
ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இதுவரை 3 போட்டிகள் நிறைவு பெற்றுள்ளது. அதில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றது. அதனால் 1 – 1* என்ற கணக்கில் சமநிலையில் இருக்கும் இந்தத் தொடரின் முக்கியமான 4வது போட்டி டிசம்பர் 26ஆம் தேதி மேல்போர்ன் நகரில் துவங்குகிறது.
முன்னதாக இந்தத் தொடரில் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோருக்கு நிகராக சுப்மன் கில் சுமாராக விளையாடி இந்தியாவுக்கு பின்னடைவை கொடுத்து வருகிறார். இத்தனைக்கும் 2021 காபா போட்டியில் 91 ரன்கள் அடித்த அவர் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். ஆனால் இம்முறை கூடுதல் அனுபவத்தை கொண்டிருந்தும் அவர் தடுமாறுவது இந்திய அணிக்கு பின்னடைவை கொடுத்து வருகிறது.
சொல்லப்போனால் இந்தியாவுக்கு வெளியே அவர் 9 டெஸ்ட் போட்டிகளில் 23.80 என்ற சுமாரான சராசரியில் பேட்டிங் செய்து வருகிறார். இந்நிலையில் சுப்மன் கில் இந்தியா போல நினைத்துக் கொண்டு வெளிநாடுகளிலும் விளையாடுவதாக முன்னாள் ஜாம்பவான் வீரர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். குறிப்பாக வெளிநாடுகளில் அவுட்டாவதை பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் ரன்கள் மட்டும் அடிக்கலாம் என கில் நினைப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
எனவே ஆஸ்திரேலியாவில் கொஞ்சம் நேரம் கொடுத்து சூழ்நிலைகளை மதித்து விளையாடினால் அவரால் பெரிய ரன்கள் குவிக்க முடியும் என்று பாண்டிங் தெரிவித்துள்ளார். இது பற்றி ஐசிசி இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “சுப்மன் கில் விளையாடுவதை நானும் பார்க்க விரும்புவேன். அவர் நன்றாக பேட்டிங் செய்யும் போது உலகின் சிறந்தவராக தெரியும்”
“ஆனால் சொந்த மண்ணுக்கு வெளியே அவருடைய புள்ளிவிவரங்கள் நன்றாக இல்லை அல்லவா? அடிலெய்ட் மைதானத்தில் அவருடைய ஆட்டத்தை கொஞ்சம் பார்த்தேன். அங்கே அவர் தன்னுடைய ஆட்டத்தில் அதிகப்படியான மாற்றம் செய்தது போல் தெரிந்தது. ஸ்காட் போலண்ட் பவுலிங் செய்த போது அவர் தன்னுடைய பேட்டிங் ஃகார்டை மாற்றி ஆஃப் ஸ்டம்ப்பை க்ராஸ் செய்து விளையாடி அவுட்டானார்”
இதையும் படிங்க: குல்தீப், அக்சர் படேலுக்கு பதில் அஸ்வின் இடத்தில் மும்பை வீரர் சேர்க்கப்பட்டது ஏன்? கேப்டன் ரோஹித் பதில்
“ஆனால் இங்கே ஆஸ்திரேலியாவில் அவர் தன்னுடைய தடுப்பாட்ட டெக்னிக்கிற்கு கொஞ்சம் ஆதரவு கொடுக்க வேண்டும். தமக்குத்தாமே கொஞ்சம் ஆதரவு கொடுத்து விளையாடினால் இப்போதும் வேகமாக ரன்கள் அடிக்க முடியும். பொதுவாக சுப்மன் கில் அட்டாக் செய்யும் ஆட்டத்தை பின்பற்றி ரன்களை குவித்துள்ளார். ஆனால் இங்கே அவர் நாம் அவுட்டாக மாட்டோம் என்று நினைக்கிறார். மேலும் ரன்கள் அடிப்பதை பற்றி மட்டுமே நினைக்கிறார்” என்று கூறினார்.