ஐசிசி 2026 டி20 உலகக்கோப்பை வரும் பிப்ரவரி 7ஆம் தேதி இந்தியா மற்றும் இலங்கையில் விளையாட உள்ளது. அந்தத் தொடரில் இந்திய அணி சூரியகுமார் யாதவ் தலைமையில் நடப்புச் சாம்பியனாக களமிறங்குகிறது. எனவே சொந்த மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி சிறப்பாக விளையாடி மீண்டும் கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை தக்க வைக்குமா? என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
அதற்கு கேப்டன் சூரியகுமார் யாதவ் ஃபார்முக்கு திரும்ப வேண்டியது அவசியமாகிறது. டி20 போட்டிகளில் எப்படி போட்டாலும் அடித்து நொறுக்கும் திறமையைக் கொண்ட அவர் இந்திய அணியின் நிறைய வெற்றிகளில் பங்காற்றியுள்ளார். சொல்லப்போனால் சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ஆட்டநாயகன் விருது பெற்ற இந்திய வீரர் என்ற சாதனையை அவர் விராட் கோலியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
சூரியகுமார் ஃபார்முக்கு வர:
அந்தளவுக்கு மேட்ச் வின்னராக அறியப்படும் சூரியகுமார் சில வருடங்களுக்கு முன் ஐசிசி டி20 தரவரிசையில் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக திகழ்ந்தார். அதனாலேயே கேப்டனாக முன்னேறிய அவரது தலைமையில் இந்தியா தொடர்ந்து நம்பர் ஒன் அணியாக ஜொலித்து வருகின்றது. ஆனால் கேப்டனாக பொறுப்பேற்றது முதல் சூரியகுமார் பேட்டிங்கில் பெரிதாக ரன்கள் குவிக்க திண்டாடி வருகிறார்.
குறிப்பாக 2025ஆம் ஆண்டில் வெறும் ஒரே ஒரு அரை சதை மட்டுமே அடித்த அவருடைய மோசமான ஃபார்ம் இந்திய அணிக்கு கவலையளிப்பதாக இருக்கிறது. இந்நிலையில் டி20 கிரிக்கெட்டில் மிகவும் திறமையான சூரியகுமார் தன்னுடைய ஃபார்ம் மற்றும் ரன்களை பற்றி கவலைப்படாமல் விளையாட வேண்டும் என்று ஆஸ்திரேலியா ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் அறிவுறுத்தியுள்ளார். அதைச் செய்தாலே ஃபார்ம் தாமாக வந்து விடும் என்று கூறும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.
பாண்டிங் அட்வைஸ்:
“சூர்யகுமாரின் சமீபத்திய ஃபார்ம் எனக்கு மிகப்பெரிய ஆச்சரியமளிக்கிறது. ஏனெனில் மிகவும் திடமான வீரரான அவர் இந்தியாவுக்காக டி20 கிரிக்கெட்டில் நீண்ட காலம் நிலையாக பங்காற்றி வருகிறார். இருப்பினும் அவரால் தன்னுடைய ஃபார்மை சீக்கிரம் கண்டறிய இயலவில்லை. அவர் சுவாரசியமான ஒருவர். தன்னுடைய சிறந்த ஆட்டத்தை விளையாடும் போது அவர் செட்டிலாக முதல் 8 – 10 பந்துகளை மட்டும் எடுத்துக் கொள்வார்”
இதையும் படிங்க: 10 சிக்ஸ் 15 பந்தில் 50.. ரிஷப் பண்ட்டின் 9 வருட சாதனையை உடைத்த சூர்யவன்சி.. மற்றொரு புதிய உலக சாதனை
“மற்ற பந்துகளை அதிரடியாக எதிர்கொள்வார். தன்னுடைய அனைத்து ஷாட்டுகளையும் விளையாடக்கூடிய அவர் கொஞ்சம் டிராவிஸ் ஹெட் போல தமக்குத்தாமே ஆதரவளிப்பார். அப்படி விளையாடும் போது அவர்கள் அவுட்டாவதைப் பற்றிய பயமின்றி விளையாடுவது போல் தெரியும். அதையே சூரியகுமாருக்கு நான் சொல்ல விரும்புகிறேன். அதாவது ரன்கள் மற்றும் அவுட்டாவதை பற்றி சிந்திக்காதீர்கள். உங்களை நம்பி உங்களுக்கு நீங்களே ஆதரவளியுங்கள். டி20 ஃபார்மெட்டில் உலகளவில் உங்களை நிரூபித்துள்ள நீங்கள் மீண்டும் நிரூபியுங்கள்” என்று கூறினார்.



