ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. சமீபத்தில் நியூசிலாந்திடம் 3 – 0 (3) என்ற கணக்கில் சொந்த மண்ணில் இந்தியா வரலாறு காணாத தோல்வியை சந்தித்தது. அதனால் இந்தத் தொடரில் இந்திய அணியை 3 – 1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா தோற்கடிக்கும் என்று ரிக்கி பாண்டிங் ஆரம்பத்திலேயே கணித்திருந்தார்.
ஆனால் முதல் போட்டியிலேயே பும்ரா தலைமையில் 295 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்த இந்தியா அவருடைய முகத்தில் கரியை பூசி முன்னிலை பெற்றது. ஆனால் இரண்டாவது போட்டியில் ரோஹித் தலைமையில் சுமாராக விளையாடிய இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா தோற்கடித்தது. அதனால் இந்தியாவுக்கு பதிலடி கொடுத்த அந்த அணி தொடரை சமன் செய்தது.
காபாவில் வெற்றி யாருக்கு:
அந்த நிலையில் மூன்றாவது போட்டி டிசம்பர் 14ஆம் தேதி காபா மைதானத்தில் துவங்கியது. 2021இல் அங்கு நடைபெற்ற போட்டியில் 32 வருடங்கள் கழித்து ஆஸ்திரேலிய அணியை இந்திய தோற்கடித்து வரலாறு படைத்தது. அந்த தன்னம்பிக்கையுடன் இந்தப் போட்டியிலும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா வெல்லுமா என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
ஆனால் கடந்த 40 வருடங்களில் காபா மைதானத்தில் ஆஸ்திரேலியா 2 முறை மட்டுமே தோற்றுள்ளதாக (இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளிடம்) ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார். மேலும் 3வது போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீச தீர்மானித்தது தவறான முடிவு என்றும் அவர் கூறியுள்ளார். அதனால் ஆஸ்திரேலியா கண்டிப்பாக வெல்லும் என்று தெரிவிக்கும் பாண்டிங் இது பற்றி ஐசிசி இணையத்தில் பேசியது பின்வருமாறு.
பாண்டிங் ஆதரவு:
“முதல் 2 போட்டிகளை பார்த்த பின் என்ன எதிர்பார்ப்பது என்பது எனக்குத் தெரியவில்லை. ஏனெனில் முதல் 2 போட்டிகளிலும் இரு அணிகளுக்கிடையே போட்டி சமமாக இருந்தது. ஆனால் இப்போதும் ஆஸ்திரேலியா வெல்லும் என்று நான் நினைக்கிறேன். காபாவில் டாஸ் வென்று முதல் 2 நாட்கள் நன்றாக பேட்டிங் செய்ய முயற்சிக்க வேண்டும். பின்னர் பிட்ச் பவுலர்களுக்கு சாதகமாக மாறும்”
இதையும் படிங்க: நியூஸிலாந்து 315 ரன்ஸ்.. வினோதமாக அவுட்டான வில்லியம்சன்.. ஜேக் காலிஸை முந்தி கெய்லை சமன் செய்த சௌதீ
“அப்படித்தான் அங்கே பொதுவாக அணிகள் விளையாடும். இருப்பினும் நான் அங்கே சமீபத்திய ஃபார்முக்கு ஆதரவு கொடுக்கிறேன். இந்தியா அங்கே நல்ல ரெகார்டை வைத்துள்ளது. ஆனால் வரலாற்றில் ஆஸ்திரேலியா அங்கே 40 வருடங்களில் 2 முறை மட்டுமே தோற்றுள்ளது. எனவே காபாவில் ஆஸ்திரேலியா இம்முறை வெல்லும் என்று நான் ஆதரவு தருகிறேன்” எனக் கூறினார்.