இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டியானது கடந்த நவம்பர் 14-ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்று முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணியானது தங்களது முதல் இன்னிங்சில் 159 ரன்கள் குவித்தது. தென்னாப்பிரிக்கா அணி சார்பாக அதிகபட்சமாக எய்டன் மார்க்ரம் 31 ரன்களையும், முல்டர் மற்றும் டோனி டி ஸோர்சி ஆகியோர் தலா 24 ரன்களையும் குவித்தனர்.
தெ.ஆ அணியிடம் அடைந்த தோல்வி குறித்து : ரிஷப் பண்ட் வருத்தம்
பின்னர் தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய இந்திய அணியானது 189 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக கே.எல் ராகுல் 39 ரன்களையும், வாஷிங்டன் சுந்தர் 29 ரன்களையும் குவித்தனர். பின்னர் 30 ரன்கள் பின்தங்கியுடன் நிலையுடன் தங்களது இரண்டாவது இன்னிங்சை விளையாடிய தென்னாப்பிரிக்க அணியானது தங்களது இரண்டாவது இன்னிங்ஸில் 153 ரன்கள் குவித்தது.
இதன் காரணமாக 123 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது எளிதில் இந்த போட்டியில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தென்னாப்பிரிக்க அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வெறும் 93 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதன் காரணமாக தென்னாப்பிரிக்க அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த தோல்வி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் கூறுகையில் : இந்த போட்டியை தோல்வி அடைந்தது உண்மையிலேயே எங்களுக்கு வருத்தமாக இருக்கிறது.
இந்த போட்டி எந்த இடத்தில் தவறிப்போனது என்பதை யூகிக்க முடியவில்லை. இந்த இலக்கினை எங்களால் எட்ட முடியாமல் போனது வருத்தம் தான். இரண்டாவது இன்னிங்ஸின் போது நல்ல பாட்னர்ஷிப்பை அமைத்திருக்க வேண்டும். ஆனால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்கவே எங்களால் அந்த அழுத்தத்தில் இருந்து வெளிவர முடியாமல் போனது.
இதையும் படிங்க : வெறும் 124 சேசிங்கில்.. 15 வருடம் கழித்து மண்ணைக் கவ்விய இந்தியா.. தெ.ஆ’விடம் அவமான சாதனை தோல்வி
தெம்பா பவுமா மற்றும் கார்பின் போஷ் ஆகியோர் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து அந்த அணியை நல்ல நிலைக்கு அழைத்துச் சென்றனர். இந்த மைதானத்தில் இருந்த உதவியும் அவர்களுக்கு கிடைத்தது. 120 ரன்கள் என்பது இந்த மைதானத்தில் சற்று சவாலான இலக்கு தான் இருந்தாலும் அழுத்தத்திலிருந்து மீள முடியாமல் நாங்கள் இந்த போட்டியை இழந்து விட்டோம் என ரிஷப் பண்ட் கூறியது குறிப்பிடத்தக்கது.



