
இந்திய கிரிக்கெட் அணி கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்காவிடம் 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தது. அதனால் 15 வருடங்கள் கழித்து இந்தியா சொந்த மண்ணில் நடைபெற்ற ஒரு டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியிடம் தோல்வியைத் தழுவியது. அத்துடன் சொந்த மண்ணில் குறைந்தபட்ச இலக்கை (124) சேசிங் செய்ய முடியாமல் இந்தியா மோசமான சாதனையும் படைத்தது.
அந்தத் தோல்விக்கு கொல்கத்தாவில் அமைக்கப்பட்டிருந்த சுழலுக்கு சாதகமான பிட்ச் முக்கிய காரணமாக அமைந்தது. இத்தனைக்கும் கடந்த நியூசிலாந்து தொடரில் இந்தியா சொந்த மண்ணில் தோல்வியைச் சந்திப்பதற்கு சுழலுக்கு சாதகமான பிட்ச்களே முக்கிய காரணமாக அமைந்தது. இருப்பினும் அதிலிருந்து பாடத்தைக் கற்காத இந்திய அணி மீண்டும் கொல்கத்தாவில் அதே போன்ற ஆடுகளத்தை அமைத்து அவமானத் தோல்வியைச் சந்தித்தது ரசிகர்களைக் கடுப்பேற்றியது.
ஏனெனில் தாங்கள் தான் கொல்கத்தாவில் அது போன்ற ஆடுகளம் வேண்டும் என்று கேட்டு வாங்கியதாக இந்திய அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்தார். அதன் காரணமாக நிறைய முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் கௌதம் கம்பீரை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் இந்திய அணியின் தோல்விக்கு கௌதம் கம்பீர் மட்டும் காரணமல்ல என்று முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார்.
ஏனென்றால் பயிற்சியாளராக ஆலோசனைகளை மட்டுமே தெரிவிக்கும் கௌதம் கம்பீர் களத்திற்கு சென்று விளையாடுவதில்லை என்று உத்தப்பா கூறியுள்ளார். அந்த அடிப்படை புரியாமல் பயிற்சியாளரை இந்திய ரசிகர்கள் விமர்சிப்பதாகவும் அவர் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். சொல்லப்போனால் இது சர்வதேச கிரிக்கெட்டில் 20000+ ரன்கள் அடித்த ஜாம்பவான் ராகுல் டிராவிட்டையே பயிற்சியாளராக இருந்த போது விமர்சித்த நாடு என்றும் அவர் கூறியுள்ளார்.
எனவே கௌதம் கம்பீரை ரசிகர்கள் விமர்சிப்பதில் ஆச்சரியமில்லை என்று தெரிவிக்கும் உத்தப்பா இது பற்றி பேசியது பின்வருமாறு. “நான் கௌதம் கம்பீருக்கு ஆதரவு கொடுப்பதாக நேற்று என்னுடைய யூடியூப் சேனலில் ஒரு கமெண்ட்டைப் பார்த்தேன். நண்பரே பயிற்சியாளர் களத்திற்கு சென்று விளையாடுவதில்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்”
இதையும் படிங்க: 109 ரன்ஸ்.. பிரைன் லாராவை முந்திய ஷாய் ஹோப் அபார சாதனை.. வெ.இ’ஸை சாய்த்த நியூஸிலாந்து வெற்றி
“கடந்த காலங்களில் அவர்கள் ராகுல் டிராவிட்டை விமர்சித்தது எனக்கு எந்த உணர்வையும் கொடுக்கவில்லை. சர்வதேச கிரிக்கெட்டில் 20000 – 30000 ரன்கள் அடிப்பது சுலபம் அல்ல. அதை செய்த டிராவிட் கிண்டலடிக்கப்பட்டார் என்றால் இங்கே கௌதம் கம்பீர் உட்பட யார் வேண்டுமானாலும் கிண்டலடிக்கப் படலாம்” என்று கூறினார்.