IPL 2023 : நம்ப முடியாத வெற்றியுடன் ரிங்கு சிங் உலக சாதனை – தோனி, ரோஹித், மில்லர் ஆகியோரை மிஞ்சி 4 சரித்திர சாதனை

- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 9ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு அகமதாபாத் நகரில் நடைபெற்ற 13வது லீக் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 204/4 ரன்கள் குவித்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக தமிழக வீரர் சாய் சுதர்சன் 3 பவுண்டரி 2 சிக்சருடன் 53 (38) ரன்களும் கடைசி நேரத்தில் யாருமே எதிர்பாராத வகையில் சரவெடியாக பேட்டிங் செய்த மற்றொரு தமிழக வீரர் விஜய் சங்கர் 4 பவுண்டரி 5 சிக்சருடன் 63* (24) ரன்கள் குவித்து சூப்பர் பினிஷிங் கொடுக்க கொல்கத்தா சார்பில் அதிகபட்சமாக சுனில் நரேன் 3 விக்கெட்டுகள் சாய்த்தார்.

அதைத் தொடர்ந்து 205 ரன்களை துரத்திய கொல்கத்தாவுக்கு நாராயன் ஜெகதீசன் 6 (8) ரஹ்மத்துல்லா குர்பாஸ் 15 (12) என தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டானாலும் 3வது விக்கெட்டுக்கு 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அதிரடியாக செயல்பட்ட கேப்டன் நிதிஷ் ரானா 4 பவுண்டரி 3 சிக்சருடன் 45 (29) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவருடன் நீண்ட நாட்கள் கழித்து அபாரமாக விளையாடிய வெங்கடேஷ் ஐயர் 8 பவுண்டரி 5 சிக்ஸருடன் 83 (40) ரன்கள் குவித்து வெற்றியை உறுதி செய்து அவுட்டானார்.

- Advertisement -

ஹீரோ ரிங்கு:
ஆனால் அந்த சமயத்தில் 17வது ஓவரை வீசிய ரசித் கான் சுழலில் மாயாஜாலம் நிகழ்த்தி ஆண்ட்ரே ரசல் 1, சுனில். நரேன் 0, ஷார்துல் தாகூர் 0 என அடுத்தடுத்த 3 ஹாட்ரிக் விக்கெட்டுகளை சாய்த்து கொல்கத்தாவின் வெற்றியை கிட்டத்தட்ட பறித்தார். அதனால் கடைசி 27 பந்துகளில் 50 ரன்கள் தேவைப்பட்ட போது மனம் தளராமல் போராடிய இளம் வீரர் ரிங்கு சிங் ஜோஸ்வா லிட்டில் வீசிய 19வது ஓவரின் கடைசி 2 பந்துகளில் அடுத்தடுத்த சிக்சர்களைப் பறக்க விட்டார்.

அதை விட யாஷ் தயால் வீசிய கடைசி ஓவரின் கடைசி 5 பந்துகளில் 28 ரன்கள் தேவைப்பட்ட போது கொஞ்சமும் தடுமாறாமல் அடுத்தடுத்து 5 சிக்சர்களை தெறிக்க விட்ட அவர் ஹீரோவாக மாறி 1 பவுண்டரி 4 சிக்சருடன் 48* (21) ரன்கள் குவித்து 20 ஓவரில் கொல்கத்தாவை 207/7 ரன்கள் எடுக்க வைத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் நம்ப முடியாத திரில் வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.

- Advertisement -

1. முதலில் இப்போட்டியில் கடைசி ஓவரில் 29 ரன்கள் தேவைப்பட்ட போது அதை வெற்றிகரமாக எடுத்த கொல்கத்தா உலக டி20 கிரிக்கெட்டில் கடைசி ஓவரில் அதிகபட்ச இலக்கை வெற்றிகரமாக சேசிங் செய்த அணி என்ற உலக சாதனை படைத்துள்ளது. அந்த பட்டியல்:
1. கொல்கத்தா : 29 ரன்கள், குஜராத்துக்கு எதிராக, 2023*
2. சிட்னி சிக்ஸர்ஸ் : 23 ரன்கள், சிட்னி தண்டர்ஸ்க்கு எதிராக, பிக்பேஷ், 2014/15
3. புனே சூப்பர் ஜெயிண்ட்ஸ் : 23 ரன்கள், பஞ்சாப்புக்கு எதிராக, ஐபிஎல், 2016

2. மேலும் 20வது ஓவரில் 30 ரன்கள் அடித்த ரிங்கு சிங் ஒட்டுமொத்த உலக டி20 கிரிக்கெட்டில் சேசிங் செய்யும் போது கடைசி ஓவரில் அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேன் என்ற உலக சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -

3. குறிப்பாக ஐபிஎல் வரலாற்றில் சேசிங் செய்யும் போது 20வது ஓவரில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற தோனியின் சாதனையை உடைத்துள்ள அவர் புதிய சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. ரிங்கு சிங் : 30, குஜராத்துக்கு எதிராக*
2. எம்எஸ் தோனி : 24 , பெங்களூருவுக்கு எதிராக
3. நிக்கோலஸ் பூரான் : 23, சென்னைக்கு எதிராக

4. அதை விட ஐபிஎல் வரலாற்றில் வெற்றிகரமாக சேசிங் செய்யப்பட்ட போட்டிகளில் கடைசி ஓவரில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற ரோகித்/தோனி ஆகியோரின் சாதனையையும் அவர் உடைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. ரிங்கு சிங் : 30*, குஜராத்துக்கு எதிராக, 2023
2. ரோகித் சர்மா : 22, டெக்கானுக்கு எதிராக, 2009
3. எம்எஸ் தோனி : 22, பஞ்சாப்புக்கு எதிராக, 2016

- Advertisement -

5. அத்துடன் ஐபிஎல் வரலாற்றில் வெற்றிகரமாக சேசிங் செய்யப்பட்ட போட்டியில் கடைசி ஓவரில் அதிக சிக்சர்கள் (5) அடித்த பேட்ஸ்மேன் என்ற புதிய சாதனையும் அவர் படைத்துள்ளார். இதற்கு முன் டேவிட் மில்லர், ரசித் கான், அக்சர் படேல், எம்எஸ் தோனி ஆகியோர் முறையே ராஜஸ்தான், ஹைதராபாத், சென்னை மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகளுக்கு எதிராக தலா 3 சிக்சர்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும்.

இதையும் படிங்க:SRH vs PBKS : தனி ஒருவனாக சிம்ம சொப்பனமாக போராடிய கேப்டன் ஷிகர் தவான் – ஹைதராபாத் முதல் வெற்றியை பெற்றது எப்படி

6. அத்துடன் கிறிஸ் கெயில் (2012), ராகுல் திவாடியா (2020), ரவீந்திர ஜடேஜா (2021) ஆகியோருக்கு பின் ஐபிஎல் வரலாற்றில் ஒரு ஓவரில் 5 சிக்சர்கள் அடித்த 4வது பேட்ஸ்மேன் என்ற பெருமையும் அவர் பெற்றுள்ளார்.

Advertisement