இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட டாம் லேதம் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணியானது இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த தொடருக்கு முன்னதாக இலங்கை நாட்டிற்கு சென்று அங்கு தோல்வியை சந்தித்திருந்த நியூஸிலாந்து அணியானது இந்திய அணியிடமும் எளிதாக தோல்வியை தழுவும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
தோல்வியையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் :
ஆனால் இந்த தொடரில் இந்திய அணியை விட பேட்டிங், பவுலிங், பீல்டிங் என மூன்று துறையிலும் மிகச் சிறப்பாக செயல்பட்ட நியூசிலாந்து அணி மூன்று போட்டியிலுமே இந்திய அணியை வீழ்த்தி மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாறு படைத்தது. மேலும் 12 ஆண்டுகளாக சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரை கூட இழக்காமல் விளையாடி வந்த இந்திய அணியின் வெற்றி பயணத்தையும் முடித்துள்ளது.
இந்திய மண்ணில் வைத்து நியூசிலாந்து அணி இந்திய அணியை ஒயிட்வாஷ் செய்து சாதனை நிகழ்த்தியுள்ளது. இந்நிலையில் இந்த தொடரின் போது இந்திய அணிக்காக மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஷப் பண்ட் பேட்டிங்கில் தனி ஒரு ஆளாக மூன்று போட்டியிலே மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
அதிலும் குறிப்பாக மூன்றாவது போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி சார்பாக மற்ற வீரர்கள் 10 ரன்களை கூட கடக்க கஷ்டப்பட்ட வேளையில் ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்திருந்தார். இருப்பினும் அவரது இந்த போராட்டம் இறுதியில் வீணாகிப்போனது.
இந்நிலையில் இந்த மோசமான தோல்விக்கு பிறகு எமோஷனலான பதிவு ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் ரிஷப் பண்ட் வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவில் குறிப்பிடப்பட்டதாவது : வாழ்க்கை என்பது பருவங்களின் தொடர். ஒருமுறை நீங்கள் கீழே விழும் போது மீண்டும் உங்களது வளர்ச்சி சுழற்சி முறையில் நடக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இதையும் படிங்க : இன்னும் முடிவு எடுக்கல.. ஆனா கண்டிப்பா சீக்கிரம் சொல்றேன்.. ஆஸ்திரேலிய தொடர் குறித்து – ரோஹித் சர்மா பேச்சு
வீழ்வதையும் ஏற்றுக்கொள்ளுங்கள் அவை உங்களை அடுத்த உயரத்திற்கு கொண்டு செல்வதற்காக தயார் படுத்துகின்றன என்பதை அறிந்து கொள்ளுங்கள் என்று பதிவிட்டுள்ளார். இதன்மூலம் தோல்வியை ஏற்றுக்கொள்ள வேண்டும் அதுவும் அடுத்த கட்டத்திற்கு நம்மை முன்னேற்றும் ஏணிப்படியாக அமையும் என்கிற அர்த்தத்தில் இந்த வரிகளை அவர் பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.



