இலங்கை நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது அந்நாட்டு அணிக்கெதிராக நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்துள்ள வேளையில் இந்த தொடரை தற்போதே இந்திய அணி இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது.
அதனைத் தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது நாளை நடைபெறவுள்ளது. இந்த டி20 தொடர் முடிவடைந்த கையோடு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரும் நடைபெற இருக்கிறது.
ஏற்கனவே இந்தியாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலக கோப்பை தொடரில் மோசமான தோல்வியை சந்தித்த இலங்கை அணி தங்களது மண்ணில் வைத்து இந்திய அணியை வீழ்த்த மும்முரமாக தயாராகி வருகிறது.
அதேவேளையில் அண்மையில் டி20 உலக கோப்பை தொடரை வென்று கொடுத்த கேப்டன் ரோஹித் சர்மா இந்திய ஒருநாள் அணிக்கான கேப்டனாக இருப்பதால் அவர் தற்போது இலங்கை வந்தடைந்துள்ளார். டி20 உலக கோப்பை தொடர் முடிவடைந்த பின்னர் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த அவர் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவார் என்று தெரிவிக்கப்பட்டது.
அதேபோன்று மற்றொரு நட்சத்திர ஆட்டக்காரரான விராட் கோலியும் இன்று இலங்கை வந்தடைந்துள்ளார். மேலும் ஒருநாள் தொடருக்கான அணியில் இடம் பிடித்துள்ள ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல் ராகுல் ஆகியோரும் இலங்கைக்கு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இவர்கள் அனைவரும் அபிஷேக் நாயர் தலைமையில் இன்று பயிற்சியில் ஈடுபடுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க : நானா தற்காலிக கேப்டனா?.. ஸ்காட் ஸ்டைரிஸ் பேச்சுக்கு தனது செயலின் மூலம் பதிலடி கொடுத்த – சூரியகுமார் யாதவ்
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது ஆகஸ்ட் 2-ம் தேதி முதல் நடைபெற உள்ளது. இந்த ஒருநாள் தொடரை ஆன்லைனில் காண விரும்புவோர் சோனி லைவ் ஆப் மூலமாகவும், தொலைக்காட்சியில் பார்க்க விரும்புவோர் சோனி குடும்ப தொலைக்காட்சியில் கண்டு களிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.



