விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரின் 16வது லீக் போட்டியில் டெல்லியை 16 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா தோற்கடித்தது. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 20 ஓவரில் சரவெடியாக விளையாடி 272/7 ரன்கள் குவித்து ஐபிஎல் வரலாற்றில் 2வது அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணியாக சாதனை படைத்தது.
அந்த அணிக்கு சுனில் நரேன் 85, ரகுவன்ஷி 54, ரசல் 41, ரிங்கு சிங் 26 ரன்கள் எடுத்த நிலையில் டெல்லி சார்பில் அதிகபட்சமாக அன்றிச் நோர்ட்ஜே 3 விக்கெட்டுகள் எடுத்தார். அதன் பின் 273 ரன்களை துரத்திய டெல்லிக்கு கேப்டன் ரிசப் பண்ட் 55, ட்ரிஷன் ஸ்டப்ஸ் 54 ரன்கள் எடுத்தும் டேவிட் வார்னர் போன்ற மற்ற வீரர்கள் கைகொடுக்க தவறியதால் 166 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியை சந்தித்தது.
ரிஷப் பண்ட் தவறு:
அந்தளவுக்கு பந்து வீச்சிலும் அசத்திய கொல்கத்தா சார்பில் அதிகபட்சமாக வைபவ் அரோரா, வருண் சக்கரவர்த்தி தலா 3 விக்கெட்டுகள் சாய்த்தனர். முன்னதாக இந்த போட்டியில் ரிஷப் பண்ட் சுமாராக கேப்டன்ஷிப் செய்தது டெல்லியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது என்றே சொல்லலாம். போதாகுறைக்கு சுனில் நரேன் போன்ற பகுதி நேர பேட்ஸ்மேன் அடித்து நொறுக்கும் அளவுக்கு டெல்லியின் பவுலிங் மோசமாக அமைந்தது.
குறிப்பாக இஷாந்த் சர்மா வீசிய நான்காவது ஓவரில் முதல் 3 பந்துகளில் 6, 6, 4 என அடுத்தடுத்த பவுண்டரிகளை பறக்க விட்ட சுனில் நரேன் 4வது பந்தில் எட்ஜ் எடுத்துக் கொடுத்தார். அந்த பந்து நேராக சென்று விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் கையில் தஞ்சமடைந்தது. அப்போது ரிவியூ எடுக்குமாறு மிட்சேல் மார்ஷ் கேட்டுக்கொண்டார். ஆனால் சுனில் நரேன் பேட்டில் பந்து படவில்லை என்பது போல உணர்ந்த ரிஷப் பண்ட் ரிவியூ எடுக்கவில்லை.
அதை பயன்படுத்தி தொடர்ந்து மிரட்டலாக பேட்டிங் செய்த சுனில் நரேன் 7 பவுண்டரி 7 சிக்ஸருடன் 85 (39) ரன்கள் குவித்து தன்னுடைய அதிகபட்ச ஐபிஎல் ஸ்கோர் பதிவு செய்து சொந்த சாதனை படைத்தார். அந்த வகையில் விக்கெட் கீப்பராக இருந்தும் சுனில் நரேன் எட்ஜ் கொடுத்ததை கவனிக்கத் தவறிய ரிஷப் பண்ட் அறியாமல் செய்த பெரிய தவறால் இந்த போட்டியில் டெல்லிக்கு மிகப்பெரிய தோல்வி கிடைத்தது என்றே சொல்லலாம்.
இதையும் படிங்க: 18 வயதில் 200 ஸ்ட்ரைக் ரேட்டில் 2வது கொல்கத்தா வீரராக சரவெடி சாதனை.. யார் இந்த ரகுவன்ஷி
இருப்பினும் காயத்திலிருந்து குணமடைந்து விளையாடும் அவர் இந்த போட்டியில் வெங்கடேஷ் ஐயருக்கு எதிராக ஒரே ஓவரில் 28 ரன்கள் அடித்து அசத்தியது மட்டுமே டெல்லி ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்தது. மொத்தத்தில் 4 போட்டிகளில் 3வது தோல்வியை பதிவு செய்த டெல்லி புள்ளிப்பட்டியலில் ஒன்பதாவது இடத்திற்கு சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.