
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா கடந்த பல ஆண்டுகளாகவே மூன்று வகையான இந்திய அணிக்கும் கேப்டனாக செயல்பட்டு வந்திருந்த வேளையில் கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையை வென்ற கையோடு டி20 வடிவிலான போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். அதனை தொடர்ந்து ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக கேப்டனாக தொடர்ந்து விளையாடி வந்தார்.
ஆனால் சொந்த மண்ணில் நடைபெற்ற நியூசிலாந்து தொடர் மற்றும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் என அடுத்ததடுத்த மிக முக்கிய தொடர்களில் இந்திய அணி மோசமாக தோற்றதால் அவரது கேப்டன்சி மீது ஒரு மிகப்பெரிய விமர்சனம் இருந்தது. அதோடு அனுபவ வீரரான அவர் தானாக ஓய்வை அறிவித்து இளம்வீரர்களுக்கு வழிவிட வேண்டும் என்ற பேச்சும் இருந்தது.
ஆனால்அதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரை கைப்பற்றி அந்த விமர்சனங்களுக்கு எல்லாம் ரோகித் சர்மா பதிலடி கொடுத்திருந்தார். இப்படி அடுத்தடுத்த இரண்டு ஐசிசி கோப்பைகளை வென்ற கேப்டன் ரோகித் சர்மாவுக்கு பாராட்டுகளும் குவிந்தது. அதோடு தான் இன்னும் ஓய்வு குறித்த முடிவை எடுக்கவில்லை என்றும் தொடர்ந்து டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடுவேன் என்றும் ரோகித் சர்மா அறிவித்திருந்தார்.
தற்போது ஐ பி எல் போட்டிகளில் விளையாடி வரும் அவர் எதிர்வரும் இங்கிலாந்து தொடருக்கான டெஸ்ட் அணியிலும் கேப்டனாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அந்த இங்கிலாந்து தொடருக்கான டெஸ்ட் அணியின் கேப்டன் பதிவிலிருந்து ரோகித் சர்மாவை நீக்க பிசிசிஐ முடிவு எடுத்துள்ளதாக பரவலாக ஒரு தகவல் வெளியாகியது.
இந்நிலையில் இன்று திடீரென டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக அதிரடி அறிவிப்பு ஒன்றை ரோகித் சர்மா வெளியிட்டுள்ளார். அவரது இந்த அறிவிப்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க : சி.எஸ்.கே அணிக்கெதிரான போட்டியில் வெங்கடேஷ் ஐயர் விளையாடாதது ஏன்? – வெளியான தகவல்
தற்போது 38 வயதாகும் ரோகித் சர்மா டி20 மற்றும் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றாலும் தொடர்ச்சியாக ஒருநாள் போட்டிகளில் விளையாடுவேன் என்றும் உறுதி அளித்துள்ளார். கடந்த 2013-ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக அறிமுகமான அவர் இதுவரை 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 12 சதம் மற்றும் 18 அரைசதங்களுடன் 4301 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.