இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக வங்கதேசம் மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் அடுத்தடுத்த டெஸ்ட் தொடர்களில் விளையாட உள்ளது. அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாடுகிறது. இந்த 3 தொடர்களிலும் வெற்றி பெற்றால் 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு இந்தியா முதல் அணியாக தகுதி பெறும்.
எனவே அந்தத் தொடர்களில் வெற்றி பெறுவதற்கான திட்டங்களை இந்திய அணியினர் தயாராகி வருகின்றனர். அந்த மூன்று தொடர்களுமே இந்தியாவுக்கு சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக சமீபத்தில் பாகிஸ்தானை அதனுடைய சொந்த மண்ணில் முதல் முறையாக தோற்கடித்த வங்கதேசம் சரித்திர வெற்றியை பெற்ற கையோடு இந்தியாவுக்கு வருகிறது.
எல்லாருக்கும் ஒரே அடி:
அதைத் தொடர்ந்து எப்போதுமே இந்திய அணிக்கு சவாலை கொடுக்கும் ஒரு அணியாக நியூசிலாந்து செயல்பட்டு வருகிறது. அதே போல சவாலான ஆஸ்திரேலிய மண்ணில் கடைசியாக விளையாடிய 2 தொடர்களில் இந்தியா முதல் முறையாக வென்றது. அதனால் இம்முறை இந்தியாவை தோற்கடித்து பழி தீர்க்க ஆஸ்திரேலியா இப்போதே தயாராகி வருகிறது.
இந்நிலையில் ஆசிய கண்டத்தில் வங்கதேசம் போன்ற அணியை இந்தியா எப்போதுமே குறைவாக எடுத்துக் கொள்ளாது என ரிஷப் பண்ட் கூறியுள்ளார். அதே சமயம் ஆஸ்திரேலிய மண்ணில் ஒவ்வொரு போட்டியும் அழுத்தம் மிகுந்ததாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார். எனவே எந்த சர்வதேச போட்டியையும் குறைத்து மதிப்பிடாமல் 100% செயல்பாடுகளை வெளிப்படுத்தி எதிரணிகளை இந்தியா வீழ்த்தும் என்று ரிஷப் பண்ட் கூறியுள்ளார்.
100% இந்தியா:
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நீங்கள் எந்த சர்வதேச போட்டியையும் எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. அதனால் எப்போதும் அங்கே அழுத்தம் இருக்கும். அங்கே வெற்றிக்கான இடைவெளி குறைவாகவே இருக்கும். அணிகளுக்கு இடையே பெரிய வித்தியாசமும் இருக்காது. எனவே நீங்கள் உங்களுடைய 100% செயல்பாடுகளை வெளிப்படுத்தி முடிவுகளை பெற வேண்டும்”
இதையும் படிங்க: ரெக்கார்ட் மட்டும் போதுமா.. ஜோ ரூட்டை விட விராட் கோலி தான் அதுல பெஸ்ட்.. டிகே வெளிப்படை
“இந்த செயல்முறையை தான் நான் நம்புகிறேன். ஆசிய கண்டத்தின் சூழ்நிலைகளில் பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை போன்ற அணிகள் சிறப்பாகவே செயல்படும். எனவே இந்திய அணியாக நாங்கள் எங்களுடைய தரத்தில் முன்னேற கவனம் செலுத்துகிறோம். எதிரணியை பற்றி பார்க்காமல் போட்டி நாளில் ஒரே மாதிரியாக விளையாடி 100% செயல்பாடுகளை கொடுக்க விரும்புகிறோம். இந்தத் தொடர்களுக்கு முன்பாக உள்ளூர் தொடர்களில் விளையாடுவது மிகவும் முக்கியம்” என்று கூறினார்.