எங்க வாழ்க்கைல இதை பார்த்ததில்லை, இனி ஐசிசி தான் சொல்லனும் – ரிக்கி பாண்டிங், ஹெய்டன் நியாயமாக பேசியது என்ன

Ponting
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் ஏமாற்றத்தை சந்தித்த தென் ஆப்பிரிக்கா மீண்டும் அந்நாட்டிற்கு பயணித்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. ஆனால் அந்தத் தொடரிலும் அந்த அணிக்கு மிகப்பெரிய ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. ஏனெனில் 2023 ஜூன் மாதம் லண்டன் ஓவலில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் விளையாடுவதற்கு இத்தொடரை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய அந்த அணி முதல் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் போராடி தோற்றது. அதனால் ஏற்கனவே புள்ளி பட்டியலில் 2வது இடத்திலிருந்த அந்த அணி தற்போது 3வது இடத்திற்கு சரிந்து ஃபைனல் வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்துள்ளது என்றே கூறலாம்.

அதை விட வெறும் 142 ஓவர்களில் முடியும் அளவுக்கு அப்போட்டி நடைபெற்ற காபா கிரிக்கெட் மைதானத்தின் பிட்ச் மோசமாக இருந்தது அனைவரையும் அதிருப்தியில் ஆழ்த்தியது. பொதுவாகவே காபா மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தாலும் கூட குறைந்தபட்சம் டெஸ்ட் போட்டிகள் என்றால் 3 நாட்களைக் கடந்து செல்லும். ஆனால் இம்முறை 5.5 மில்லி மீட்டர் அளவுக்கு பிட்ச்சில் பச்சை புற்கள் இருந்ததால் கும்மாளம் போட்ட இரு நாடுகளைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர்களும் பேட்ஸ்மேன்களை திணறடித்தார்கள். குறிப்பாக முதல் நாளில் 15 விக்கெட்டுகள் விழுந்த நிலையில் 2வது நாளில் 19 விக்கெட்டுகள் சரிந்ததால் இரு அணிகளைச் சேர்ந்த பேட்ஸ்மேன்களும் பந்தை தொட முடியாமல் திண்டாடினார்கள்.

- Advertisement -

ஐசிசி தண்டனை வேணும்:
மொத்தத்தில் பேட்டிங், பவுலிங் ஆகிய இரண்டுக்கும் சமமின்றி நடந்த இப்போட்டி இந்நேரம் இந்தியாவில் நடந்திருந்தால் வேண்டுமென்றே எளிதாக வெற்றி பெற ஒருதலைபட்சமான பிட்ச் அமைத்ததாக ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தை சேர்ந்தவர்கள் விமர்சித்திருப்பார்கள் என்று வீரேந்திர சேவாக் போன்ற முன்னாள் இந்திய வீரர்களும் ரசிகர்களும் கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தினர். இந்நிலையில் தனது வாழ்நாளில் காபா மைதானத்தில் இவ்வளவு பச்சையான பிட்ச்சை பார்த்ததில்லை என்று தெரிவிக்கும் முன்னாள் ஜாம்பவான் வீரர் ரிக்கி பாண்டிங் இதற்கு ஐசிசி தான் தண்டனை கொடுக்க வேண்டும் என்று நியாயத்துடன் பேசியுள்ளார்.

இது பற்றி 7 ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “இவ்வளவு பச்சையை நான் பார்த்ததில்லை. என்னை விட இங்கே மேத்தியூ ஹெய்டன் அதிகமாக விளையாடியுள்ளார். அவரும் இவ்வளவு பச்சையை பார்த்ததில்லை. ஜஸ்டின் லாங்கரும் இவ்வளவு பச்சையை பார்த்ததில்லை. அங்கே ஈரம் அதிகம் இல்லையா? பொதுவாக காபாவில் நீங்கள் முதல் நாளில் மேற்பரப்பில் சிறிது ஈரப்பதத்தை எதிர்பார்ப்பீர்கள். ஆனால் நாங்கள் இப்போட்டியில் அதிகப்படியான வேகத்தைத் தான் பார்த்தோம். அதனால் அது மோசமான ரேட்டிங் பெறும் என்று நான் நினைக்கிறேன்”

- Advertisement -

“குறிப்பாக முதல் 4 செசன்களில் 22 விக்கெட்கள் விழுந்ததை வைத்து இரு அணிகளும் சிறப்பாக பந்து வீசின என்பதில் சந்தேகமில்லை. அதற்காக இரு அணிகளும் மோசமான பேட்மேன்களை கொண்டிருக்கவில்லை. அதனாலேயே உலக அளவில் விளையாடிய நிறைய பேட்ஸ்மேன்கள் தங்களது வாழ்நாளில் விளையாடிய போட்டிகளில் இது கடினமானது என்று தெரிவித்தார்கள். எனவே இந்த நேரத்தில் இதற்கு நியாயம் வேண்டியுள்ளது” என்று ஐசிசி தண்டனை வழங்க வேண்டும் என்று கூறினார்.

அவருடன் மேத்தியூ ஹைய்டன் பேசியது பின்வருமாறு. “எனது பார்வையிலும் அது அதிகப்படியான வேகத்தில் இருந்தது. பொதுவாக காபாவில் சற்று பவுன்ஸ் இருக்கும். ஆனாலும் அனைத்து அணிகளும் பேட்டிங், பவுலிங் ஆகிய இரண்டிலும் சமமாக செயல்பட்டு கால சூழ்நிலைகளை பயன்படுத்தி விளையாடும். ஆனால் இப்போட்டியில் அதிகப்படியான பச்சை இருந்தது. இந்த மைதானத்தில் நீங்கள் இவ்வளவு பச்சைப் புற்களை விட வேண்டிய அவசியமே கிடையாது. அதனாலேயே இப்போட்டியில் அதிகப்படியான வேகம் மற்றும் பவுன்ஸ் இருந்தது” என்று கூறினார்.

இதையும் படிங்க: ரூட் கிளியர். ரோஹித்தின் விலகலால் இளம்வீரருக்கு அடித்த ஜாகபாட் – இனிமே அவரை அசைக்க முடியாது

மொத்தத்தில் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்களே அதிருப்தியை வெளிப்படுத்தம் அளவுக்கு மோசமாக இருந்த காபா மைதானத்துக்கு நடுவரின் அறிக்கையை ஏற்று “சராசரிக்கும் குறைவான பிட்ச்” என்று விரைவில் ஐசிசி கருப்பு புள்ளியுடன் தண்டனையை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement