
இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. அத்தொடருக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா கழற்றி விடப்பட்டு சுப்மன் கில் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இத்தனைக்கும் 2024 டி20 உலகக் கோப்பை, 2025 சாம்பியன்ஸ் ட்ராபியை கேப்டனாக வென்ற ரோஹித் சர்மா 2027 உலகக் கோப்பை வரை இந்திய அணியை தலைமைத் தாங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அப்போது 40 வயதில் அவரால் அசத்த முடியுமா? என்று சந்தேகிக்கும் தேர்வுக்குழு இப்போதே கழற்றி விட்டு கில் தலைமையிலான புதிய அணியை உருவாக்கத் துவங்கியுள்ளது. அதனால் 2027 உலகக் கோப்பையில் விராட் கோலி, ரோஹித் சர்மா விளையாடுவது சந்தேகமாகியுள்ளது. இந்நிலையில் ரோஹித் சர்மாவை கழற்றி விட்டது சரியான முடிவு என்று முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார்.
ஏனெனில் டெஸ்ட், டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற்று விட்ட ரோஹித் சர்மா இனிமேல் தொடர்ச்சியாக விளையாடி தம்மை நல்ல ஃபார்மில் வைத்துக்கொள்வது கடினம் என்று உத்தப்பா தெரிவித்துள்ளார். சொல்லப்போனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் மோசமான ஃபார்மில் இருந்த ரோஹித் 2025 சிட்னி டெஸ்ட் போட்டியில் தம்மைத் தாமே அணியிலிருந்து நீக்கிக்கொண்ட முதல் இந்திய கேப்டன் என்ற பரிதாப சாதனையைப் படைத்தார்.
அது போல இந்தியாவுக்கு மற்றொரு நிலைமை வரக்கூடாது என்பதற்காகவே சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதாக உத்தப்பா தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நேர்மையாக சொல்ல வேண்டுமெனில் 2027 உலகக் கோப்பை வரும் போது ரோஹித் 41 வயதை தொட்டு விடுவார். எனவே அவருடைய வயதையும் நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும் அல்லவா?”
“கேப்டன்ஷிப் பற்றி எடுக்கப்பட்ட முடிவில் அனைத்து நோக்கமும் இருக்கிறது. அம்முடிவு நிலைமை மோசமாக செல்வதற்கு முன் சாதாரணமாக இருக்கும் போது எடுக்கப்பட்டுள்ளது என்று நினைக்கிறேன். ஏனெனில் ஆஸ்திரேலியாவில் (சிட்னி போட்டி) நடந்தது போன்ற மற்றொரு சூழ்நிலையை நீங்கள் மீண்டும் விரும்ப மாட்டீர்கள். ரோஹித் சர்மா போன்றவருக்கு அது போன்ற நிகழ்வு மீண்டும் நடப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது”
இதையும் படிங்க: ரோஹித் என்ன தப்பு பண்ணாரு? கில்லே விரும்பாத இம்முடிவு இந்தியாவுக்கு ஆப்பாகலாம்.. ஃகைப் சாடல்
“எனவே அது போன்ற நிலைமைகளை தவிர்ப்பதற்காகவே இம்முடிவு எடுக்கப்பட்டிருக்கலாமா? என்பது எனக்குத் தெரியாது. ஒருவேளை தங்களைப் ஃபிட்டாக வைத்துக் கொண்டால் விராட், ரோஹித் அணியில் இருப்பதில் எந்தக் கேள்வியும் இல்லை. ரோஹித் சர்மாவின் ஃபார்ம் குறைந்ததாக எனக்குத் தெரியவில்லை. ஆனால் குறைந்த கிரிக்கெட்டில் விளையாடுவதால் அவருடைய அணிச்சை செயல்பாடுகள் குறையலாம்” என்று கூறினார்.