ஐசிசி 2024 உலகக் கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி ஒட்டுமொத்த மக்களையும் கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது. ஏனெனில் ஐசிசி தொடர்களில் கடந்த 10 வருடங்களாக இந்தியா தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்தது. ஆனால் அந்த அவமானத் தோல்விகளை இத்தொடரில் உடைத்துள்ள இந்தியா 17 வருடங்கள் கழித்து டி20 உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது.
இந்த வெற்றிக்கு ஜஸ்ப்ரித் பும்ரா, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட அனைவருமே முக்கிய பங்காற்றினார்கள். இருப்பினும் இந்த வெற்றிக்கு கேப்டன் ரோகித் சர்மா முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறார். ஏனெனில் அவர் தான் சொந்த சாதனையைப் பற்றி கவலைப்படாமல் எதிரணியை அடித்து நொறுக்க வேண்டும் என்ற எண்ணத்தை இந்திய அணியில் உண்டாக்கி வெற்றிக்கான விதையை விதைத்தார்.
கவாஸ்கர் பாராட்டு:
இந்நிலையில் உலகக் கோப்பை வென்ற கபில் தேவ், எம்எஸ் தோனி போலவே ரோஹித் சர்மாவும் மக்களின் கேப்டனாக உருவெடுத்துள்ளதாக ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் பாராட்டியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்தியாவுக்கு உலகக் கோப்பைகளை வென்ற கபில் தேவ் மற்றும் தோனி ஆகிய 2 மகத்தான கேப்டன்களுடன் ரோகித் சர்மாவும் இணைந்துள்ளார். அந்த இருவரையும் போலவே ரோஹித் சர்மாவும் மக்களின் கேப்டன்”
“இந்திய அணி மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய மக்களால் அவர் விரும்பப்படுகிறார். அவருடைய கேப்டன்ஷிப் மற்றும் நுணுக்கங்கள் ஆகியவை ரசிகர்களால் விரும்பப்படுகின்றன. அவருடைய சில முடிவுகள் உங்களுடைய தலையை சொரிய வைக்கும். ஆனால் கடைசியில் அது தான் அணிக்கு தேவையான வெற்றியை பெற்றுக் கொடுக்கக்கூடிய தருணமாக அமையும்”
“அணியை முன்னின்று வழி நடத்திய அவர் சொந்த சாதனைகளைப் பற்றி கவலைப்படாமல் ஒவ்வொரு முறையும் அணிக்கு அற்புதமான துவக்கத்தை கொடுத்தார். எனவே அவரை கேப்டனாக பெறுவதற்கு இந்தியா அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும். அதே போல வீரர்கள் இயற்கையாக தங்களுடைய ஆட்டத்தால் பாராட்டுகளையும் வெளிச்சத்தையும் பெறுகின்றனர்”
இதையும் படிங்க: ரோஹித் சர்மா தலைமையில் இந்தியா அந்த 2 வரலாற்றையும் படைக்கும்.. ஜெய் ஷா நம்பிக்கையுடன் அறிவிப்பு
“ஆனால் வெற்றிக்கு பயிற்சியாளர்களும் முக்கிய பங்காற்றியுள்ளனர். அந்த வகையில் ராகுல் டிராவிட் இந்த வெற்றியில் மிகப்பெரிய வேலை செய்துள்ளார். ரோஹித் – ராகுல் காம்பினேஷன் இத்தொடரில் அற்புதமாக செயல்பட்டது. அவர்கள் கொஞ்சமும் சுயநலமின்றி அணியின் நலனுக்காக இந்தியாவுக்காக அனைத்தையும் செய்தனர்” என்று கூறினார். அந்த வகையில் சுயநலமின்றி செயல்பட்ட ராகுல் டிராவிட் பயிற்சியாளராக விடை பெற்றுள்ளார். ரோஹித் சர்மா டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.



