துபாயில் அண்டர்-19 ஆசியக் கோப்பை 2025 ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அத்தொடரில் குரூப் ஏ பிரிவில் இடம் வகிக்கும் இந்தியா தங்களது முதல் போட்டியில் அமீரகத்தை 234 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அந்த வெற்றிக்கு 14 வயதாகும் இளம் வீரர் வைபவ் சூரியவன்சி 14 சிக்சர்கள் உட்பட 177 ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றினார்.
முன்னதாக 2024 அண்டர்-19 ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவை தோற்கடித்த வங்கதேசம் சாம்பியன் பட்டம் வென்றது. அதனால் இம்முறை நடப்புச் சாம்பியனாக விளையாடும் வங்கதேச அணி குரூப் பி பிரிவில் இடம் வகிக்கிறது. அதனால் இந்தியாவை செமி ஃபைனல் அல்லது ஃபைனல் போட்டியில் மட்டுமே எதிர்கொள்ளும் வாய்ப்பு வங்கதேசத்துக்கு கிடைக்கும்.
இந்தியாவை வீழ்த்தனும்:
இந்நிலையில் இம்முறையும் இறுதிப்போட்டியில் இந்தியாவை எதிர்கொண்டு தோற்கடிப்போம் என்று வங்கதேச வீரர் ரிஷான் ஹொசைன் சவால் விடுத்துள்ளார். அதற்கு தேவையான திறமையும் தரமான வீரர்களும் தங்களிடம் இருப்பதாக அவர் கூறியுள்ளார். அதே போல சூரியவன்சியை அதிரடியாக ரன்கள் குவிப்பதிலிருந்து தடுத்து நிறுத்தி இந்தியாவை வீழ்த்துவோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “சூரியவன்சியை ஏன் எங்களால் நிறுத்த முடியாது? எங்களிடம் நட்சத்திர வீரர்கள் உள்ளனர். எங்களுடைய ஒவ்வொரு வீரர்களும் மேட்ச் வின்னர். கடந்த வருடம் நாங்கள் ஒருவரை ஒருவர் ஆதரவு கொடுத்து விளையாடியதாலேயே கோப்பையை வென்றோம். அதே போல இந்த வருடமும் வங்கதேசம் சாம்பியன் பட்டம் வென்று அடுத்தடுத்த கோப்பைகளை வெல்லும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது”
இந்தியாவுக்கு சவால்:
“சூரியவன்சி நட்சத்திர கிரிக்கெட்டர். அவருடைய ஆட்டத்தை சமீப காலங்களில் நாம் பார்த்துள்ளோம். நல்ல ஃபார்மில் இருக்கும் அவரை தடுத்து நிறுத்த எங்களிடம் வீரர்கள் உள்ளனர். நாங்கள் களத்திற்கு சென்று எங்களுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிக்கிறோம். கடந்த வருடம் கோப்பையை வென்ற போது கொண்டாடிய கொண்டாட்டம் இன்னும் எங்கள் நினைவில் இருக்கிறது. இருப்பினும் தற்போதைய புதிய பயணத்தில் வங்கதேசம் வண்ணங்களாக பறக்கும்”
இதையும் படிங்க: இன்னும் ஒரு விக்கெட் போதும்.. தனக்கென ஒரு தடம் பதிக்க காத்திருக்கும் வருண் சக்கரவர்த்தி – விவரம் இதோ
“இம்முறையும் வங்கதேசம் இறுதிப் போட்டிக்கு செல்லும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இறுதிப்போட்டியில் நாங்கள் எதிர்கொள்ள விரும்பும் ஒரே அணி இந்தியா. அவர்களை மீண்டும் நாங்கள் தோற்கடிக்க விரும்புகிறோம்” என்று கூறினார். அத்துடன் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் தாம் மிகவும் ரசிக்கக் கூடிய வீரர் என்றும் அவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.



