
இந்தியாவின் பல்வேறு நகரங்களில் ரஞ்சிக் கோப்பை 2025/26 சீசன் நடைபெற்று வருகிறது. அதில் எலைட் குரூப் ஏ பிரிவில் இடம் வகிக்கும் தமிழ்நாடு மற்றும் உத்தரப்பிரதேச அணிகள் மோதிய போட்டி நவம்பர் 16ஆம் தேதி துவங்கியது. கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி கிரிக்கெட் மைதானத்தில் துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதைத்தொடர்ந்து களமிறங்கிய தமிழ்நாடு அணி சிறப்பாக விளையாடி 455 ரன்கள் குவித்தது. சச்சின், ஜெகதீசன், பிரதோஷ்பால், வித்யூத் ஆகியோர் ஏமாற்றத்தைக் கொடுத்ததால் ஒரு கட்டத்தில் 71/4 என தமிழ்நாடு தடுமாறியது. அப்போது அபாரமாக பேட்டிங் செய்த அனுபவ வீரர் பாபா இந்திரஜித் சதத்தை அடித்து 149 ரன்கள் குவித்து அசத்தினார்.
அவருடன் இணைந்து விளையாடிய ஆண்ட்ரே சித்தார்த் தம்முடைய பங்கேற்கு சதத்தை அடித்து 121 ரன்கள் குவித்தார். லோயர் ஆர்டரில் அஜித்தேஸ் குருசாமி 86, சோனு யாதவ் 44 ரன்கள் அடித்து கை கொடுத்தனர். உத்தரபிரதேசத்துக்கு அதிகபட்சமாக கார்த்திக் யாதவ் 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். அடுத்து விளையாடிய உத்திரபிரதேச அணிக்கு மாதவ் கவுசிக் 21, கேப்டன் கரண் சர்மா 11 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர்.
இருப்பினும் மற்றொரு துவக்க வீரர் அபிஷேக் கோஸ்வாமி 79 ரன்கள் குவித்து அசத்தினார். மிடில் ஆர்டரில் ஆர்யன் ஜுயல் 43 ரன்கள் குவித்து அவுட்டான போதிலும் நம்பிக்கை நட்சத்திரம் ரிங்கு சிங் நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தி அரை சதமடித்தார். எதிர்ப்புறம் வந்த ஆராதியா யாதவ் 4 ரன்னில் அவுட்டான போதிலும் சிவம் மாவி பொறுப்புடன் விளையாடி அரை சதத்தை அடித்து 54 ரன்கள் குவித்து விக்கெட்டை இழந்தார்.
இந்த பக்கம் தொடர்ந்து தமிழக பவுலர்களுக்கு எதிராக அபாரமாக விளையாடிய ரிங்கு சிங் சதத்தை அடித்து தம்முடைய அணியை முன்னிலை பெற வைப்பதற்காக போராடினார். அவருக்கு கை கொடுக்க முயற்சித்த சிவம் சர்மா 22, கார்த்தி யாதவ் 20 ரன்கள் அடித்து அவுட்டானார்கள். மறுபுறம் தொடர்ந்து அசத்திய ரிங்கு சிங் 17 பவுண்டரியுடன் 6 சிக்ஸருடன் 176 (247) ரன்கள் விளாசி 9வது விக்கெட்டாக அவுட்டானார்.
அப்போது உத்திரபிரதேசத்துக்கு முன்னிலைப் பெற 13 ரன்களும் தமிழகத்துக்கு 1 விக்கெட் மட்டுமே தேவைப்பட்டதால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அப்போது கடைசி விக்கெட்டுக்கு ஆகிப் கான் 14*, குணால் தியாகி 5 ரன்கள் எடுத்தனர். அதன் காரணமாக 460 ரன்களை குவித்து ஆல் அவுட்டான உத்தரபிரதேசம் 5 ரன்கள் முன்னிலைப் பெற்றதை அந்த அணியினர் வெற்றிக்கு நிகராக கொண்டாடினார்கள்.
இதையும் படிங்க: இதனால இந்திய அணிக்கு பிரச்சனையில்ல.. அப்போல்லாம் பேசாம இப்போ மட்டும் கேள்வி கேட்கலாமா? புவி பேட்டி
ஏனெனில் இரு அணிகளின் முதல் இன்னிங்ஸ் முடிவதற்கே 4வது நாள் வந்து விட்டது. அதனால் இப்போட்டி இன்று டிராவில் முடிவடையவே 99% வாய்ப்புள்ளது. அப்படி முடியும் போது முதல் இன்னிங்ஸில் முன்னிலைப் பெற்றதற்காக உத்திரபிரதேசம் 3 புள்ளிகளைப் பெறும். மறுபுறம் 1 விக்கெட்டில் 5 ரன்கள் வித்தியாசத்தில் முன்னிலையைக் கோட்டை விட்ட தமிழ்நாடு அணிக்கு 1 புள்ளி மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.