IND vs WI : சூர்யாவை விட அதை சரியாக செய்ததால் தான் வென்றோம் – வெற்றிக்குப்பின் பேசிய ரோஹித் தனது காயம் பற்றி கொடுத்த அப்டேட்

Rohith-2
- Advertisement -

வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் பங்கேற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் அபார வெற்றி பெற்ற இந்தியா 2-வது போட்டியில் படுதோல்வியை சந்தித்தது. அதனால் 1 – 1* (5) என சமநிலை பெற்ற இத்தொடரின் முக்கியமான 3-வது போட்டியும் தாமதமான லக்கேஜ் வருகையால் ஆகஸ்ட் 2-ஆம் தேதியான நேற்று இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு துவங்கியது. அப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீசுக்கு 57 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த தொடக்க ஜோடி பிரென்டன் கிங் 20 (20) ரன்களில் அவுட்டானார்.

அப்போது களமிறங்கிய கேப்டன் நிக்கோலஸ் பூரன் 22 (23) ரன்களில் அவுட்டானாலும் மறுபுறம் சிறப்பாக பேட்டிங் செய்த மற்றொரு தொடக்க வீரர் கெய்ல் மேயர்ஸ் 8 பவுண்டரி 4 சிக்சர்களுடன் அரைசதம் அடித்து 73 (50) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதியில் ரோவ்மன் போவல் 23 (14) ரன்களும் சிம்ரோன் ஹெட்மையர் 20 (12) ரன்களும் அதிரடியாக எடுத்து ஓரளவு நல்ல ஃபினிஷிங் கொடுத்ததால் 20 ஓவர்களில் அந்த அணி 164 /5 ரன்கள் எடுத்தது. இந்தியா சார்பில் பந்து வீச்சில் அதிக பட்சமாக புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

இந்தியா அசத்தல்:
அதை தொடர்ந்து 165 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு 1 பவுண்டரி 1 சிக்சரை விளாசிய கேப்டன் ரோகித் சர்மாவுக்கு திடீரென்று முதுகு பிடிப்பு ஏற்பட்டதால் 11* (5) ரன்களில் ரிட்டையர்ட் ஹர்ட்டாகி ஆரம்பத்திலேயே பெவிலியன் திரும்பியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்தது. இருப்பினும் மற்றொரு தொடக்க வீரராக களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் அடுத்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் அய்யருடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக ரன்களைக் குவித்து 105 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை தாங்கிப் பிடித்தார்.

அதில் கடைசி வரை மெதுவாகவே பேட்டிங் செய்த ஸ்ரேயாஸ் அய்யர் 24 (27) ரன்களில் அவுட்டானாலும் மறுபுறம் அட்டகாசமாக பேட்டிங் செய்த சூர்யகுமார் யாதவ் 8 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 76 (44) ரன்கள் குவித்து வெற்றி உறுதி செய்து ஆட்டமிழந்தார். இறுதியில் ரிஷப் பண்ட் 33* (26) ரன்களும் தீபக் ஹூடா 10* (7) ரன்களும் எடுத்ததால் 19 ஓவரிலேயே 165/3 ரன்கள் எடுத்த இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதன் காரணமாக 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 2 – 1* என்ற கணக்கில் மீண்டும் முன்னிலை பெற்று இந்தியா அசத்தியுள்ளது. இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

- Advertisement -

பவுலிங் சிறப்பு:
இந்நிலையில் சூர்யகுமார் யாதவ் ஆட்டத்தை விட பந்துவீச்சின் போது மிடில் ஆர்டர் ஓவர்களில் கால சூழ்நிலைகளை புரிந்து கொண்டு சிறப்பாக பந்து வீசியதே வெற்றிக்கு முக்கிய காரணம் என்று போட்டி முடிந்த பின் கேப்டன் ரோகித் சர்மா மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “மிடில் ஓவர்களில் நாங்கள் சிறப்பாக பந்து வீசியது வெற்றிக்கு துருப்புச் சீட்டாக இருந்தது. மேலும் நாங்கள் கால சூழ்நிலைகளை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டோம் என்று நினைக்கிறேன். அதே போல் வேரியேஷன்களையும் நாங்கள் பயன்படுத்திக் கொண்டோம்”

“அதன் பின் நாங்கள் சேசிங் செய்த விதம் தெளிவாக இருந்தது. இப்போட்டியை வெளியிலிருந்து நீங்கள் பார்க்கும் போது எந்த இடத்திலும் நாங்கள் நிறைய ரிஸ்க் எடுத்தது போல் உணராமல் மிடில் ஓவர்களில் அமைதியாகவும் பொறுமையாகவும் அழகாகவும் விளையாடினோம். சூர்யகுமார் யாதவ் ஷ்ரேயஸ் ஐயருடன் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து மிகச் சிறப்பாக பேட்டிங் செய்தார். பிட்ச் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்ததால் இந்த இலக்கு கடினமாகவே இருந்தது. இருப்பினும் இந்த மைதானத்திற்கு ஏற்ப சரியான ஷாட்களை தேர்வு செய்து நாங்கள் விளையாடினோம்” என்று கூறினார்.

அதே போல் இப்போட்டியில் காயத்தால் பாதியிலேயே விலகிய அவர் தன்னுடைய காயத்தின் அப்டேட் குறித்து பேசியது பின்வருமாறு. “தற்போதைய நிலைமையில் நன்றாக உள்ளது. அடுத்த போட்டிக்கு இன்னும் சில நாட்கள் இடைவெளி இருப்பதால் அதற்குள் குணமாகி விடும் என்று நம்புகிறேன்” என்று கூறினார்.

Advertisement