
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தங்களது சொந்த மண்ணில் இந்தியா 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. அத்தொடரின் முதல் போட்டியில் வென்ற இந்தியாவை 2வது போட்டியில் தோற்கடித்த தென்னாப்பிரிக்கா பதிலடி கொடுத்தது. அதைத்தொடர்ந்து 3வது போட்டி டிசம்பர் 14ஆம் தேதி அழகான தரம்சாலா கிரிக்கெட் மைதானத்தில் இரவு 7:00 மணிக்கு துவங்கியது.
அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இந்திய அணியில் அக்சர் பட்டேல் நீக்கப்பட்டு குல்தீப் யாதவ் விளையாடுவதாக கேப்டன் சூரியகுமார் யாதவ் அறிவித்தார். அதே போல நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு பதில் இந்திய அணி ஹர்ஷித் ராணாவுக்கு வாய்ப்பளிப்பதாக அறிவித்தது ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
சமீப காலங்களாகவே 3 வகையான இந்திய அணியிலும் ராணாவுக்கு பயிற்சியாளர் கௌதம் கம்பீர் வாய்ப்புகளை அள்ளி வழங்கி வருகிறார். குறிப்பாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக 100 விக்கெட்டுகள் எடுத்த முதல் வீரராக சாதனை படித்த அர்ஷ்தீப் சிங்கிற்கு கூட தொடர்ச்சியாக வாய்ப்பு கிடைப்பதில்லை. ஆனால் ஹர்ஷித் ராணாவுக்கு பல எதிர்ப்புகள் மற்றும் விமர்சனங்களை தாண்டி வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.
அந்த வாய்ப்பில் இதுவரை ராணா பெரியளவில் அசத்தியதில்லை. அந்த சூழ்நிலையில் இப்போட்டியில் மீண்டும் அவரை கௌதம் கம்பீர் தேர்ந்தெடுத்தது ரசிகர்களிடையே அதிருப்தியை உண்டாக்கியுள்ளது. இந்நிலையில் இந்தப் போட்டியில் ஜஸ்ப்ரித் பும்ரா தனிப்பட்ட காரணங்களுக்காக இந்திய அணியிலிருந்து தற்காலிகமாக வெளியேறி வீட்டுக்குச் சென்றுள்ளதாக கேப்டன் சூரியகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
அதனாலேயே அவரால் இப்போட்டியில் மட்டும் விளையாட முடியவில்லை என்று சூரியகுமார் தெளிவுபடுத்தியுள்ளார். அதே போல கொஞ்சம் உடல்நிலை சரியில்லாததால் அக்சர் பட்டேலுக்கு ஓய்வு கொடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது பற்றி சூரியகுமார் யாதவ் பேசியது பின்வருமாறு. “இன்று நாங்கள் 2 மாற்றங்களை செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்”
இதையும் படிங்க: 3 ஆவது டி20 போட்டிக்கான இந்திய அணியில் ஏற்பட்டுள்ள 2 மாற்றங்கள் – டாஸிற்கு பிறகு பேசிய சூரியகுமார் யாதவ்
“அக்சர் பட்டேல் நன்றாக இல்லாததால் இப்போட்டியை தவற விடுகிறார். ஜஸ்ப்ரித் பும்ரா சொந்த காரணங்களுக்காக வீட்டுக்குச் சென்றுள்ளதால் இப்போட்டியில் விளையாடவில்லை. அவர்களுக்கு பதிலாக ஹர்ஷித் ராணா மற்றும் குல்தீப் யாதவ் அணிக்குள் வருகிறார்கள்” என்று கூறினார். அந்த வகையில் ஜஸ்ப்ரித் பும்ரா விலகியதுமே கௌதம் கம்பீர் தமக்கு பிடித்த ராணாவை தேர்ந்தெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.