
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி ஆகியோர் பிசிசிஐ இணையத்தில் ஒன்றாக பேட்டி கொடுத்துள்ளனர். டெல்லியில் பிறந்து நாட்டுக்காக ஒன்றாக விளையாடிய அவர்கள் ஐபிஎல் தொடரில் 2013, 2023 சீசன்களில் சண்டையிட்டுக் கொண்டனர். அப்படிப்பட்ட அவர்கள் தற்போது இந்திய அணியில் மீண்டும் இணைந்து பேட்டி கொடுத்தது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
19 நிமிடங்களைக் கொண்ட அந்த வீடியோவில் விராட் கோலி மற்றும் கௌதம் கம்பீர் பல்வேறு விஷயங்களை விவாதித்தனர். அப்போது வெளிநாடுகளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி சிறப்பாக செயல்படுவதற்கு விராட் கோலி முக்கிய பங்காற்றியதாக கௌதம் கம்பீர் பாராட்டினார். அத்துடன் 2012 ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக விராட் கோலி அடித்த 183 ரன்கள் தாம் பார்த்ததிலேயே சிறந்த இன்னிங்ஸ் என்றும் கம்பீர் தெரிவித்தார்.
அதன் முடிவில் அடுத்ததாக கேப்டன் ரோஹித் சர்மாவிடம் பேட்டி எடுக்கப் போவதாக கௌதம் கம்பீர் தெரிவித்தார். எனவே ரோஹித்திடம் நீங்கள் ஏதாவது கேட்க வேண்டுமா என்றும் விராட் கோலியிடம் அவர் கேட்டார். அதற்கு தினமும் காலையில் ஊற வைத்த பாதாம் பருப்புகளை சாப்பிடுகிறீர்களா என்று ரோஹித் சர்மாவிடம் கேளுங்கள் என்று சொல்லி விராட் கோலி கலாய்த்தார்.
இது பற்றிய உரையாடல் பின்வருமாறு.
கம்பீர்: விராட் அடுத்த விருந்தினர் ரோஹித். அவரிடம் நான் என்ன கேட்க நீங்கள் விரும்புகிறீர்கள். அவரிடம் எந்த கேள்வியை முதலாவதாக கேட்கட்டும்?
கோலி: ரோஹித் சர்மாவுக்கு மிகவும் எளிமையான கேள்வி. தினமும் காலையில் ஊற வைத்த பாதாம் பருப்புகளை சாப்பிடுகிறீர்களா என்று கேளுங்கள்
கம்பீர்: அப்படியானால் தான் ரோஹித் சர்மா காலை 11 மணிக்கு பதிலாக இரவு 11 மணிக்கு வர மாட்டார் என்று சொல்கிறீர்களா?
கோலி: “ஆம், ரோஹித் சர்மா இது தான் உங்களுக்கான முதல் கேள்வி” என்று அந்த உரையாடல் முடிந்தது. அதாவது இந்திய அணியில் ரோஹித் சர்மா அடிக்கடி தொலைபேசி, பணப்பை உள்ளிட்ட பொருள்களை மறந்து விடுவார் என்று விராட் கோலி 2017இல் கூறியிருந்தார்.
இதையும் படிங்க: ஒதுக்குறேன் அது முடிஞ்சு போன கதை.. இந்தியாவில் அதைப் பற்றி நினைக்கல.. வங்கதேச கேப்டன் பல்டி கருத்து
அதற்கு ஆதாரமாகவும் மறதியின் உச்சமாகவும் 2023ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான ஒரு போட்டியில் டாஸ் வென்ற ரோகித் சர்மா பேட்டிங் செய்வதா அல்லது பவுலிங் செய்வதா என்பதை மறந்து ஒன்றரை நிமிடம் தடுமாறினார். அதே போல மற்றொரு போட்டியில் டாஸ் நாணயத்தை தனது பாக்கெட்டில் வைத்ததை மறந்த அவர் நாணயம் எங்கே என்று அம்பயரிடம் கேட்டார். அதை கலாய்க்கும் வகையிலேயே விராட் கோலி தற்போது பாதாம் சாப்பிடுகிறீர்களா என்று கேட்பது குறிப்பிடப்பட்டது.