PBKS vs RCB : போராடிய ஜிதேஷ், அனலை பறக்க விட்ட சிராஜ் – விராட் கோலி கேப்டன்ஷிப்பில் மிரட்டிய ஆர்சிபி

RCB vs PBKS
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 20ஆம் தேதி மொகாலியில் நடைபெற்ற 27வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. அந்தப் போட்டியில் இம்பேக்ட் வீரராக களமிறங்கிய டு பிளேஸிஸ்க்கு பதிலாக 556 நாட்கள் கழித்து பெங்களூருவின் கேப்டனாக விராட் கோலி செயல்பட்ட நிலையில் ஷிகர் தவானுக்கு பதிலாக சாம் கரண் பஞ்சாப்பை வழி நடத்தினார். அந்த நிலையில் டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய பெங்களூருவுக்கு பவர் பிளே ஓவர்களில் அதிரடியாக செயல்பட்ட டு பிளேஸிஸ் – விராட் கோலி ஜோடி 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் கடந்து மிகச் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தது.

நேரம் செல்ல செல்ல நங்கூரமாக செயல்பட்டு 16.1 ஓவர்கள் வரை நிலைத்து நின்று அரை சதம் கடந்து அந்த ஜோடி 137 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த போது விராட் கோலி 5 பவுண்டரி 1 சிக்சருடன் 59 (47) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கிளம் மேக்ஸ்வெல் கோல்டன் டக் அவுட்டாகி ஏமாற்றிய நிலையில் மறுபுறம் அதிரடியாக செயல்பட்ட டு பிளேஸிஸ் 5 பவுண்டரி 5 சிக்சருடன் 84 (56) ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் தினேஷ் கார்த்திக் 7 (5) சபாஷ் அஹமத் 5* (3) என லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் குறைந்த ரன்கள் எடுத்த போதிலும் 20 ஓவர்களில் பெங்களூரு 174/4 ரன்கள் சேர்த்தது.

- Advertisement -

மாஸ் காட்டிய பெங்களூரு:
பஞ்சாப் சார்பில் அதிகபட்சமாக ஹர்ப்ரீத் ப்ரார் 2 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து 175 ரன்களை துரத்திய பஞ்சாப்புக்கு முதல் ஓவரிலேயே அதர்வா டைடை 4 (2) ரன்களில் முகமது சிராஜ் அவுட்டாக்கினார். உடனடியாக 3வது ஓவரில் ஸ்பின்னர் வணிந்து ஹசரங்காவை விராட் கோலி கொண்டு வந்ததில் முதல் பந்திலேயே மேத்தியூ ஷார்ட் 8 (7) ரன்களில் க்ளீன் போல்ட்டாகி சென்றார். அப்போது முதல் முறையாக இத்தொடரில் களமிறங்கிய இங்கிலாந்தின் நம்பிக்கை நட்சத்திரம் லியம் லிவிங்ஸ்டன் அடுத்த சில ஓவர்களில் சிராஜ் வேகத்தில் கேப்டன் விராட் கோலியின் சிறப்பான ரிவியூவால் 2 (4) ரன்களில் ஆட்டமிழந்தார்.

போதாகுறைக்கு அடுத்து வந்த ஹர்ப்ரீத் சிங் 13 (9) சாம் கரண் 10 (12) என முக்கிய வீரர்கள் பெங்களூருவின் தரமான ஃபீல்டிங்கால் ரன் அவுட்டாகி செல்ல மறுபுறம் நங்கூரமாக போராடிய இம்பேக்ட் வீரர் பிரப்சிம்ரன் சிங்கும் 3 பவுண்டரி 4 சிக்சருடன் 46 (30) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரிலேயே பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழக வீரர் சாருக்கான் 7 (5) ரன்களில் அவுட்டாகி பெரிய பின்னடைவை ஏற்படுத்தியதால் 106/7 என தடுமாறிய பஞ்சாப்பின் வெற்றி கேள்விக்குறியானது.

- Advertisement -

இருப்பினும் 7வது இடத்தில் களமிறங்கி அதிரடி காட்டிய விக்கெட் கீப்பர் ஜித்தேஷ் சர்மா கடைசி நேரத்தில் பெங்களூரு பவுலர்களை சிறப்பாக எதிர்கொண்டு வெற்றிக்கு போராடினார். அதனால் கடைசி 4 ஓவரில் பஞ்சாப் வெற்றிக்கு 37 ரன்கள் தேவைப்பட்ட போது அவருக்கு உறுதுணையாக நின்ற ஹர்ப்ரீத் ப்ராரை 13 (13) ரன்களில் காலி செய்த சிராஜ் அடுத்து வந்த நாதன் எலிசையும் 1 (2) ரன்னில் போல்ட்டாக்கினார்.

அதனால் கடைசி 2 ஓவரில் வெற்றிக்கு 26 ரன்கள் தேவைப்பட்ட போது 1 விக்கெட் மட்டுமே கைவசம் இருந்த நிலையில் கடுமையாக போராடிய ஜித்தேஷ் சர்மா 2 பவுண்டரி 3 சிக்சருடன் 41 (27) ரன்களில் ஆட்டமிழந்தார். அதனால் 18.2 ஓவரிலேயே 150 ரன்களுக்கு சுருட்டிய பெங்களூரு சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளை எடுத்தார்.

- Advertisement -

அதன் காரணமாக 24 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றி பெற்ற பெங்களூரு 6 போட்டிகளில் 3வது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேறியது. மறுபுறம் பந்து வீச்சில் ஆரம்பத்திலேயே விராட் கோலி – டு பிளேஸிஸ் ஜோடியை பிரிக்க தவறிய பஞ்சாப் பேட்டிங்கில் ஆரம்பத்தில் அதிரடியாக ரன்கள் எடுக்க தவறியது தோல்வியை கொடுத்தது.

இதையும் படிங்க: RCB vs PBKS : இன்னைக்கு கோலி கேப்டனாவும், நான் இம்பேக்ட் பிளேயராவும் ஆட காரணம் இதுதான் – டூபிளெஸ்ஸிஸ் அளித்த பதில்

ஆனால் நீண்ட நாட்கள் கழித்து பெங்களூருவை வழி நடத்திய விராட் கோலி பேட்டிங்கில் அரை சதமடித்து ஃபீல்டிங் செய்யும் போது பவுலர்களை கச்சிதமாக மாற்றி மாற்றி பயன்படுத்தியதுடன் டிஆர்எஸ் ரிவ்யூ எடுப்பதிலும் அபாரமாக செயல்பட்டார். அந்த வகையில் அவரது தலைமையில் பஞ்சாப்பை தெறிக்க விட்ட பெங்களூரு சிறப்பான வெற்றி பெற்றது அந்த அணி ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

Advertisement