இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 விதமான போட்டிகளில் விளையாடியது. குறிப்பாக டெஸ்ட் தொடரில் பிரிஸ்பேன் மைதானத்தில் பல ஆண்டுகள் கழித்து அவர்களை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணியை கதற வைத்து வெற்றி பெற்றது. குறிப்பாக முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்சில் வெறும் 36 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது இந்திய அணி. அதன் பின்னர் அடுத்த டெஸ்ட் போட்டியில் திருப்பி அடித்து தொடர்ந்து இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றி அசத்தியிருக்கிறது.
இந்திய அணியின் இந்த வெற்றிக்கு பல இளம் வீரர்கள் காரணமாக அமைந்தனர். அந்த வகையில் இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட்டும் ஒரு காரணமாக திகழ்ந்தார். சிட்னி டெஸ்ட் போட்டியின் போது 406 ரன்கள் இந்தியாவிற்கு இலக்காக வைக்கப்பட்டது. அந்த போட்டியில் அதிரடியாக விளையாடி 97 ரன்கள் குவித்து ஆஸ்திரேலிய வீரர்களுக்கு பயத்தை காட்டிவிட்டார் ரிஷப் பண்ட். அதேநேரத்தில் பிரிஸ்பன் மைதானத்தில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு 328 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இந்த முறை தவறவிடாமல் அடித்து நொறுக்கிய ரிஷப் பண்ட் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 89 ரன்கள் அடித்து இந்திய அணியை வரலாற்று சிறப்பு மிக்க வகையில் வெற்றிபெற வைத்தார். இதுகுறித்து தற்போது பேசியிருக்கிறார் ரிஷப் பண்ட். குறிப்பாக ஆஸ்திரேலிய அணியின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் நேதன் லயனின் பந்துவீச்சை எவ்வாறு ஆடினார் என்பது குறித்து பேசியிருக்கிறார் ரிஷப் பண்ட். அவர் கூறுகையில்…..
பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியை பொறுத்தவரையில் முதலில் இருந்தே இந்த போட்டியை வெற்றி கொள்வது தான் எங்களது குறிக்கோளாக இருந்தது. நான் எல்லாப் போட்டிகளையும் வெற்றி கொள்ளவே விரும்புகிறேன். டிரா என்பது எனது அகராதியில் இல்லை. நேதன் லயன் பந்துவீச்சை பொறுத்தவரை அதிகமாக திரும்பும் பந்தை, ஆடாமல் விட வேண்டும் என்று முடிவு செய்தேன்.
அவ்வளவாக திரும்பாத பந்தை இறங்கி அடித்தால் சிக்ஸர். பந்து சிக்கவில்லை எனில் விக்கெட்டை இழக்க வேண்டும். ஆனால் அவர் வீசிய ஒரு சில பந்துகள் நன்றாக திரும்பியது. இதனை வைத்து அடுத்த சில பந்துகளை எப்படி வீசுவார் என்பதை கணித்து விட்டேன். அந்த நேரத்தில்தான் அவரை அடித்து ஆட முயற்சி செய்தேன். எனது இடத்தில் வீசி விட்டால் கண்டிப்பாக அந்த பந்தை அடித்து வெளியே தள்ளி விடுவேன். இதுதான் அவருக்கு எதிராக எனது திட்டமாக இருந்தது என்று கூறியிருக்கிறார் ரிஷப் பண்ட்.