ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரின் “சூப்பர் 4” சுற்றின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக தோல்வியை சந்தித்த இந்திய அணியானது அடுத்ததாக இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்த தொடரில் இறுதிப்போட்டியில் விளையாட முடியும் என்கிற இக்கட்டான வேளையில் துபாய் மைதானத்தில் இலங்கை அணியை எதிர்த்து விளையாடி வருகிறது.
கடந்த போட்டியின் போது ஏகப்பட்ட மாற்றங்களை இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தேவையில்லாமல் செய்ததால் தோல்வி கிடைத்தது என்றும் அனுபவ வீரரான தினேஷ் கார்த்திக்குக்கு பதிலாக ரிஷப் பண்ட்டை சேர்த்தது தவறு என்றும் ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து இருந்தனர்.
இந்நிலையில் இன்று இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்று வரும் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் குவித்தது. அதனை தொடர்ந்து 174 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது இலங்கை அணி விளையாடி வருகிறது.
இந்நிலையில் இந்த போட்டியிலும் மீண்டும் தினேஷ் கார்த்திக்கை அணியில் சேர்க்காதது மிகப்பெரிய தவறு என்று ரசிகர்கள் பலரும் சுட்டிக்காட்டி வருகின்றனர். ஏனெனில் இந்த போட்டியின் ஆரம்பத்திலேயே ராகுல் மற்றும் கோலி ஆகியோர் ஆட்டம் இழந்தாலும் ரோகித் சர்மா மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோர் மிகச் சிறப்பாக விளையாடி அணியின் ரன் குவிப்பை உயர்த்தினர்.
ஒரு கட்டத்தில் 13 ஓவர்களில் இந்திய அணி நல்ல நிலையில் இருந்த போது ரோஹித் ஆட்டம் இழந்ததும் அடுத்தடுத்து வந்த வீரர்களால் பெரிய ரன்களை குவிக்க முடியாமல் இறுதியில் இந்திய அணியால் 173 ரன்களை மட்டுமே குவிக்க முடிந்தது. அதிலும் குறிப்பாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் மீண்டும் ஒருமுறை 13 பந்துகளில் 17 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்து வெளியேறினார்.
இதையும் படிங்க : ரவீந்திர ஜடேஜாவை தொடர்ந்து ஆசியக்கோப்பை தொடரிலிருந்து வெளியேறிய இந்திய வீரர் – அதிகாரபூர்வ அறிவிப்பு
ஆனால் இதே நிலையில் தினேஷ் கார்த்திக் இருந்திருந்தால் நிச்சயம் டெத் ஓவர்களில் மிகச் சிறப்பான அதிரடியை வெளிப்படுத்தி இன்னும் கூடுதலாக அணிக்கு ரன்களை சேர்த்து கொடுத்திருப்பார் என்றும் அனுபவ வீரரான அவரை மீண்டும் மீண்டும் அணியிலிருந்து புறக்கணிப்பது பெரிய தவறு என்று ரசிகர்கள் சுட்டிக்காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.