IND vs AUS : அடஅட, ரோஹித் சர்மா – விராட் கோலி கொண்டாட்டத்தை பார்த்து ரசிகர்கள் பூரிக்கும் வைரல் வீடியோ இதோ

Rohit Sharma Virat Kohli
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் 209 ரன்களை கட்டுப்படுத்த முடியாமல் தோற்ற இந்தியா நாக்பூரில் 8 ஓவர்களாக நடைபெற்ற 2வது போட்டியில் கொதித்தெழுந்து வெற்றியை பதிவு செய்து தொடரை சமன் செய்தது. அந்த நிலைமையில் ஹைதராபாத் நகரில் நடைபெற்ற வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்து அதிரடியாக விளையாடினாலும் 200 ரன்களை எடுக்க தவறிய ஆஸ்திரேலியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 186/7 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக இளம் தொடக்க வீரர் கேமரூன் கிரீன் அதிரடியாக 52 (21) ரன்களும் டிம் டேவிட் 54 (27) ரன்களும் எடுக்க இந்தியா சார்பில் பந்து வீச்சில் அதிகபட்சமாக அக்சர் பட்டேல் 3 விக்கெட்டுகளை எடுத்தார்.

அதை தொடர்ந்து 187 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு கேஎல் ராகுல் மற்றும் ரோஹித் சர்மா ஆகிய தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினர். அதனால் 30/2 என தடுமாறிய இந்தியாவுக்கு 3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்து 104 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியை உறுதி செய்த சூரியகுமார் யாதவ் அதிரடியாக 5 பவுண்டரி 5 சிக்சருடன் 69 (36) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவருடன் நிதானத்தை வெளிப்படுத்திய விராட் கோலி 3 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 63 (48) ரன்கள் எடுத்து அவுட்டாக இறுதியில் ஹர்திக் பாண்டியா 2 பவுண்டரி 1 சிக்சருடன் 25* (16) ரன்களை விளாசி ஃபினிசிங் கொடுத்தார்.

- Advertisement -

மீண்டெழுந்த இந்தியா:
அதனால் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா சொந்த மண்ணில் நாங்கள் எப்போதுமே வலுவான அணி என்பதை நிரூபித்து உலக டி20 சாம்பியன் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து 2 – 1 (3) என்ற கணக்கில் சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் கோப்பையை வென்றது. துபாயில் கடந்த வருடம் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைக்குப்பின் முழுநேர கேப்டனாக பொறுப்பேற்ற ரோகித் சர்மா தலைமையில் கடந்த ஒரு வருடமாக பங்கேற்ற அத்தனை இருதரப்பு தொடர்களிலும் வெற்றி நடை போட்டு வந்த இந்தியா சமீபத்திய ஆசிய கோப்பையில் தோற்று பின்னடைவை சந்தித்தது.

இருப்பினும் யானைக்கும் அடி சறுக்கியதை போல் அந்த தோல்வியிலிருந்து மீண்டெழுந்துள்ள இந்தியா விரைவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையை வெல்வதற்கான வெற்றிப் பாதையில் மீண்டும் பயணிக்க தொடங்கியுள்ளது. முன்னதாக நேற்றைய போட்டியில் 17 ரன்களில் அவுட்டான கேப்டன் ரோகித் சர்மா ஏமாற்றத்துடன் பெவிலியனில் இருந்து போட்டியை பார்த்த நிலையில் 63 ரன்களை குவித்த விராட் கோலி வெற்றியை உறுதி செய்து கடைசி ஓவரின் 2வது பந்தில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

அதை பயன்படுத்திய ஆஸ்திரேலியா அடுத்த 2 பந்துகளில் 1 ரன் மட்டுமே கொடுத்ததால் கடைசி 2 பந்துகளில் வெற்றிக்கு 4 ரன்கள் தேவைப்பட்டது. அதனால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் டேனியல் சாம்ஸ் வீசிய 5வது பந்தியில் அதிரடியான சிக்ஸரை பறக்க விட்ட பாண்டியா இந்தியாவை வெற்றி பெற வைத்தார். அப்போது ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் இந்திய வீரர்களும் துள்ளிக்குதித்து வெற்றியை கொண்டாடிய நிலையில் அந்த பரபரப்பான தருணத்தை பெவிலியனுக்கு செல்லும் மாடிப் படிக்கட்டில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்த விராட் கோலி அருகே அமர்ந்திருந்த ரோகித் சர்மாவை கட்டிபிடித்து முதுகு மீது தட்டி மகிழ்ச்சியை கொண்டாடினார்.

அதேபோல் குனிந்தவாறே விராட் கோலியை கட்டி பிடித்து ரோகித் சர்மா மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். நவீன கிரிக்கெட்டில் இந்தியாவின் ஜாம்பவான்களாக ஏராளமான வெற்றிகளை பெற்றுக்கொடுத்த சூப்பர் ஸ்டார்களாக முன்னாள் இந்நாள் கேப்டன்களாக திகழும் இவர்கள் நண்பர்களைப் போல் இப்படி மெய்மறந்து கொண்டாடிய வீடியோ ரசிகர்களிடையே பூரிப்பை ஏற்படுத்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதே போல் பரபரப்பான சேசிங் செய்கையில் நிதானமாக விளையாடி கடைசி ஓவரில் அவுட்டாகி வெற்றியை உறுதி செய்து பெவிலியனுக்கு திரும்பிய விராட் கோலியை இந்திய வீரர்கள் எழுந்து நின்று கைதட்டி வரவேற்றனர். அவர்களை விட அதே படிக்கட்டில் கேப்டன் ரோகித் சர்மா அவருக்காக காத்திருந்து முதுகு மீது தட்டி வரவேற்பையும் பாராட்டையும் தெரிவித்தார்.

முன்னதாக கடந்த வருடம் நிகழ்ந்த கேப்டன்ஷிப் சர்ச்சையில் இருவருக்கும் சண்டை, விரிசல் போன்ற செய்திகள் வெளியானது. ஆனால் இப்படி ஒருவருக்கொருவர் நல்ல நட்பை வெளிப்படுத்தி கொண்டாடிய இந்த 2 ஜாம்பவான்களும் நட்பாக பழகுவது அந்த செய்திகள் அனைத்தும் வதந்தி என்று மீண்டுமொரு முறை நிரூபித்துள்ளது.

Advertisement