இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் முடிவடைந்த நிலையில் கடந்த நவ்.17ம் தேதி முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது. பகலிரவு போட்டியாக நடந்த இந்த முதல் டெஸ்ட் தொடரில் இந்திய அணி படுதோல்வியை பெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய அணியின் தொடக்க வீரர்களான ப்ரிதிவி ஷா மற்றும் மயங்க் அகர்வால் சொற்ப ரன்னில் தங்களது விக்கெட்டை இழந்தனர்.
இதன் பின் களமிறங்கிய விராட் கோலி 74, புஜாரா 43, ரஹானே 42 ரன்கள் குவிக்க இந்திய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 244 ரன்கள் குவித்தது. இதன் பின் களமிறங்திய ஆஸ்திரேலிய அணியும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இறுதியில் ஆஸ்திரேலியா அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 191 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில் அதிகபட்சமாக பெய்ன் 73 ரன்களை குவித்தார்.
இதனைத் தொடர்ந்து 53 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் வெறும் 36 ரன்களை மட்டும் எடுத்திருந்தது. இந்திய அணி வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கு ரன்கள் மட்டுமே எடுத்து ஆஸ்திரேலிய அணிக்கு 90 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தனர். அதிகபட்சமாக புஜாராவின் 9 ரன்கள் தான் இருக்கிறது. இதனால், ஆஸ்திரேலிய அணி 21 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.
இந்நிலையில், இந்திய அணியின் இந்த படுமோசமான தோல்வியை கண்டு பலரும் விமர்சித்து வருகின்றனர். அந்த வகையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் இந்திய அணியின் தோல்வி குறித்து பேசியுள்ளார். அப்போது அவர் “ ரிஷப் பண்டிற்கு முதல் டெஸ்ட் போட்டியில் இடம் கிடைக்காதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணியின் முக்கிய வீரர். இவர் தனது பேட்டிங்கில் சிறந்த பங்களிப்பை இந்திய அணிக்காக கொடுத்திருப்பார்.
விருத்திமான் சகா அளவிற்கு ரிஷப் பண்ட் சிறந்த விக்கெட் கீப்பிங் செய்யவில்லை என்றாலும் இவர் தனது பேட்டிங்கில் சிறப்பாக செயல்படுகிறார். விக்கெட் கீப்பர் அடிப்படையில் இவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை என்று நினைக்கிறேன்” என்று ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரான ரிக்கி பாண்டிங் பேசியுள்ளார்.