மகளிர் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 2025 சீசன் பிப்ரவரி 14ஆம் தேதி வதோதரா நகரில் துவங்கியது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை குஜராத் ஜெயிண்ட்ஸ் எதிர்கொண்டது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு லாரா 6, தமிழக வீராங்கனை ஹேமலதா 4 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர்.
இருப்பினும் மறுபுறம் ஆஸ்திரேலிய வீராங்கனை பெத் மூனி அதிரடியாக விளையாடினார். அவருடன் அடுத்ததாக களமிறங்கிய கேப்டன் அஸ்லே கார்ட்னர் சரவெடியாக விளையாடி சிக்ஸர்களை பறக்க விட்டார். இந்த பக்கம் 8 பவுண்டரிகளை அடித்த மூனி அரை சதத்தை அடித்து 56 (42) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக வந்த டோட்டின் 25, சிம்ரன் ஷைக் 11 ரன்களில் அவுட்டானார்.
கார்ட்னர் அதிரடி:
ஆனால் மறுபுறம் பட்டையைக் கிளப்பிய கார்ட்னர் 3 பவுண்டரி 8 சிக்ஸர்களை பறக்க விட்டு மிரட்டலான 79* (37) ரன்கள் விளாசி சூப்பர் ஃபினிஷிங் செய்தார். இறுதியில் ஹர்லீன் டியோல் 9* (4) ரன்கள் எடுத்த உதவியுடன் குஜராத் 20 ஓவரில் 201/5 ரன்கள் எடுத்தது. பெங்களூருவுக்கு அதிகபட்சமாக ரேணுகா சிங் 2 விக்கெட்டுகளை எடுத்தார்.
அடுத்ததாக 202 ரன்களை துரத்திய பெங்களூருவுக்கு கேப்டன் ஸ்ம்ரிதி மந்தனா 9, டேனியல் வைட் 4 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர். அதனால் 14/2 என ஆரம்பத்திலேயே தடுமாறிய அந்த அணிக்கு அடுத்ததாக வந்த எலிஸ் பெரி அதிரடி காட்டினார். ஆனால் எதிர்ப்புறம் தடுமாறிய ராகவி பிஸ்த் 25 ரன்களில் அவுட்டானார். அடுத்ததாக வந்த ரிச்சா கோஸ் அவருக்கும் சேர்த்து அதிரடியாக விளையாடினார் என்றே சொல்லலாம்.
சாதனை சேசிங்:
மறுபுறம் அதிரடி காட்டிய எலிஸ் பெரி அரை சதத்தை அடித்து 57 (34) ரன்கள் குவித்து அவுட்டானார். ஆனால் இந்தப் பக்கம் தொடர்ந்து வெளுத்து வாங்கிய ரிச்சா 7 பவுண்டரி 4 சிக்சருடன் 23 பந்துகளில் 50 ரன்கள் தொட்டு 64* (27) ரன்கள் குவித்தார். அவருடன் கனிகா அகுஜா அதிரடியாக 30* (13) ரன்கள் விளாசியதால் 18.3 ஓவரில் 202/4 ரன்களை எடுத்த பெங்களூரு 6 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி பெற்றது.
இதையும் படிங்க: விராட் கோலியின் ஒளி தெரியாம முடிஞ்சதா எழுதாதீங்க.. அது அவரோட முடிவு.. பீட்டர்சன் ஆதரவு
குஜராத்துக்கு கேப்டன் அஸ்லே 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. அதனால் இத்தொடரை வெற்றிகரமாக துவக்கிய பெங்களூரு அணி மகளிர் ஐபிஎல் வரலாற்றில் 200க்கும் மேற்பட்ட இலக்கை வெற்றிகரமாக துரத்திய முதல் அணியாக மாபெரும் சாதனை படைத்தது. இதற்கு முன் 2024இல் குஜராத்துக்கு எதிராக மும்பை 191 ரன்களை துரத்தியதே முந்தைய சாதனை. இது அதிக ரன்கள் (201+202 என மொத்தம் 403) குவிக்கப்பட்ட மகளிர் ஐபிஎல் போட்டியாகவும் சாதனை படைத்தது. இதற்கு முன் 2023இல் குஜராத் – பெங்களூரு போட்டியில் 391 ரன்கள் அடிக்கப்பட்டதே முந்தைய சாதனை.



