இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி 26000க்கும் மேற்பட்ட ரன்களையும் 80 சதங்களையும் குவித்துள்ளார். கடந்த 16 வருடங்களாக இந்திய அணியின் நிறைய வெற்றிகளில் பங்காற்றி வரும் அவர் நவீன கிரிக்கெட்டின் சிறந்த வீரராக போற்றப்படுகிறார். மேலும் ஃபிட்னஸ் எனும் வார்த்தைக்கு எடுத்துக்காட்டாக திகழும் அவர் பல இளம் வீரர்களுக்கு ரோல் மாடலாக திகழ்கிறார்.
முன்னதாக கடந்த ஐபிஎல் தொடரில் இளம் இந்திய வீரர் ரிங்கு சிங் கோரிக்கையை ஏற்று விராட் கோலி தம்முடைய ஒரு பேட்டை பரிசாக கொடுத்தார். ஆனால் அதைப் பயன்படுத்தி வலைப்பயிற்சியில் அதிரடியாக விளையாட முயற்சித்த ரிங்கு சிங் அடுத்த ஒரு வாரத்திற்குள் உடைத்து விட்டார். அதனால் மீண்டும் விராட் கோலியிடம் புதிய பேட் கொடுக்குமாறு ரிங்கு சிங் கேட்டார்.
விராட் கோலியிடம் பயம்:
அப்போது ஒரு வாரத்திற்குள் உடைத்ததால் கோபமடைந்த விராட் கோலி மீண்டும் அவருக்கு புதிய பேட் ஒன்றை வழங்கினார். இந்நிலையில் விராட் கோலியிடம் உங்களுடைய பேட் உடைந்து விட்டதாக சொன்ன போது மிகவும் பயந்ததாக ரிங்கு சிங் தெரிவித்துள்ளார். மேலும் விராட் கோலியை பார்த்து உலகின் அனைத்து வீரர்களுமே ஃபிட்னஸை கற்றுக் கொள்ளலாம் என ரிங்கு பாராட்டியுள்ளார்.
அத்துடன் விராட் கோலியுடன் இணைந்து இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பை பெற்றது கனவு நிஜமான தருணம் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “விராட் கோலி சீனியர் என்பதால் அவரை அணுகுவதற்கு நான் கொஞ்சம் பயந்தேன். அவரிடம் உடைந்த பேட்டை காண்பிக்க மட்டுமே நான் சென்றேன். அவரிடமிருந்து மீண்டும் எனக்கு புதிய பேட் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை”
விராட் கோலியின் உத்வேகம்:
“நீங்கள் கொடுத்த பேட் வலைப்பயிற்சியில் உடைந்து விட்டதாக அவரிடம் கூறினேன். பெங்களூருவில் அவர் எனக்கு முதல் பேட்டை கொடுத்தார். அதை வலைப்பயிற்சியில் பயன்படுத்தி பெரிய ஷாட் அடிக்க முயற்சித்தால் உடைந்தது. எனவே மீண்டும் அவரிடம் நான் பேட்டை எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவராகவே மீண்டும் எனக்கு பேட் கொடுத்தார். விராட் கோலி ஃபிட்னஸ் அளவில் நம்பர் ஒன் என்பதை அனைவரும் அறிவோம்”
இதையும் படிங்க: இனிமேல் உழைப்பு வீணாகாது.. உள்ளூர் தொடர்களுக்கு புதிய பரிசுகளை அறிவித்த ஜெய் ஷா.. விவரம் இதோ
“ஒவ்வொருவரும் எப்படி ஃபிட்டாக இருக்க வேண்டும் என்பதை அவரிடம் இருந்து உத்வேகமாக எடுத்துக்கொண்டு கற்றுக் கொள்ளலாம். எனவே அவரைப் பார்த்து நான் டயட் மற்றும் ட்ரெய்னிங்கை பின்பற்றுகிறேன். இந்த வருடம் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நாங்கள் சேர்ந்து விளையாடினோம். அவருடன் பேட்டிங் செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை என்றாலும் விராட் கோலியுடன் விளையாடுவது அனைவரது கனவாக இருக்கும்” என்று கூறினார்.



