பிரச்சனையே நீங்கதான் எப்போ பேட்டில் ரன் அடிப்பீங்க – கேப்டன் ரோஹித் மீது ஜாம்பவான் அதிருப்தி

Rohit Sharma IND
- Advertisement -

வரலாற்றில் 8வது முறையாக ஆஸ்திரேலியாவில் அனல் பறக்க நடைபெற்று வரும் ஐசிசி டி20 உலக கோப்பையில் 2007க்கு பின் 2வது கோப்பையை வெல்லும் லட்சியத்துடன் களமிறங்கியுள்ள இந்தியா தன்னுடைய முதல் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானை விராட் கோலியின் மாஸ்டர் கிளாஸ் ஆட்டத்தால் தோற்கடித்து அடுத்ததாக நெதர்லாந்தை எதிர்கொள்ள தயாராகியுள்ளது. அக்டோபர் 23ஆம் தேதியன்று மெல்போர்ன் நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் பாகிஸ்தான் நிர்ணயித்த 160 ரன்களை துரத்தும் போது ரோகித், ராகுல், சூரியகுமார் என முக்கிய பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்திலேயே சொதப்பியதால் 31/4 என்ற மோசமான தொடக்கத்தை பெற்ற இந்தியாவுக்கு மீண்டும் தோல்வி உறுதியென்று இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கவலையடைந்தனர்.

VIrat Kohli IND vs PAK.jpeg

- Advertisement -

ஆனால் நான் இருக்கும் வரை அது நடக்காது என்ற வகையில் ஹர்திக் பாண்டியாவுடன் கை கோர்த்து 113 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து செங்குத்தாக தூக்கி நிறுத்திய நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 6 பவுண்டரி 4 சிக்சருடன் 82* (53) ரன்கள் குவித்து வரலாற்றில் மிகச்சிறந்த இன்னிங்ஸ் விளையாடி இந்தியாவுக்கு வரலாற்று வெற்றியை பெற்றுக் கொடுத்தார். அத்துடன் கடைசி நேரத்தில் தினேஷ் கார்த்திக் சொதப்பினாலும் கூலாக செயல்பட்ட ரவிச்சந்திரன் அஸ்வின் கடைசி பந்தை தூக்கி அடித்து ஆக்கப்பூர்வமாக செயல்பட்டது அனைவரது பாராட்டுகளைப் பெற்றது.

ரோஹித் பார்ம்:
இருப்பினும் அப்போட்டியில் ரோகித் சர்மா – கேஎல் ராகுல் ஆகிய 2 தரமான தொடக்க வீரர்கள் குறைந்தது 30 ரன்களை எடுத்துக் கொடுத்திருந்தால் கூட விராட் கோலியின் மீது இவ்வளவு பாரமும் விழுந்திருக்காது இந்தியாவும் எளிதாக வென்றிருக்கும். அதனால் அனைத்து நாட்களிலும் இதே போல் விராட் கோலி இந்தியாவை காப்பாற்ற முடியாது என்பதால் அடுத்து வரும் போட்டிகளில் தொடக்க வீரர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக அசால்ட்டாக சிக்சர்களை பறக்கவிடும் திறமை பெற்றுள்ள ரோகித் சர்மா கேப்டன் என்ற பொறுப்புடன் 30 – 40 ரன்களை எடுப்பது வெற்றிக்கு அவசியமாகிறது.

Virat Kohli Rohit Sharma

ஒரு காலத்தில் எதிரணிகளை புரட்டி எடுத்ததால் ஹிட்மேன் என்று கொண்டாடப்படும் அவர் சமீப காலங்களில் குறிப்பாக கேப்டன்ஷிப் பொறுப்பேற்ற பின் பெரும்பாலும் இது போன்ற சுமாரான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார். வெளிப்படையாக சொல்ல வேண்டுமெனில் 2022 ஐபிஎல் தொடரில் ஒரு அரைசதம் கூட அடிக்காத அவர் இங்கிலாந்து மண்ணில் நடந்த ஒருநாள் தொடரின் ஒரு போட்டியிலும் சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நாக்பூரில் மழையால் 8 ஓவர்களாக குறைக்கப்பட்ட போட்டியை தவிர்த்து எஞ்சிய அனைத்து போட்டிகளிலும் சொதப்பினார் என்றே கூறலாம்.

- Advertisement -

இந்நிலையில் இந்திய பேட்டிங் துறையில் தற்போதைக்கு உங்களது பார்ம் மட்டுமே கவலைக்குரிய வகையில் இருப்பதாக கேப்டன் ரோகித் சர்மா மீது முன்னாள் ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்திய பேட்டிங் வரிசையில் சமீப காலங்களில் ரோகித் சர்மா பெரிய அளவில் ரன்களை சேர்க்காதது எனக்கு கவலையளிக்கிறது. ஆனால் அவரால் எந்தளவுக்கு அதிரடியாக விளையாடி ரன்களை குவிக்க முடியும் என்று எனக்கு தெரியும். அவர் மட்டும் ஆரம்பத்தில் சிறப்பாக பேட்டிங் செய்தால் அடுத்து வரும் பேட்ஸ்மேன்களுக்கு வேலை மிகவும் சுலபமாகிவிடும். ஏனெனில் அனைத்து போட்டிகளிலும் நல்ல அடித்தளம் அமைய வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்”

Gavaskar

“அதை பின்பற்றி நீங்கள் நல்ல அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தால் 4 அல்லது 5வது இடத்தில் வரும் பேட்ஸ்மேன்கள் சந்திக்கும் முதல் பந்திலேயே அதிரடியாக விளையாடும் சுதந்திரத்தை பெறுவார்கள். அதனால் பாகிஸ்தானுக்கு எதிராக 31/4 என்ற திண்டாட்டமான தொடக்கத்தை போட்டியில் வெற்றி பெறுவதற்காக செட்டிலாகி இந்திய கப்பலை நிலைநிறுத்தி வெற்றியை நோக்கி அழைத்துச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது. எனவே 40/1 போன்ற மெதுவான தொடக்கத்தை கொடுப்பது கூட 31/4 என்ற மோசமான தொடக்கத்தை காட்டிலும் அடுத்து வரும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சமாளித்து விளையாடுவதற்கு மிகவும் உதவி செய்யும்” என்று கூறினார். இருப்பினும் இதைப் பார்க்கும் ரசிகர்கள் அவரை விட கிட்டத்தட்ட 10க்கு 1 போட்டியில் மட்டுமே சிறப்பாக விளையாடும் ராகுல் பற்றி கவாஸ்கர் வாய் திறக்காதது ஏன் என்று வினவுகிறார்கள்.

Advertisement