
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டியானது நேற்று அகமதாபாத் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 30 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி இந்த 5 போட்டிகள் கொண்ட தொடரினை மூன்றுக்கு ஒன்று (3-1) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 231 ரன்களை குவித்தது.
பின்னர் 232 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய தென்னாப்பிரிக்கா அணியானது 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் மட்டுமே அடித்ததால் 30 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி இந்த போட்டியில் அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக பேட்டிங்கில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஹார்திக் பாண்டியா 25 பந்துகளில் 63 ரன்களை குவித்து அசத்தினார்.
அதேபோன்று பந்து வீச்சிலும் மூன்று ஓவர்களை வீசி 41 ரன்கள் விட்டு கொடுத்து 1 விக்கெட்டை கைப்பற்றி சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தினார். இப்படி பேட்டிங் மற்றும் பௌலிங் என இரண்டிலுமே அசத்திய அவருக்கு இந்த போட்டிக்கான ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது 4 ஓவர்கள் பந்துவீசி 17 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஜஸ்ப்ரீத் பும்ரா தான் போட்டிக்கு திருப்புமுனையை ஏற்படுத்தி கொடுத்தார் என முன்னாள் இந்திய வீரரான ராபின் உத்தப்பா அவரை வெகுவாக பாராட்டியுள்ளார். இது குறித்து பேசி அவர் கூறுகையில் :
இந்த போட்டியின் ஒரு கட்டத்தில் தென்னாப்பிரிக்க அணி மிகச் சிறப்பாக வெற்றியை நோக்கி சென்று கொண்டிருந்தது. அதிலும் குறிப்பாக குவிண்டன் டி காக் 35 பந்துகளில் 65 ரன்கள் குவித்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய வேளையில் அவர் ஆட்டமிழக்காமல் இருந்திருந்தால் நிச்சயம் தென்னாப்பிரிக்க அணி வெற்றியை நோக்கி வெகு எளிதாக சென்றிருக்கும். அந்த நேரத்தில் டி காக்கின் விக்கெட்டை பும்ரா வீழ்த்தியது தான் இந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு திறப்பு முனையாக நான் பார்க்கிறேன்.
இதையும் படிங்க : துணைக் கேப்டன் கில் திடீரென கழற்றி விடப்பட்டு இஷான் சேர்க்கப்பட்டது ஏன்? அகர்கர் விளக்கம்
ஏனெனில் எப்பொழுதுமே இந்திய அணிக்கு தேவையான நேரத்தில் விக்கெட்டை வீழ்த்தும் வீரராக நான் பும்ராவை பார்க்கிறேன். அவர் மட்டும் அந்த விக்கெட்டை எடுக்கவில்லை என்றால் இவ்வளவு பெரிய சரிவை தென்னாப்பிரிக்க அணி சந்தித்திருக்காது என்றும் அந்த செயல்பாடு குறித்து ராபின் உத்தப்பா பாராட்டியது குறிப்பிடத்தக்கது.