
ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி சிறப்பாக விளையாடி வருகிறது. இந்த தொடரில் லீக் சுற்றில் பாகிஸ்தான் உள்ளிட்ட அணிகளை தோற்கடித்த இந்தியா சூப்பர் 8 சுற்றில் வலுவான ஆஸ்திரேலியாவையும் வீழ்த்தியது. அதனால் செமி ஃபைனல் சுற்றுக்கு தகுதி பெற்ற இந்தியா ஜூன் 27ஆம் தேதி கயானா நகரில் இங்கிலாந்தை சந்திக்கிறது.
முன்னதாக இந்த தொடரில் ஜஸ்பிரீத் பும்ராவுக்கு நிகராக இளம் வீரர் அர்ஷ்தீப் சிங்கும் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட்டுகள் எடுத்த அவர் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார். அந்த வகையில் 15 விக்கெட்கள் எடுத்துள்ள அவர் ஒரு டி20 உலகக் கோப்பையில் அதிக விக்கெட்கள் எடுத்த இந்திய வீரராக சாதனையும் படைத்துள்ளார்.
ரோஹித் பதிலடி:
ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் அர்ஷ்தீப் சிங் பந்தை சேதப்படுத்தியதாக முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் இன்சமாம்-உல்-ஹல் விமர்சித்தார். குறிப்பாக புதிய பந்தை போலவே 15வது ஓவரிலும் அவரால் எப்படி ரிவர்ஸ் ஸ்விங்கை பெற முடிகிறது? என்று இன்சமாம் கேள்வி எழுப்பினார். இதுவே பாகிஸ்தான் பவுலர்கள் 15வது ஓவரில் ஸ்விங் செய்தால் அதை அனைவரும் பிரச்சினையாக பேசியிருப்பார்கள் என்றும் அவர் கூறியிருந்தார்.
எனவே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிக்கு முன்பாக இந்தியா பந்தில் ஏதோ செய்ததாகவும் அவர் விமர்சித்திருந்தார். அதனால் இனிமேல் அர்ஷ்தீப் போன்ற இந்திய பவுலர்கள் மீது அம்பயர்கள் கண்ணை வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார். இந்நிலையில் அவருடைய இந்த விமர்சனத்துக்கு இந்திய கேப்டன் ரோஹித் சர்மா பதிலடிக் கொடுத்துள்ளார்.
மேலும் ரிவர்ஸ் ஸ்விங் எப்படி கிடைக்கிறது என்பதற்கான 2 காரணத்தை பற்றியும் ரோஹித் கூறியது பின்வருமாறு. “இதற்கு நான் என்ன பதில் சொல்ல முடியும்? சூரிய வெளிச்சத்திற்கு கீழே விளையாடும் போது இந்தளவுக்கு பிட்ச் காய்ந்திருந்தால் பந்து தன்னைத் தானே ஸ்விங் செய்யும். பந்து இங்கே அனைத்து அணிகளுக்கும் ரிவர்ஸ் ஆகிறது”
இதையும் படிங்க: இதுல இந்தியாவுக்கு என்ன சாதகம்? என்னோட ஒரே கவலைக்கு ஐசிசி பொறுப்பு.. இங்கிலாந்துக்கு ரோஹித் பதிலடி
“எனவே அது எப்படி ரிவர்ஸ் ஆகிறது? என்பதை தெரிந்து கொள்ள சில நேரங்களில் நீங்கள் உங்கள் மூளையை பயன்படுத்தி அறிவை திறப்பது முக்கியம். அதே சமயம் நீங்கள் எங்கே விளையாடுகிறீர்கள் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். நாங்கள் தற்போது இங்கிலாந்து அல்லது ஆஸ்திரேலியாவில் விளையாடவில்லை” என்று சொல்லி சர்வதேச கிரிக்கெட்டில் இவ்வளவு விளையாடிய உங்களுக்கு கூடவா தெரியாது? என அவருக்கு ரோஹித் பதிலடி கொடுத்துள்ளார்.