
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது நவம்பர் 22-ஆம் தேதி துவங்கி இன்று நடைபெற்ற கடைசி நாள் ஆட்டத்துடன் முடிவுக்கு வந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணியானது தங்களது முதல் இன்னிங்சில் 489 ரன்கள் குவித்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தது.
பின்னர் தொடர்ந்து விளையாடிய இந்திய அணி தென்னாப்பிரிக்க அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 201 ரன்கள் மட்டுமே குவித்தது. அதனை தொடர்ந்து 288 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்க்ஸை விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி தங்களது இரண்டாவது இன்னிங்ஸில் 260 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
இதன் காரணமாக 549 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 140 ரன்களுக்கு சுருண்டது. அதனால் தென்னாப்பிரிக்க அணி 408 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதோடு இந்த தொடரையும் இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த தோல்வி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் கூறுகையில் : உண்மையிலேயே இந்த தோல்வி சிறிது வருத்தம் அளிக்கிறது. நாங்கள் ஒரு அணியாக இன்னும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்க வேண்டும். பேட்டிங்கில் நாங்கள் மோசமாக செயல்பட்டது எதிரணிக்கு எளிதாக வெற்றிபெற வழியை ஏற்படுத்தி விட்டது.
இந்த தோல்வியிலிருந்து நிறைய பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டும். இந்த தொடர் முழுவதுமே தென்னாப்பிரிக்க வீரர்கள் ஆதிக்கம் செலுத்தி விளையாடியிருந்தனர். இனிவரும் டெஸ்ட் தொடர்களில் நிச்சயம் நாங்கள் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த கடினமாக உழைக்க வேண்டும்.
இதையும் படிங்க : சச்சினின் அந்த வழியை பின்பற்றி ஜெய்ஸ்வால் விளையாடுனா நல்லா விளையாடுவாரு – டேல் ஸ்டெயின் அட்வைஸ்
டெஸ்ட் போட்டிகளை பொருத்தவரை பாசிட்டிவான எண்ணங்களுடன் அடுத்தடுத்த தொடர்களை அணுக திட்டங்களை வகுக்க வேண்டும் என கேப்டன் ரிஷப் பண்ட் கூறியது குறிப்பிடத்தக்கது.