ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக துவங்கியுள்ள 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் தற்போது சூப்பர் 12 சுற்றில் விளையாடும் கடைசி 4 அணிகளை தீர்மானிக்கும் முதல் சுற்று நடைபெற்று வருகிறது. மறுபுறம் அக்டோபர் 22ஆம் தேதி முதல் துவங்கும் முதன்மை சுற்றான சூப்பர் 12 சுற்றில் களமிறங்கும் இந்தியா, பாகிஸ்தான் போன்ற அணிகள் பயிற்சிப் போட்டிகளில் விளையாடி தயாராகி வருகின்றன. அந்த வரிசையில் 2007க்குப்பின் 2வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கும் இந்தியா தனது முதல் பயிற்சிப் போட்டியில் நடப்புச் சாம்பியன் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் எதிர்கொண்டது. அக்டோபர் 17ஆம் தேதியன்று பிரிஸ்பேன் நகரில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்களில் 186/7 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக கேஎல் ராகுல் 57 (33) ரன்களும் சூர்யகுமார் யாதவ் 50 (33) ரன்களும் எடுத்தனர். அதைத்தொடர்ந்து 187 ரன்களை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு கிளன் மேக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித், மார்கஸ் ஸ்டோனிஸ் போன்ற முக்கிய வீரர்கள் பெரிய ரன்களை எடுக்க தவறினாலும் தொடக்க வீரராக களமிறங்கி போராடிய கேப்டன் ஆரோன் பின்ச் 7 பவுண்டரி 3 சிக்சருடன் 76 (54) ரன்கள் குவித்து 19வது ஓவரில் ஆட்டமிழந்தார். அதனால் கடைசி ஓவரில் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்ட போது அதுவரை அப்போட்டியில் ஃபீல்டிங் மட்டுமே செய்து கொண்டிருந்த முகமது ஷமி முதல் முறையாக ஆச்சர்யப்படும் வகையில் பந்து வீச வந்தார்.
காரணம் என்ன:
அதில் அபாரமாக செயல்பட்ட அவர் வெறும் 4 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்து 6 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற வைத்தார். கடைசியாக கடந்த உலக கோப்பையில் விளையாடிய அவர் கடந்த ஒரு வருடமாக எவ்வித சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியிலும் விளையாடாத நிலையில் காயமடைந்த ஜஸ்பிரித் பும்ராவுக்கு பதில் கடைசி நேரத்தில் தேர்வாகியுள்ளார். அதில் நேற்று ஒரு நாள் மட்டும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்ட அவரது பார்ம் எந்தளவுக்கு இருக்கிறது என்பதை சோதிப்பதற்காக இந்த பயிற்சி போட்டியில் 4 ஓவர்களையும் முழுமையாக வீசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் 19வது ஓவர்கள் ஃபீல்டிங் மட்டும் செய்த அவரை பந்து வீச அழைக்காத கேப்டன் ரோகித் சர்மா வெற்றியை தீர்மானிக்கும் கடைசி ஓவரை மட்டும் கொடுத்தது அனைவருக்கும் ஆச்சரியமாக அமைந்தது. இருப்பினும் அதில் அபாரமாக செயல்பட்ட முகமது ஷமி தாம் எப்போதுமே பார்மில் இருக்கிறேன் என்பதையும் அனுபவமும் தரமும் திறமையும் கொண்டுள்ளதால் ஜஸ்பிரித் பும்ராவுக்கு பதில் விளையாட தகுதியானவன் என்பதையும் நிரூபித்துள்ளார். இந்நிலையில் நீண்ட நாட்கள் கழித்து வரும் ஷமி இந்த உலக கோப்பையில் நேரடியாக விளையாடுவார் என்பதால் ஆரம்பத்திலேயே உச்ச கட்ட சவாலைக் கொடுத்து சோதித்து பார்க்க விரும்பியதால் வேண்டுமென்றே கடைசி ஓவரை கொடுத்ததாக கேப்டன் ரோகித் சர்மா கூறினார்.
இது பற்றி போட்டி முடிந்ததும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “உண்மையை சொல்ல வேண்டுமெனில் அவர் நீண்ட நாட்கள் கழித்து வருகிறார். அதனால் அவருக்கு ஒரு ஓவர் மட்டும் கொடுக்க விரும்பினோம். குறிப்பாக கடைசி ஓவரை கொடுக்கும் திட்டத்தை ஆரம்பம் முதலே வைத்திருந்தோம். அதன் படி நேராக வந்த அவர் டெத் ஓவரில் பந்து வீசினார். ஏனெனில் புதிய பந்தில் அவர் அதிரடியாக பந்து வீசுவார் என்பதை நாங்கள் ஏற்கனவே அறிவோம். அதனால் அவருக்கு ஆரம்பத்திலேயே சற்று சவாலை கொடுக்க நாங்கள் விரும்பினோம். குறிப்பாக அவரால் டெத் ஓவரில் பந்து வீசி சமாளிக்க முடியுமா என்பதை நாங்கள் சோதித்து பார்க்க விரும்பினோம்” என்று கூறினார்.
அதாவது டெத் ஓவர்களில் அபாரமாக செயல்படக்கூடிய பும்ராவுக்கு பதிலாக தேர்வாகி விளையாடப் போகிறார் என்பதால் அவரை போலவே இவராலும் அங்கு சிறப்பாக செயல்பட முடியுமா என்பதைச் சோதிப்பதற்காக கடைசி ஓவரை ஷமியிடம் கொடுத்ததாக ரோகித் சர்மா கூறியுள்ளார். ஏனெனில் பவர்பிளே ஓவர்களில் அவர் சிறப்பாக பந்து வீசுவார் என்பதை ஏற்கனவே அறிந்துள்ளதால் ஆரம்பத்திலேயே அவருக்கு அந்த சோதனை வைக்கப்பட்டதாகவும் ரோகித் சர்மா தெளிவுபடுத்தியுள்ளார். அதில் ஷமி சிறப்பாக செயல்பட்டதை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் விளையாடும் 11 பேர் அணியில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.