
சர்வதேச கிரிக்கெட்டில் என்னதான் இருதரப்பு தொடர்களில் சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வென்றாலும் ஐசிசி நடத்தும் உலக கோப்பையை வெல்வதே மிகப்பெரிய சாதனையாகும். அந்த வகையில் வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஐசிசி டி20 உலக கோப்பை 2022 தொடரை வெல்வதே தற்போதைய நிலைமையில் உலகின் அனைத்து அணிகளின் முதன்மை லட்சியமாக உள்ளது. வரும் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட், மெல்போர்ன், சிட்னி போன்ற புகழ்பெற்ற மைதானங்களில் நடைபெறும் இத்தொடரின் கோப்பையை வெல்வதற்காக 16 அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
அதில் கடந்த 2021இல் துபாயில் நடந்த டி20 உலகக் கோப்பையை முதல் முறையாக வென்ற ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலியா இம்முறை கோப்பையை தக்க வைக்க சொந்த மண்ணில் களமிறங்குகிறது. அதேபோல் கடந்த முறை பரம எதிரியான பாகிஸ்தானிடம் வரலாற்று தோல்வியை சந்தித்த விராட் கோலி தலைமையிலான இந்தியா லீக் சுற்றுடன் வெளியேறிய நிலையில் இம்முறை ரோகித் சர்மா தலைமையில் புத்துணர்ச்சியுடன் களமிறங்க காத்திருக்கிறது.
இந்த அணிகளுடன் ஜோஸ் பட்லர் தலைமையிலான முரட்டுத்தனமான இங்கிலாந்து, கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து, 2 கோப்பைகளை ஏற்கனவே வென்று வெற்றிகரமான அணியாக திகழும் வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா உட்பட உலகின் டாப் அணிகள் கோப்பையை வெல்ல போட்டிபோட உள்ளதால் இப்போதே ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
பாண்டிங் கணிப்பு:
இந்த தொடரில் இந்தியா தனது முதல் போட்டியில் வரும் அக்டோபர் 24ஆம் தேதி உலக புகழ்பெற்ற மெல்போர்ன் மைதானத்தில் பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இப்படி டாப் அணிகளில் உள்ள டாப் நட்சத்திரங்கள் மோத உள்ளதால் இம்முறை உலகக் கோப்பையை முத்தமிட போவது யார் என்ற எதிர்பார்ப்பு எகிறி காணப்படும் நிலையில் தங்களது நாட்டில் நடக்கும் இந்த டி20 உலக கோப்பையில் இறுதிப்போட்டியில் விளையாட போவது யார் மற்றும் வெற்றியாளர் யார் என்பதை ஜாம்பவான் கேப்டன் ரிக்கி பாண்டிங் கணித்துள்ளார்.
இந்த தொடரில் ஆஸ்திரேலியா தனது சொந்த மண்ணில் விளையாடுவதால் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என்று தெரிவித்துள்ள அவர் அதற்கு சவாலாக இந்தியா ஃபைனலுக்கு வரும் என்றும் கணித்துள்ளார். இருப்பினும் சொந்தமண் சாதகத்தால் ஆஸ்திரேலியா மீண்டும் கோப்பையை வெல்லும் என்று தெரிவித்துள்ள அவர் இதுபற்றி ஐசிசி இணைய பக்கத்தில் பேசியுள்ளது பின்வருமாறு. “இறுதிப் போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் பலப்பரிட்சை நடத்தும் என்று நினைக்கிறேன். இருப்பினும் இறுதி போட்டியில் இந்தியாவை ஆஸ்திரேலியா தோற்கடிக்கும் என்று கருதுகிறேன். ஏனெனில் நடப்பு சாம்பியனான அவர்களுக்கு சொந்த மண் சூழ்நிலைகள் சாதகமாக கிடைத்துள்ளது”
“அதுவே கடந்த தொடரில் ஆஸ்திரேலியாவை வெற்றி பெறச் செய்தது. சொல்லப்போனால் கடந்த வருடம் துபாயில் ஐபிஎல் தொடரை முடித்த கையோடு களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி அங்குள்ள கால சூழ்நிலைகளில் தடுமாறுவார்கள் என்று நான் உட்பட பெரும்பாலானவர்கள் நினைத்தனர். ஆனால் அவர்கள் அங்கேயும் வெற்றி பெறும் வழியை கண்டுபிடித்தார்கள்” என்று கூறினார்.
அதேபோல் முரட்டுத்தனமான வீரர்களைக் கொண்ட இங்கிலாந்தையும் குறைத்து மதிப்பிடக்கூடாது என்று தெரிவிக்கும் ரிக்கி பாண்டிங் நம்பிக்கை நட்சத்திரம் பாபர் அசாம் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே பாகிஸ்தானுக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் பேசியது பின்வருமாறு. “வெள்ளை பந்து கிரிக்கெட்டில் இங்கிலாந்து மிகச்சிறந்த அணி என்று நான் நினைக்கிறேன். தற்போதைய நிலைமையில் இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய 3 அணிகளில் மட்டுமே உலகத்தரம் மற்றும் கிளாஸ் நிறைந்த மேட்ச் வின்னர் வீரர்கள் நிறைந்துள்ளார்கள். அதேபோல் பாபர் அசாம் ரன்கள் அடிக்கவில்லை என்றால் பாகிஸ்தானுக்கு வாய்ப்பு இருப்பதாக எனக்கு தோன்றவில்லை”
“சமீப காலங்களில் அவரை அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்த எனக்கு ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரில் விளையாடும் போது பார்க்கும் வாய்ப்பும் கிடைத்தது. குறிப்பாக டெஸ்ட் போட்டியை பொறுத்தவரை அவரின் பேட்டிங் திறமைக்கு வானமே எல்லை என்று ஏற்கனவே கூறியுள்ளேன். ஏனெனில் கடந்த 2 வருடங்களில் அவர் தன்னைத்தானே நிறைய முன்னேற்றிக் கொண்டு வருகிறார். பாகிஸ்தானின் தொடக்க வீரர்கள் மற்றும் ஆரம்பகட்ட புதிய பந்தை பயன்படுத்தும் வேகப்பந்து வீச்சாளர்களின் பங்கு தான் அந்த அணியின் வெற்றியை தீர்மானிக்கும். ஆனால் ஆஸ்திரேலியாவில் சுழல்பந்து வீச்சாளர்களுக்கு சாதகம் கிடைக்காது என்பதால் அவர்களது சுழல் பந்துவீச்சாளர்கள் இங்கே கடினத்தை உணர்வார்கள்” என்று கூறினார்.
இதுபோக நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் ஆகிய அணிகளும் எதிர்பாராத வகையில் அபாரமாக செயல்பட்டு இறுதிப்போட்டிக்குள் நுழைய வாய்ப்பு உள்ளதாகவும் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார். இதுபற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு. “இந்த கிரிக்கெட்டை நான் அதிகமாக பார்த்துள்ளேன். அந்த வகையில் நியூசிலாந்து அல்லது வெஸ்ட் இண்டீஸ் அல்லது பாகிஸ்தான். இந்த அணிகள் டி20 கிரிக்கெட்டில் மிகவும் விரும்பி விளையாடுகின்றன. மேலும் டி20 அவர்களுக்கு மிகவும் பொருத்தமாகவும் அமைகிறது. எனவே அவர்களில் யாராவது ஒருவர் இறுதிப்போட்டியில் விளையாடினாலும் நான் ஆச்சரியப்பட போவதில்லை” என்று கூறினார்.