
ஐபிஎல் 2022 தொடர் வரும் மார்ச் 26-ஆம் தேதி முதல் இந்தியாவின் மும்பை மற்றும் புனே ஆகிய நகரங்களில் கோலாகலமாக துவங்குகிறது. வரும் மே 29-ஆம் தேதி வரை 65 நாட்கள் நடைபெறும் இந்த தொடரில் பைனல் உட்பட 74 போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த வருடத்தின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனாக இருக்கும் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன.
புதிய கேப்டன் பப் டு பிளேஸிஸ்:
இந்த தொடரில் பஞ்சாப், கொல்கத்தா போன்ற கேப்டன் இல்லாத அணிகள் தங்களின் புதிய கேப்டன் யார் என்பதை சமீபத்தில் அறிவித்துள்ளன. அந்த வரிசையில் ரசிகர்களிடையே மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் யார் என்ற அறிவிப்பு நேற்று வெளியானது. அதன்படி ஐபிஎல் 2022 தொடரில் பெங்களூரு அணியை வழிநடத்தும் புதிய கேப்டனாக தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த நட்சத்திர அனுபவ வீரர் பப் டு பிளேஸிஸ் அறிவிக்கப்பட்டுள்ளார்.
தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த இவர் கடந்த 2019ஆம் ஆண்டு வாக்கில் அந்த அணிக்கு டெஸ்ட், ஒருநாள், டி20 என 3 வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் கேப்டன்ஷிப் செய்த அற்புதமான அனுபவத்தை கொண்டவர். குறிப்பாக கடந்த 2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த ஐசிசி உலக கோப்பை போன்ற மிகப்பெரிய தொடர்களில் தென் ஆப்பிரிக்காவை வழிநடத்திய பெருமைக்குரியவர். இப்படி தேவையான அளவுக்கு கேப்டன்ஷிப் அனுபவம் கொண்ட அவர் ஐபிஎல் தொடரில் இப்போது தான் முதல் முறையாக ஒரு அணிக்கு முழு நேர கேப்டனாக செயல்பட உள்ளார்.
தரமான டு பிளேஸிஸ்:
இதற்குமுன் கடந்த பல வருடங்களாக எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மிக முக்கிய வீரராக செயல்பட்டு வந்த அவர் அந்த அணியின் பல சரித்திர வெற்றிகளில் பங்காற்றியுள்ளார் என்றே கூறலாம். கடந்த வருடம் கூட 633 ரன்களை அடித்தார் அவர் இறுதிப்போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்று அந்த அணி 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்ல துருப்புச் சீட்டாக செயல்பட்டார். இப்படி நல்ல பார்மில் இருக்கும் அவரை சென்னை அணி நிர்வாகம் கோட்டைவிட்டதால் 7 கோடிக்கு வாங்கிய பெங்களூரு தற்போது தங்கள் அணியின் புதிய கேப்டனாக அறிவித்துள்ளது பலரின் பாராட்டுகளைப் பெற்றது.
அவர் பெங்களூர் அணியின் கேப்டனாக செயல்பட உள்ளதை பற்றி ஏபி டிவிலியர்ஸ் உள்ளிட்ட பெங்களூர் அணியின் பல முக்கிய நட்சத்திரங்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். அதேபோல் அவர் தலைமையில் பெங்களூர் அணிக்காக விளையாடி கோப்பையை வெல்ல மிகுந்த ஆவலுடன் காத்திருப்பதாக நட்சத்திர வீரர் மற்றும் முன்னாள் கேப்டன் விராட் கோலி தெரிவித்திருந்தார். ஆனால் பெரும்பாலான ரசிகர்கள் மீண்டும் விராட் கோலி கேப்டனாக வேண்டும் என அடம் பிடிக்கிறார்கள்.
அடம் பிடிக்கும் பெங்களூரு ரசிகர்கள்:
ஆம் தங்களின் புதிய கேப்டனை அறிவிப்பதற்காக பெங்களூருவில் உள்ள மியூசியம் சாலையில் நேற்று ஒரு சிறப்பு நிகழ்ச்சிக்கு அந்த அணி நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. அதில் ரசிகர்களுக்கு அனுமதி இலவசம் என அறிவிக்கப்பட்டிருந்ததால் அந்த நிகழ்ச்சி நடைபெற்ற ஹோட்டல் மட்டுமல்லாது அந்த தெரு முழுவதும் ஆயிரக்கணக்கான பெங்களூரு ரசிகர்கள் ஒன்று கூடியதால் அந்த இடமே திருவிழா போல் காட்சி அளித்தது. அப்போது அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நபர் ஆர்சிபி அணியின் அடுத்த கேப்டனாக யார் வர வேண்டும்? கிளென் மேக்ஸ்வெல் அடுத்த கேப்டனாக வர வேண்டுமா என ரசிகர்களிடம் மைக்கை பயன்படுத்தி கேள்வி எழுப்பினார்.
அதற்கு சாலையில் திரண்டிருந்த பெங்களூரு ரசிகர்கள் வேண்டாம் என கூறினார்கள். அடுத்து தினேஷ் கார்த்திக் அடுத்த கேப்டனாக வர வேண்டுமா என எழுப்பப்பட்ட கேள்விக்கும் வேண்டாம் என பதிலளித்து அவர்கள் தற்போது கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள டு பிளேஸிஸையும் வேண்டாம் என கோஷமிட்டனர். அத்துடன் விராட் கோலி தான் பெங்களூர் அணியின் அடுத்த கேப்டனாக வேண்டும் என கூறிய அவர்கள் “விராட்.. விராட்” என அந்தப் பகுதியே அதிரும் அளவுக்கு கூச்சலிட்டார்கள். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த 2008 முதல் இப்போது வரை பெங்களூர் அணிக்காக தொடர்ச்சியாக ஒரு சீசன் கூட தவற விடாமல் விளையாடி வரும் விராட் கோலி 2013 – 2021 வரை அந்த அணியின் கேப்டனாக செயல்பட்டார். இந்த காலகட்டங்களில் பேட்டிங்கில் மலைபோல ரன்களை குவித்து பெங்களூர் அணிக்காக முதல் முறையாக கோப்பையை வெல்ல வேண்டும் என முழு மூச்சுடன் போராடிய அவருக்கு இறுதிவரை ஏமாற்றமே மிஞ்சியது.
அதனால் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி வந்த அவர் கடந்த வருடம் பணிச்சுமை காரணமாக இந்திய கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய போது பெங்களூரு கேப்டன் பதவியில் இருந்தும் விலகினார். இருப்பினும் கடந்த 15 வருடங்களாக தங்கள் அணிக்காக விளையாடி வரும் அவர் மீது அந்த அணி ரசிகர்களிடம் தனி பாசமும் மரியாதையும் உள்ளது என்பதாலேயே அவரை மீண்டும் கேப்டனாக வரவேண்டும் என கேட்கிறார்கள்.