இந்தியாவில் கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்று வந்த நடப்பு 17-ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது நேற்று முன்தினம் நடைபெற்ற மாபெரும் இறுதி போட்டியுடன் முடிவுக்கு வந்தது. இந்த தொடரில் ஷ்ரேயாஸ் ஐயரின் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது சன் ரைசர்ஸ் அணியை வீழ்த்தி மூன்றாவது முறையாக ஐ.பி.எல் தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.
இவ்வேளையில் அடுத்ததாக இந்திய அணியானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற உள்ள டி20 உலக கோப்பை தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடருகாக ஏற்கனவே ரோகித் சர்மா தலைமையில் 15 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து முதற்கட்டமாக இந்திய அணியை சேர்ந்த சில வீரர்கள் ஏற்கனவே நியூயார்க் சென்றடைந்து விட்டனர். இந்நிலையில் இந்த டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ள விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் நிச்சயம் உலக கோப்பை தொடரில் தாக்கத்தை ஏற்படுத்துவார் என அந்த அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய ரிக்கி பாண்டிங் கூறுகையில் : ரிஷப் பண்ட் இந்திய அணிக்கு மீண்டும் விளையாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. அவருடன் பணிபுரிந்த ஒவ்வொரு கணத்தையும் ரசித்துள்ளேன். இது குறிப்பிடத்தக்க கம்பேக் மேலும் அவர் டி20 உலகக்கோப்பை தொடரில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என நம்புகிறேன்.
உண்மையில் அவரது பேட்டிங் பற்றி யாருக்கும் கவலை இல்லை. ஏனெனில் அவர் எவ்வளவு நன்றாக ஆடுகிறார் என்பதும் அவரது பேட்டிங் ஆற்றல் என்ன என்பதும் அனைவருக்கும் தெரியும் என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க : பாதியில் அந்த பிரச்சனை வந்தாலும் சமாளிச்சு இந்தியா டி20 உ.கோ வெல்வாங்க.. இயன் மோர்கன் கணிப்பு
கடந்த ஆண்டு ஏற்பட்ட சாலை விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட் அதன் பின்னர் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு நடப்பு ஐபிஎல் தொடரில் களமிறங்கி 13 போட்டிகளில் விளையாடி 40 ரன்கள் சராசரியுடன் 446 ரன்கள் குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.