இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி சமீப காலமாகவே பேட்டிங் பார்மின்றி தடுமாறி வருவதாக பலராலும் பேசப்பட்ட வேளையில் நடைபெற்று வரும் சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடரானது அவருக்கு மிக முக்கியமான தொடராக பார்க்கப்பட்டது. இந்த தொடரில் விராட் கோலி சிறப்பாக செயல்படாத பட்சத்தில் அவரது எதிர்காலம் கேள்விக்குறியாகும் என்கிற விவாதங்களும் பலரது மத்தியிலும் இருந்து வந்தன. எனவே இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரானது விராட் கோலிக்கு மிக முக்கியமான தொடராக மாறியுள்ளது.
விராட் கோலியிடம் வேண்டுகோள் வைத்த ரோஹித் சர்மா :
ஏற்கனவே வங்கதேச அணிக்கு எதிரான முதல் போட்டியில் சிறப்பான துவக்கம் கிடைத்தும் பெரிய ரன் குவிக்காத விராட் கோலி நேற்று பாகிஸ்தான் அணிக்கு எதிராக அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்தவகையில் எதிர்பார்த்த படியே மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி 111 பந்துகளில் ஏழு பவுண்டரிகளுடன் 100 ரன்கள் அடித்து சர்வேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 51-வது சதத்தை பதிவு செய்ததோடு மட்டுமின்றி ஆட்டமிழக்காமல் இந்திய அணியையும் வெற்றிக்கு அழைத்துச் சென்றிருந்தார்.
அவரது இந்த சதம் அவரின் மீதான அனைவரது கேள்விகளையும் நொறுக்கி தள்ளியது. இந்நிலையில் நேற்றைய போட்டியின் போது இந்திய அணி எளிதாக வெற்றியை நோக்கி சென்றாலும் கடைசி கட்டத்தில் ரசிகர்களுக்கு ஒரு பதட்டம் ஏற்பட்டது. ஏனெனில் விராட் கோலி 95 ரன்களில் இருந்தபோது வெற்றிக்கு 2 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலை இருந்தது. இதனால் விராட் கோலி சதத்தை பூர்த்தி செய்வாரா? என்கிற எதிர்பார்ப்பு எழுந்தது.
அந்த நேரத்தில் ரோகித் சர்மா விராட் கோலியை பார்த்து அன்பாக வைத்த ஒரு கோரிக்கையும் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தது. அந்த வகையில் போட்டியின் 43-வது ஓவரின் போது முதல் பந்தை விராட் கோலி சந்தித்த வேளையில் ரோகித் சர்மா ஓய்வறையில் இருந்து விராட் கோலியை பார்த்து சிக்சர் அடித்து போட்டியை முடிப்பது மட்டுமில்லாமல் சதத்தையும் எடுங்கள் என்பது போல கை காண்பித்தார்.
ஆனால் முதல் பந்தை சிங்கிள் அடித்த விராட் கோலி மீண்டும் இரண்டாவது பந்தில் அக்சர் பட்டேல் சிங்கிள் கொடுக்கவே மூன்றாவது பந்திற்கு ஸ்ட்ரைக்கில் வந்தார். அப்போது 96 ரன்கள் அடித்திருந்த கோலி இறுதியாக ஒரு பவுண்டரி அடித்து தனது சதத்தை பூர்த்தி செய்து அணியையும் வெற்றிக்கு அழைத்துச் சென்றார். சதத்தை நெருங்கிய வேளையில் விராட் கோலி சிங்கிள் ஓடியபோது அனைவருமே பதட்டமாக இருந்தனர்.
இதையும் படிங்க : பாகிஸ்தானை பாத்தாலே அடிக்கும் கிங் கோலி இந்த உலக சாதனையும் செய்யனும்.. சோயப் அக்தர் பாராட்டு
அப்போது ரோகித் சர்மா மட்டும் விராட் கோலி சிக்சர் அடிக்க கேட்டுக் கொண்டார் ஆனாலும் அணியின் வெற்றியே முக்கியம் என்பதால் பொறுமை காத்த விராட் கோலி கடைசியாக பவுண்டரி அடித்து தனது சதத்தையும் வெற்றியையும் பூர்த்தி செய்தார். அதுமட்டும் இன்றி போட்டி முடிந்ததும் ரோகித் சர்மாவையும் பார்த்து சிரித்த அவர் நான் இருக்கிறேன் கவலைப்பட வேண்டாம் என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அவர்கள் இருவரது இந்த உரையாடல் ரசிகர்களையும் கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.



