அவர்கள் பல விளையாட்டு வீரர்களுக்கும் தம்முடைய அறக்கட்டளை வாயிலாக உதவியுள்ளார். குறிப்பாக முன்னாள் இந்திய விக்கெட் கீப்பர் ஃபரூக் இன்ஜினியர் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஸ்பான்சர் உதவியுடன் கிரிக்கெட்டில் விளையாடினார்.
அதே போல 1983 உலகக்கோப்பை ஹீரோ மொகிந்தர் அமர்நாத், சஞ்சய் மஞ்ரேக்கர், விவிஎஸ் லக்ஷ்மன் மற்றும் ராபின் உத்தப்பா ஆகியோர் ஏர் இந்தியா நிறுவனத்தின் வாயிலாக உதவி பெற்றனர். ஜவகல் ஸ்ரீநாத், ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங், முகமது கைஃப் தங்களுடைய ஆரம்பக்காலங்களில் டாடா குழுமத்துடன் தொடர்புடைய இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் வாயிலாக பொருளாதார உதவி பெற்றனர்.
தங்கமான இதயம்:
தற்போதைய தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் வாயிலாக உதவிகளை பெற்று ஜொலித்தவர். இப்போதுள்ள வீரர்களில் சர்தூள் தாக்கூர், ஜெயந்த் யாதவ் ஆகியோரும் டாடா பவர், ஏர் இந்தியா நிறுவனங்களின் வாயிலாக உதவிகளை பெற்று வளர்ந்தனர். அப்படி கொடை வள்ளலாக வாழ்ந்து மறைந்த டாடா அவர்கள் “இந்தியாவின் உண்மையான பாரத ரத்னா” என்று வீரேந்திர சேவாக் ட்விட்டரில் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: ஹார்டிக் பாண்டியாவிற்கு பிறகு நான் தான் என்பதை நிரூபித்து காட்டிய நிதீஷ் ரெட்டி – சிறப்பான சம்பவம்
“தங்கமான இதயம் கொண்ட மனிதர். ஐயா நீங்கள் என்றென்றும் நினைவு கூறப்படுவீர்கள். உண்மையிலேயே அக்கறையுள்ளவராகவும் மற்றவர்களை சிறப்பாக செய்ய வேண்டும் என்பதற்காகவும் வாழ்ந்தவர்” என கேப்டன் ரோஹித் சர்மா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இது போக சச்சின் டெண்டுல்கர், லக்ஷ்மன் போன்ற முன்னாள் ஜாம்பவான் கிரிக்கெட் வீரர்களும் ரத்தன் டாடா அவர்களுக்கு புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.



