ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பை மற்றும் நியூசிலாந்து தொடரை முடித்துக் கொண்டு தாயகம் திரும்பிய இந்தியா அடுத்ததாக வங்கதேசத்துக்கு பயணித்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. வரும் 2023இல் சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் இத்தொடரில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட சீனியர்கள் அடங்கிய முதன்மை இந்திய அணி களமிறங்குகிறது. டி20 உலக கோப்பையில் சுமாரான செயல்பாடுகளை வெளிப்படுத்திய ரோகித் சர்மா உள்ளிட்ட சீனியர்களுக்கு பதிலாக இளம் வீரர்களுடன் டி20 கிரிக்கெட்டில் புதிய அணி உருவாக்கப்பட்டாலும் ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து அவர்களே 2023 உலகக் கோப்பை வரை விளையாட உள்ளனர்.
அதனால் விமர்சனங்களை சந்தித்துள்ள சீனியர் வீரர்கள் இத்தொடரில் அபாரமாக செயல்பட்டு இழந்த தங்களது பார்மையும் பெயரையும் மீட்டெடுத்து இந்தியாவுக்கு கோப்பை வென்று கொடுக்க தயாராகியுள்ளார்கள். மறுபுறம் என்னதான் சமீப காலங்களில் அடுத்தடுத்த தொடர் தோல்விகளை சந்தித்தாலும் சொந்த மண்ணில் எப்போதுமே சவாலான செயல்பாடுகளை வெளிப்படுத்தும் அணியாக திகழும் வங்கதேசம் கடைசியாக கடந்த 2015இல் இந்தியாவை எதிர்கொண்ட போது 2 – 1 (3) என்ற கணக்கில் தொடரை வென்று வரலாற்று வெற்றியை சுவைத்தது.
தப்பிச்சுட்டாங்க:
அந்த வெற்றிக்கு தொடர் நாயகன் விருது வென்று முக்கிய பங்காற்றிய முஸ்தபிசுர் ரகுமான், சாகிப் அல் ஹசன் உள்ளிட்ட முக்கிய கிரிக்கெட் வீரர்கள் இத்தொடரிலும் விளையாடுவதால் தங்களது அணி சொந்த மண்ணில் வெல்லும் என்று வங்கதேச ரசிகர்கள் நம்புகிறார்கள். இருப்பினும் நட்சத்திர அதிரடி தொடக்க வீரரான தமீம் இஃபால் இத்தொடரிலிருந்து முழுமையாக காயத்தால் வெளியேறியது வங்கதேச அணிக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதைவிட தற்சமயத்தில் அற்புதமான பார்மில் இருக்கும் துடிதுடிப்பான வேகப்பந்து வீச்சாளரான தஸ்கின் அஹமதும் இத்தொடரின் முதல் போட்டியிலிருந்து காயத்தால் வெளியேறியது அந்த அணிக்கு மேலும் பின்னடைவை கொடுக்கிறது.
இந்நிலையில் டி20 உலக கோப்பையில் 8 விக்கெட்டுகளை சாய்த்து அதிக விக்கெட் எடுத்த வங்கதேச பவுலராக சாதனை படைத்த தஸ்கின் அகமது இல்லாதது ரோகித் சர்மா – ஷிகர் தவான் போன்ற இந்தியா ஓப்பனிங் பேட்ஸ்மேன்களுக்கு நிம்மதியை கொடுக்கும் என்று தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். அதே போல் தமீம் இஃபால் போன்ற அனுபவம் வாய்ந்த தரமான வீரர் இல்லாதது இத்தொடர் முழுவதும் இந்தியாவுக்கு சாதகமாக மாறி வெற்றி வாய்ப்பை அதிகப்படுத்தும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.
“தஸ்கின் அஹமது வங்கதேசத்தின் டாப் பவுலர். அவர் தான் அவர்களது அணிக்காக டி20 உலக கோப்பையில் சிறப்பாக செயல்பட்டார். என்ன தான் முஸ்தபிசுர் ரஹ்மான் வங்கதேச அணியில் இருந்தாலும் தஸ்கின் அவர்களது வளர்ந்து வரும் தரமான பவுலராக கருதப்படுகிறார். அவரால் ஆரம்பகட்ட கடினமான ஓவர்களை சிறப்பாக பந்து வீசி ஆரம்பத்திலேயே சில முக்கிய விக்கெட்டுகளை எடுத்து கொடுக்க முடியும். அதனால் அவர் இல்லாதது வங்கதேசம் அணிக்கு மிகப்பெரிய இழப்பாகும். அதே சமயம் அவர் இல்லாததால் ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் நிச்சயமாக நிம்மதி பெருமூச்சு விடுவார்கள்”
“அவரைப் போலவே தமீம் இக்பால் அற்புதமான வீரர். அவர் வங்கதேசத்தின் ஓப்பனிங் இடத்தை கடந்த பல வருடங்களாக தனது தோள் மீது சுமந்து வருகிறார். சமீப காலங்கள் உட்பட ஒட்டுமொத்த ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அதிரடியாக விளையாடும் அவர் வங்கதேச அணியின் மிக முக்கியமான வீரர்களில் ஒருவர்” என்று கூறினார்.
இருப்பினும் வரலாற்றில் இதே ரோகித் சர்மா, சிகர் தவான் போன்ற இந்திய வீரர்கள் அதே தஸ்கின் அகமது போன்ற வங்கதேச வீரர்களை அதன் சொந்த மண்ணிலேயே பலமுறை அடித்து நொறுக்கி இந்தியாவுக்கு வெற்றிகள் பெற்றுக் கொடுத்துள்ளார்கள். அதனால் இம்முறையும் அவர்கள் இருந்தாலும் இல்லையென்றாலும் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வெற்றிக்கு போராடுவார்கள் என்று நம்பலாம்.