ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது டி20 உலக கோப்பை தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் இதுவரை இந்திய அணி விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. அதைத்தொடர்ந்து இறுதி போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொள்ள இருக்கிறது.
இன்று இரவு இந்திய நேரப்படி 8 மணிக்கு துவங்கும் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையுடன் நாடு திரும்ப வேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. ஏனெனில் கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது.
அந்த தோல்வியை ஜீரணிக்க முடியாத ரசிகர்கள் மைதானத்திலேயே கண்ணீர் சிந்தினர். அதோடு அந்த தோல்வி ரசிகர்களுக்கும் மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்தது. அதனால் ஏற்பட்ட வலியை தீர்க்க இந்த வெற்றி இந்திய அணிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இன்று நடைபெற இருக்கும் இந்த இறுதி போட்டி இந்திய அணியை சேர்ந்த மூன்று வீரர்களுக்கு கடைசி டி20 போட்டியாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் கடைசி டி20 போட்டியில் விளையாட இருக்கும் அந்த மூன்று நபர்கள் : ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தான் என்று தெரிகிறது.
ஏனெனில் தற்போது 37 வயதாகும் ரோகித் சர்மா அடுத்ததாக 2026-இல் நடக்கும் டி20 உலக கோப்பை தொடரில் விளையாட வாய்ப்பு இல்லை எனவே இளம் வீரர்களுக்கு வழிவிட்டு அவர் இந்த போட்டியுடன் ஒதுங்க அதிக வாய்ப்பு உள்ளது. அதேபோன்று 35 வயதை எட்டியுள்ள விராட் கோலி சமீபகாலமாகவே ஏதாவது ஒரு வகையான போட்டியிலிருந்து ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படும் வேளையில் டி20 போட்டிகளில் ஓய்வு பெற்றுவிட்டு ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்த அதிக வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க : 13 வருடத்துக்கு முன்னாடி தோனி செஞ்சதை மனசுல நினைச்சுக்கோங்க.. தடுமாறும் விராட் கோலிக்கு.. ஃகைப் அட்வைஸ்
அதனால் அவரும் இன்றைய போட்டியில் கடைசியாக விளையாட இருப்பதாக தெரிகிறது. அதேபோன்று 35 வயதான ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவும் அடுத்த தலைமுறை வீரர்களுக்கு வழிவிடும் விதமாக இந்த போட்டியுடன் டி20 கிரிக்கெட்டில் இருந்து நீக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.



